பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா?

ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை என்பதை தமிழ் மக்கள் கடந்த கால அனுபவங்களால் நன்றாகவே கற்றுக் கொண்டுள்ளனர். அடுத்த மாத அமர்வுக்கு முன்னர் எதற்காக இந்த அவசர சந்திப்புகள்? சர்வதேசத்தை எத்திப் பிழைக்க தமிழரைக் கட்டியணைக்கும் அதே நாடகம்தானா?

இலங்கை இப்போது இருமுனைப் போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவது உயிரியலுடன் சம்பந்தப்பட்ட கொரோனாப் பரவல். அடுத்தது, அரசியலுடன் தொடர்புடைய ஜெனிவா நெருக்கடி.

இவையிரண்டுமே நாட்டின் பொருளியலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது. இவை இரண்டுக்கும் ஏதோ ஒரு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குள் சென்றுவிடும்.

கடந்தாண்டு ஆரம்பத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த வேளையில் இலங்கை தன்னை வெகு ஆரோக்கியமான, முன்னெச்சரிக்கையான ஆட்சித்தரப்பாக உலகுக்குக் காட்டியது. உலக சுகாதார அமைப்பு அதனை நம்பி கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்தது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. இந்த வார வியாழன்வரை 5,700 பேரை கொரோனா பலியெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டு மிகக் குறைவான எண்ணிக்கையே வெளிப்படுத்தப்படுவதாக மருத்துவத்துறை அமைப்புகள் பகிரங்கமாக சாடியுள்ளன.

ஆகஸ்ட் 12ம் திகதியன்று மட்டும் 156 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதுவே ஒரு நாளின் ஆகக்கூடிய எண்ணிக்கையாகும். நாளொன்றுக்கு மூவாயிரம் வரையான தொற்றாளர் அடையாளம் காணப்படுகின்றனர். உடனடியாக ஊரடங்கு பிறப்பிக்கப்படாவிட்டால் சுமார் 1,200 மரணங்களை ஓரிரு நாட்களுக்குள் தடுக்க முடியாதென்று சமூக மருத்துவ அமைப்பின் தலைவரான பேராசிரியர் சுனேத் அகம்பொடி விடுத்துள்ள எச்சரிக்கையை ராணுவத் தரப்பு உதாசீனம் செய்துள்ளது.

புலிகளை ஒழித்த தங்களுக்கு கொரோனாவை எப்படி ஒழிப்பது என்பது தெரியுமென்ற ஆட்சித் தலைவர் கோதபாயவின் சவால் நகைப்புக்குள்ளாகி விட்டது. எறிகணைகளாலும் துப்பாக்கி ரவைகளாலும் கொரோனாவைக் கொன்றுவிட முடியுமென சவேந்திர சில்வா கனவு காண்கிறார். போர்க்குற்ற ராணுவ அதிகாரிகளையும், ராணுவ சீருடைகளையும் கண்டால் கொரோனா பயந்து அழிந்து விடுமா? அரசியலை உயிரியலுடன் இணைத்துப் பார்க்கும் விபரீதத்தால் அப்பாவி மக்கள் அல்லோலகல்லோலப்படுகின்றனர்.

தமிழர் தாயகபூமி கொரோனாவினால் பெருமளவு பாதிப்பு அடைந்து வருகிறது. சாதாரண மரணங்களையும் கொரோனாவாக்கி அவர்களின் இறுதிச் சடங்குகளும் மறுக்கப்படுகின்றது. இங்கு தடுப்பூசி பற்றாக்குறை.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தகுதியான தடுப்பூசிகளை வரவழைத்து, கட்டாய அடிப்படையில் அவைகளை ஏற்றத் தவறினால் பௌத்த பிக்கு ஒருவர் குறிப்பிட்டது போன்று பாண் தயாரிக்கும் போறணைகளையும் தகனக்கிரியை நிலையங்களாக மாற்ற வேண்டிய நிலைமை உருவாகலாம்.

கொரோனப் பரவல் மோசமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சியிடம் முக்கிய கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார். மருத்துவ ரீதியாக பரவி வரும் கொரோனாவின் பிறப்பிடம் எது என்ற தேவையில்லாத ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதனை அரசியலாக்க வேண்டாமென்பதே அவர் தெரிவித்த கருத்து. இப்போது எதற்கு ரி~p மூலம், நதி மூலம் என்ற இவரது ஆலோசனை அமெரிக்காவுக்குக் கூறப்பட்டதென்பது புரிந்தவர்களுக்குப் புரியும்.

அடுத்து, ஜெனிவா விவகாரத்தைப் பார்க்கலாம். வரப்போகும் எட்டுப் பத்து வாரங்கள் இதனையே மூலமாகக் கொண்டிருக்கப் போவதால், இன்றைய பத்தியில் இலங்கையின் இது தொடர்பான ஆரம்ப நகர்வுகளை மட்டும் பார்ப்போம்.

கொழும்பில் அமெரிக்கத் தூதுவர் தமது இல்லத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும், தமிழரசுக் கட்சியின் எம்.பி. சுமந்திரனையும் அழைத்து நிகழ்த்திய கலந்துரையாடல், நாடாளுமன்ற வளாகத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சுமந்திரன் எம்.பி சந்தித்து நடத்திய குறுகிய உரையாடல், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் நட்புறவு மையம் அதன் தலைவர் காசி ஆனந்தன் தலைமையில் ஏற்பாடு செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் -2 என்ற அமர்வு ஆகியவை ஜெனிவா சம்பந்தப்பட்டு இப்போது விமர்சிக்கப்படுபவை.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் -2 என்ற விடயம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாலும், இது தொடர்பாக புகலிடத் தமிழர் தரப்பிலிருந்து எதிரும் புதிருமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாலும் இது பற்றி இப்போது பார்வையை செலுத்த முடியாதுள்ளது. இது அடுத்த கட்டத்துக்கு வரும்போது இதனோடு பயணிப்பதே பொருத்தம்.

புவிசார் அரசியலைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் அரசியல் தீர்வுக்கு இந்தியப் பங்களிப்பைக் கோருபவர்கள் யாராக இருந்தாலும் 1976ன் தனிநாட்டுக் கோரிக்கையையும், விடுதலைப் புலிகளின் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோட்பாட்டையும் கைவிடாது செயற்படுவார்கள் என்றே வலி சுமக்கும் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவையின் 48வது அமர்வு, இலங்கை விவகாரத்தைப் பொறுத்தளவில் மிக முக்கியமானது என்பது பலராலும் உணரப்பட்டது. கடந்த வாரப் பத்தியில் இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46:1 இலக்கத் தீர்மானத்தின் பிரகாரம் செப்டம்பர் அமர்வின் முதல் நாளான 13ம் திகதியன்று பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லற் அம்மையார் இலங்கை தொடர்பான தமது பார்வையை வாய்மூல அறிக்கையாக வெளியிடுவார். இதற்கு இலங்கை அரசு பதிலளிப்பதற்காக, அறிக்கையின் பிரதி முற்கூட்டியே இலங்கைக்கு வழங்கப்படும்.

தற்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் தினேஸ் குணவர்த்தனவா, அல்லது புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்கப் போவதாகக் கூறப்படும் ஜி.எல்.பீரிஸா பதிலை வழங்குவார் என்பது தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகலாமென ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் முன்னோட்டமாகவே சுமந்திரனையும் பீரிஸையும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் சந்தித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமையை இன்னமும் தக்க வைத்திருக்கும் பசில் ராஜபக்ச, தற்போதைய ஆட்சியில் முக்கிய பணிக்கு வரும்போதே இந்த நகர்வுகள் எதிர்பார்க்கப்பட்டன.

இவரது விருப்பத்தின் பேரிலேயே அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு இடம்பெற்றதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இதுபற்றி எந்த விபரத்தையும் வெளியிடப் போவதில்லை. அமைச்சர் பீரிஸ் அல்லது சுமந்திரன் தெரிவித்தால் மட்டுமே சந்திப்பின் பின்னணியும், அதன் சூட்சுமமும் தெரிய வரும்.

ஒரு வருடத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட இந்த மாதத்தில் அப்பதவியை ஏற்கவுள்ளார். அமைச்சர் அந்தஸ்துடனான இந்தப் பதவி மிலிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்தின் பின்னரே இவர் பதவி ஏற்பதும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. மிலிந்த மொறகொட அமெரிக்க அரசியல் சார்பாளர் என்பது ரகசியமன்று.

ஆக, ஜி.எல். பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன், பசில் ராஜபக்ச, மிலிந்த மொறகொட ஆகியோரை மையப்படுத்தி ஆரம்பித்திருக்கும் அரசியல் சதுரங்கம் ஜெனிவாவுக்கான ஒரு முக்கிய முன்னோட்டம். 2002-2003 ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்குமிடையில் வெளிநாடுகளில் இடம்பெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்க தூதுக்குழுவின் பிரதிநிதிகளாக அப்போது அமைச்சர்களாகவிருந்த பீரிசும், மிலிந்த மொறகொடவும் இப்பொழுது மீண்டும் தமிழர் விவகாரத்தில் களமிறக்கப்படுகிறார்கள் என்றால்…. இரண்டும் இரண்டும் நான்கு என்ற எண்கணிதம் எவருக்கும் புரியாததல்ல.

சுமந்திரனின் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் வகிபாகம் பற்றி தமிழர் தரப்பில் நம்பிக்கையைவிட நம்பிக்கையின்மையே அதிகமுண்டு. நல்லாட்சி அரசாங்கத்தின் நாலரை ஆண்டில் தமிழரின் அரசியல் தீர்வுக்கு எதனையுமே பெற்றுக் கொடுக்காது ஆட்சித் தரப்புக்கு முண்டு கொடுப்பவராக அவர் இருந்ததை தமிழர்கள் மறந்துவிடவில்லை. இப்போதும் அதே பாணியில் ஜெனிவாவில் இலங்கையைப் பிணை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைப் பிரதிநிதியாக தமிழர் தரப்பிலிருந்து – ஒரேயொருவராக, ஒற்றையராகக் கலந்து கொள்வது ஏனென்ற கேள்வி எழுகிறது. தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாகவா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாகவா இவர் பங்குபற்றுகிறார் என்ற கேள்வியும் கூட்டமைப்புக்குள்ளேயே எழும்பியுள்ளது.

சர்வதேச அரங்கில் சிங்கள தேசம் நெருக்கடிகளைச் சந்திக்கும் நேரங்களில் இவரே அவர்களுக்குத் தோன்றாத் துணையாகி விடுவார். இப்போதும் அதுவே ஆரம்பமாகி விட்டதாக மற்றைய தமிழ்க் கட்சிகள் விசனம் கூறுகின்றன.

மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களை செயலற்றுப் போகச் செய்யவும், சர்வதேச நெருக்கடிகளை ஓரந்தள்ளவும் தமிழர் தரப்புடன் பேச்சுகளை நடத்தி எத்திப் பிழைக்கும் அரசியலை சிங்கள ஆட்சி பீடங்கள் ஒழுங்காகவே மேற்கொண்டு வருகின்றன.

இது ஜெனிவா கால வழமையான அரசியல் என்பதை உணர்ந்து, சிங்கள அரசின் சதிப் பின்னல் வலையில் தமிழர் தரப்பு சிக்குண்டு போகும் அபாயம் கண்முன்னால் தெரிகிறது. ஒருவர் கையில் மட்டும் தமிழரின் தலைவிதி அடக்கப்படுமானால், சர்வதேசத்தின் முன்னால் தமிழர்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியற்றவர்களாக மாற்றப்படும் அபாயமுண்டு.

பனங்காட்டான்