Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / டெல்டா மாறுபாடு பரவும் நிலையிலும் இலங்கை ஜனாதிபதி பொது முடக்கங்களை எதிர்க்கின்றார்

டெல்டா மாறுபாடு பரவும் நிலையிலும் இலங்கை ஜனாதிபதி பொது முடக்கங்களை எதிர்க்கின்றார்

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் கோவிட்-19 மரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுகளையும் மற்றும் சுகாதார அமைப்பின் சீர்குலைவுகளையும் கையாள்வதற்காக பொது முடக்கம் செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் இடைவிடாது விடுக்கும் வேண்டுகோள்களை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

ஜூலை 5 அன்று, இராஜபக்ஷ, கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான பல பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், ஜூலை 28 அன்று, வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களையும் தங்கள் வேலைத் தளங்களுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். அதி வேகமாக தொற்றும் டெல்டா மாறுபாட்டால் கோவிட்-19 பரவல் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் கொஞ்ச நஞ்ச வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் நீக்குகின்றமை தொற்றுநோய் பரவலை ஊக்குவிக்கின்றது.

இலங்கையில், ஜூன் 28, 2021 திங்கள் கிழமை, கொழும்பில், கொரோனாவுக்கு எதிரான பொது தடுப்பூசி போடும் நடவடிக்கையின் போது, இலங்கை முதியவர்கள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின்-கோவிஷீல்ட்டின் – இரண்டாவது பாகத்தை ஏற்றிக்கொள்ள வரிசையில் நிற்கிறார்கள், (AP Photo/Eranga Jayawardena)

கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அவசரநிலை மீளாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு உரையாற்றிய, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ‘ஜனாதிபதி நாடு தழுவிய முடக்கத்தை விரும்பவில்லை,’ என அறிவித்தார். சில்வா, கோவிட்-19 வைரஸைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு செயலணியின் தலைவராவார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இராஜபக்ஷ, மருத்துவமனை நெரிசலை எவ்வாறு ‘தீர்ப்பது’ என்பது குறித்த ஆலோசனையை மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில், திருமணங்கள் மற்றும் மரணச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அரச விழாக்களை ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆறு நாட்களில் பதிவாகியுள்ள 656 மரணங்களுடன் தினசரி இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொது முடக்கம் மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான மருத்துவ நிபுணர்களின் அவசர வேண்டுகோளை இராஜபக்ஷ திட்டவட்டமாக நிராகரித்தார். ஜூலை 5 அன்று 3,268 ஆக இருந்த மொத்த மரண எண்ணிக்கை, நேற்று 5,620 ஐ எட்டியது. மேலும் மொத்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 342,079 ஆக உயர்ந்தது.

எவ்வாறாயினும், இந்த புள்ளிவிவரங்கள் உண்மையான சூழ்நிலையின் துல்லியமான பிரதிபலிப்பு அல்ல. ஏனென்றால் அரசாங்கம் வேண்டுமென்றே சோதனை மற்றும் தடமறிதலை மட்டுப்படுத்தியே கணக்கிடுகின்றது. மருத்துவ நிபுணர்கள் நாளொன்றுக்கு குறைந்தது 40,000 தினசரி பி.சி.ஆர். பரிசோதனைகளை கோருகையில், கடந்த மாதத்தில் சுகாதார அதிகாரிகளால் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மட்டுமே நடத்த முடிந்தது.
கொழும்பு மாவட்டத்தில் ஜூலை முதல் வாரத்தில், சோதனை செய்யப்பட்டவர்களில் 19.3 சதவிகிதம் பேர் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு நிபுணர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கடந்த வாரம் வெளிப்படுத்தினார். ஜூலை கடைசி வாரத்தில், இந்த எண்ணிக்கை 75 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று பதிவிட்ட ஒரு ட்விட்டர் செய்தியில், தீவு முழுவதிலுமிருந்து பகுப்பாய்வு செய்யப்பட்ட 94 எழுமாற்று பரிசோதனை மாதிரிகளில் 56 மாதிரிகள் கொடிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்தார்.

கடந்த வாரம், இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பத்மா குணரத்ன பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியதன் அவசரத்தை வலியுறுத்தினார். பொது முடக்கத்துக்காக தொடர்ந்து அழைப்பு விடுத்த பல மருத்துவ நிபுணர்களில் இவரும் ஒருவர்.

‘இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்டா மாறுபாட்டுடன் ஒரு ஆக்கிரமிப்பு தொடங்கியது என்று நாங்கள் சொன்னோம். இப்போது, இரண்டு வாரங்களின் பின்னர், அடுத்த இரண்டு வாரங்களில் என்ன நடக்கும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்,” என்று அவர் கூறினார். அதிக மக்கள்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்த மாறுபாடு வேகமாக பரவி வருகிறது எனத் தெரிவித்த அவர், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறும் என்று அவர் மேலும் எச்சரித்தார்.

இலங்கை மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. முந்தைய வாரத்தில் சுமார் 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனை, கடந்த வார இறுதியில் சுமார் 500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. மருத்துவமனையில் ஏனைய நோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுப்படுத்தப்பட்டு, அதிகரித்து வரும் கோவிட்-19 நோயாளர்களை சமாளிக்க மேலதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்றுநோயால் மரணித்தவர்களின் சடலங்கள் வண்டிகள் மீது வைக்கப்பட்டுள்ளன (Facebook)
களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு மருத்துவமனை நிரம்பிவழிகின்றது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களின் உடமைகளை சூழ வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கின்ற, மற்றும், இன்னும் பலர் புல்வெளிகளிலும், வார்டு நடைபாதை பகுதிகளிலும் படுத்திருக்கும் கொடூரமான நிலைமைகளை படங்கள் காட்டுகின்றன.

கொழும்பு தெற்கு மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய, சனிக்கிழமையன்று தெரண தொலைக்காட்சியில் பேசும் போது, குறித்த வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளின் பெருக்கெடுப்பை சமாளிக்கும் பொருட்டு, வழக்கமான அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைத்திருப்பதாக கூறினார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டபோது, ‘அப்படியெனில் கோவிட்-19 நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் இறந்துவிடுவார்கள்,’ என அவர் அப்பட்டமாக கூறினார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 பரவத் தொடங்கியதில் இருந்து இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 45,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 பேர் மரணித்துள்ளனர் என, சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா டெய்லி மிரர் பத்திரிகையிடம் கூறியுள்ளார். நிரம்பிவழியும் இந்த வைத்தியசாலை, பல பிள்ளைகளை மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

றாகம மருத்துவமனையின் நடைபாதையில் கொரோனா நோயாளிகள் நெரிசலாக கிடக்கின்றனர் (Facebook)
மருத்துவமனை சவக்கிடங்குகள் நிரம்பியுள்ளதால் சடலங்கள் வெளியில் குளீரூட்டிப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. கொழும்பு வடக்கு றாகம வைத்தியசாலை நிர்வாகம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஆஸ்பத்திரி வசதி தாங்கமுடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக கடந்த வாரம் தெரியப்படுத்தி இருந்தது. குளிர்சாதனமின்றி வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அழுகிப்போய், வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

களுத்துறை மற்றும் பாணந்துறை மருத்துவமனைகளில் சடலங்களை சேமித்து வைக்கும் வெளிப்புற குளிரூட்டிகள் நிரம்பியுள்ளன. நகர நிர்வாகம் தகனங்களை நாளொன்றுக்கு இரண்டு முதல் ஆறு வரை அதிகரித்துள்ள போதிலும் களுத்துறை மருத்துவமனையில் உள்ள சடலங்களை எரிக்கும் திறன் அதனிடம் இல்லை என்று பாணந்துறை மேயர் ஊடகங்களிடம் கூறினார். 24 மணி நேரமும் வேலை செய்யும் சில தகனக்கூடங்கள் உடைந்து போகலாம் என்ற கவலையும் எழுப்பப்படுகிறது.

ஊடகங்களுக்கு பேசிய பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் ஒரு இரவு முழுவதும் சுடுகாட்டுக்கு அருகில் கழித்ததாக தொலைபேசியில் புகார் செய்ததாக தெரிவித்தார். சடலங்கள் எரியும் வரை கண்காணிக்க வேண்டியிருப்பதால் பல சுகாதார ஆய்வாளர்களால் தொடர்பு தடமறிதலை மேற்கொள்ள முடியவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்டுவதற்கான ஒரு தீவிர முயற்சியில், மருத்துவமனைகளுக்குச் சென்று, சில பகுதிகளில் தகனங்களை ஏற்பாடு செய்து, கோவிட்-19 நோயாளிகளுக்கு அதிக வார்டுகளை ஒதுக்குமாறு மருத்துவமனை நிர்வாகங்களைக் கேட்கிறார்கள். சுகாதார அதிகாரிகளும் வீட்டிலேயே நடத்தப்படும் கோவிட்-19 சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். எவ்வாறாயினும், இதன் விளைவாக நோய்த்தொற்றுகள் மற்றும் மரணங்களும் அதிகமாக இருக்கும்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், மருத்துவமனைகளில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்தார். ஒரு ஊடகவியலாளர் அவரிடம் ‘வரும் நாட்களில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை குறித்து நேர்மையாக கருத்து தெரிவிக்கும்படி’ கேட்டார். ஐலண்ட் பத்திரிகையின்படி எந்த விரிவான தகவலையும் வழங்க மறுத்துவிட்ட அவர், ‘வரவிருக்கும் நாட்களில் தொற்றுநோயின் போக்கு குறித்து அவர் நேர்மையாகப் பேசினால் அவர் மீண்டும் ஊடகங்களுடன் பேச அனுமதிக்கப்பட மாட்டார்’ என்று பதிலளித்தார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களை தொற்றுநோய் குறித்து மக்களை ‘பீதிக்குள்ளாக்க வேண்டாம்’ என்று எச்சரித்ததோடு, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தன்னிடம் நேரடியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது உட்பட தொற்றுநோய்க்கு இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதிபலிப்பை ஆதரித்த பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், இப்போது பொது முடக்கம் செய்யுமாறு கொழும்புக்கு கபடத்தனமான வேண்டுகோள்களை விடுக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ‘பொதுமுடக்கத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும்’ உயிர்களைக் காப்பாற்றுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசியல் குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, மருத்துவமனை நெரிசலை ‘நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு’ குறைப்பதற்காக இரண்டு வாரங்கள் பூட்டப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. ராசமாணிக்கம், ‘சுகாதார நிபுணர்கள் பொது முடக்கத்தை பரிந்துரைத்தால், அரசாங்கம் கடைபிடிக்க இணங்க வேண்டும்’ என்று அறிவித்தார்.

இந்த கட்சிகள், இலட்சக்கணக்கான இலங்கையர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் இராஜபக்ஷ ஆட்சியின் குற்றவியல் அக்கறையின்மைக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன சீற்றத்தை சுரண்டிக்கொள்ளவும், திசைதிருப்பவும் முயல்கின்றன.

கடந்த ஆண்டு, தீவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, இந்த கட்சிகள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவால் அழைக்கப்பட்ட அனைத்து கட்சி மாநாட்டில் பங்கேற்று, தங்கள் முழு ஆதரவை வழங்கின.
ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும், பெரிய நிறுவனங்களை காப்பாற்றுவதன் பேரில், ஊதியம் மற்றும் தொழில் வெட்டுக்களை தினிப்பது மற்றும் வேலை நேரத்தை நீட்டிப்பது பற்றி முடிவு செய்வதற்காக தொழில் அமைச்சரால் கூட்டப்பட்ட கூட்டத்தில், பெரும்முதலாளிகளுடன் சேர்ந்து பங்கேற்றன.

கடந்த வார இறுதியில் சன்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு ஆசிரியர் உரை, மோசமடைந்து வரும் கொரோனா வைரஸ் பேரழிவை பற்றிய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் பதட்டமான கவலைகளை பிரதிபலித்தது: “சில ஹோட்டல்கள் பேண்ட் வாத்தியங்களுடன் குளிரூட்டிகளுடன் நிகழ்வுகளை நடத்தும் அதே வேளை, ஏனைய ஹோட்டல்கள் (தனியார் மருத்துவமனைகளால் இடைநிலை பராமரிப்பு மையங்களாக பயன்படுத்தப்படுகிறது) சேலைன் போத்தல்களை எடுத்துச் செல்லும் கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இது மேலே பேன்ட் வாத்தியங்கள் இசைக்கப்படும் போது, டைட்டானிக் கப்பலை மூழ்கடிப்பது போன்றது: இரண்டு நகரங்களின் கதை.
தவறான பாதுகாப்பு உணர்வை உருவாக்கியதற்காகவும், ‘வெகுஜன தடுப்பூசி திட்டம் தொற்றுநோயின் உச்சத்தை முடிவுக்கு கொண்டுவரும்’ என்று வலியுறுத்தியதற்காக, அந்த ஆசிரியர் உரை இராஜபக்ஷ நிர்வாகத்தை குற்றம் சாட்டியது. அரசாங்கம் ‘செயல்பட வேண்டும், தீர்க்கமாக செயல்பட வேண்டும், அதன் குறும்பார்வையில், துரிதமக பரவும் மாறுபாடு ஒரு பாரதூரமான புள்ளியை அடையாது, அது மீண்டும் உருவாகாது, என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,’ என அது முடித்தது.

இந்த கவலைகள் சமூக ஆரோக்கிய கருத்தாய்வுகளால் உயிரூட்டப்படவில்லை, மாறாக, முழு ஆளும் வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டிய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகள், ஒரு சமூக வெடிப்பை உருவாக்கும் என்று பீதியில் இருந்தே உருவாகின்றது.

‘பொருளாதாரத்தைத் திறந்து வைப்பதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு’ என்ற இராஜபக்ஷவின் வலியுறுத்தலானது, தொற்றுநோயின் பேரழிவுகரமான பொருளாதார தாக்கத்திற்கான அவரது பதிலிறுப்பாகும். ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத் துறை வருமானம் மற்றும் வெளிநாட்டு பண வருகையும் வீழச்சியடைந்திருப்பதோடு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு கடனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தையும் போலவே, இராஜபக்ஷ ஆட்சியும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உயிர்களை தியாகம் செய்து பெரும் வணிக இலாபங்களை அதிகரிக்கவும் சர்வதேச நிதி மூலதனத்திற்கான தனது அர்ப்பணிப்பை பராமரிக்கவும் செயல்படுகின்றது.

About குமரன்

Check Also

அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் ...