இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.
கேள்வி?
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா?
பதில்!
ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய தனித்துவத்தை இழந்து விட்டது. காரணம் புறமயமாகப் பார்த்தால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் எண்ணப் பாங்குகளை அல்லது
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் என்றதற்கு அப்பால் இருக்கக் கூடிய அம்சங்களில் கூட இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தோடு ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்கோ அல்லது அதனுடைய நீட்சியை நிலை நாட்டுவதற்கோ அரசுகள் என்ற அடிப்படையில் அது இயங்கவில்லை என்பது தான் என்னுடைய அவதானிப்பு.
திருகோணமலைத் துறைமுகம்
குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் சார்ந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் படுகின்ற போது, இந்தியாவிற்கு இருந்த மிகப் பிரதானமான இலக்கு அல்லது நோக்கம் என்பது காலாவதியாகும் ஒரு சூழலையே அவதானிக்க முடிகின்றது. மிகப் பிந்திய ஒரு விடயம். அமெரிக்காவோடு இலங்கை உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தகவல்களை வெளியிட்டிருக்கின்றது. திருகோணமலைத் துறைமுகம் உள்ளடக்கிய 33ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி ஐந்து வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் உள்ள முதலீட்டில் இந்தியா ஒரு பங்கை எடுக்கும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை அவதானிக்கின்ற போது, புறமயமாக இந்திய – இலங்கை உடன்படிக்கை தன்னுடைய தனித்துவத்தை இழந்து செயற்படுகிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தம்
இரண்டாவது சர்வதேச நியமங்களுக்குள், ஒரு உடன்படிக்கையின் காலப்பகுதிக்குப் பின்னர் அது தொடர்பான இரண்டு அரசுகளும் அது பற்றிய ஒரு உரையாடலை, அதன் நீட்சிக்கான திட்டங்களுடன் அது பற்றிய பரிமாற்றங்களை ஆராய்ந்திருக்க வேண்டும். அண்மையில் ரஸ்ய ஜனாதிபதி புதினும் சீன ஜனாதிபதி ஜிங் பிங்கும் தங்களின் இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் நீட்சி பெறுவதற்கான ஒரு உரையாடலை நடத்தியிருந்தனர். அதே போல சீனா வடகொரியா தலைவரோடு அவ்வாறான பாதுகாப்புச் சார்ந்து ஒரு உரையாடலை நிகழ்த்தியிருந்தது. இவ்வாறு இலங்கை இந்தியா சார்ந்து இந்த இந்திய இலங்கை உடன்படிக்கையினுடைய நீட்சியை ஏற்படுத்தவில்லை.
பெருமளவிற்கு அதன் உள்ளார்ந்த அடிப்படையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டிருந்த அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எந்த நியமங்களையும் பெருமளவு அது பின்பற்ற முயற்சிக்கவில்லை. பொலிஸ் அதிகாரத்தை வழங்க வில்லை. காணி அதிகாரத்தை வழங்கவில்லை. அதைவிட சுகாதாரம் சார்ந்து, வேலை வாய்ப்பு சார்ந்து, கல்வி சார்ந்து நிறைய விடயங்களில் மத்திய அரசின் தலையீடுகள் அந்த உடன்படிக்கையில் உள்ளன.
அதே போன்று தற்காலிக உடன்படிக்கை என்று அந்தக் காலப் பகுதியில் வரையப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 2007ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாகப் பின்வாங்கப்பட்ட போது அதனுடைய எந்தவொரு கருத்துக்களையும் இலங்கை சார்ந்து இந்தியா முன்வைக்கவில்லை. ஊடகங்களில் ஊடகவியலாளர்கள், புலமை யாளர்களின் உரையாடல் என்பது வேறு. அரசு மட்டத்திலான பரிமாற்றங்கள் என்பது வேறு. இது அரச மட்டங்களால் கையாளப்பட வேண்டிய ஒரு பொறிமுறை என்று நான் கருதுகிறேன். அந்த அடிப்படையிலும் இந்த உடன்படிக்கை தன்னுடைய தனித்து வத்தை இழந்திருக்கின்றது.
அதேபோன்று தற்போது இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்த போது, நரேந்திர மோடியின் முன்னிலையிலேயே பெருமளவிற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடை முறைப்படுத்த முடியாது என்ற செய்தியை ஊடகங்கள் சார்ந்து அந்த உரையாடலில் முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அது பற்றி கூர்மை அது தொடர்பான கட்டுரை ஒன்றை அந்தக் காலப்பகுதியில் வெளியிட்டிருந்தது.
இவ்வாறான சில விடயங்களைப் பார்க்கின்ற போது, உடன் படிக்கையானது அதன் தனித்துவத்தை இழந்திருக்கின்றது. அதன் வலிமை அற்றுப் போயிருக்கின்றது. அதற்கான புறமயமான சூழலும், அகமயமான சூழலும் மிகப் பலவீனமான ஒரு கட்டத்திற்குள்ளே தள்ளப் பட்டுள்ளது.
கேள்வி?
இந்த உடன்படிக்கையில் இந்தியாவின் நலன்கள் தான் அதிகளவில் இருந்திருக்கின்றது. அப்படி இருந்தும் கூட இந்த உடன்படிக்கையை இந்தியாவினால் உயிர்ப்புடன் பாதுகாக்க முடியாமைக்குக் காரணம் என்ன?
பதில்!
குறிப்பாக இலங்கை இந்திய உடன்படிக்கை செய்யப்படுகின்ற காலப் பகுதி பனிப் போருக்கான காலப்பகுதி. சோவியத் யூனியனோடும் இந்தியா ஒரு நெருக்கமான உறவை வைத்திருந்தது. 87இல் மிக்சேல் கொர்பச்சோவ் சோவியத் யூனியனின் ஜனாதிபதியாக வந்த போது பெரஸ்ரோய்க்கா, கிளாஸ்நோத் என்ற இரண்டையும் முன்வைத்து ஒரு அரசியலமைப்பை ஏற்படுத்தி சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கு வித்திட்டார்.
இதன் அடிப்படையில் இந்தியா தனது கொள்கை அமைப்பு முறையில் ஒரு மாற்றத்தைச் செய்து, அதை மேற்கு நாடுகளோடு குறிப்பாக அமெரிக்காவோடு இசைவான ஒரு உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை பனிப்போருக்குப் பிந்திய காலப்பகுதியில் நாங்கள் அவதானிக்க முடிகின்றது. பனிப்போருக்கு பிந்தைய காலப்பகுதியில் இந்தியாவின் ஆட்சியாளர்கள் அணுகுமுறைகளைப் பார்த்தால், அது நெருக்கடி மிக்கதாகவும், ஒரு மாறுதலை நோக்கிய நகர்வாகவும் அல்லது ஒரு பலவீனமான தன்மையை இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்துகின்ற ஒரு நிலையையும் அவதானிக்க முடியும்.
ராஜீவ் காந்தியின் படுகொலை என்பது அரசியல் ரீதியான தலைமைத்துவம் சார்ந்திருக்கின்ற தன்மையில் ஒரு நெருக்கடியை அந்தத் தேசத்திற்கு ஏற்படுத்தி யிருந்தது. அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் இந்தியாவின் ஆணுகு முறைகளைப் பார்த்தால், வாஜ்பாயாக இருக்கலாம், அல்லது நரசிம்மராவாக இருக்கலாம் அல்லது மன்மோகன் சிங்காக இருக்கலாம் அவர்கள் பெருமளவு இந்திய பொருளாதார ரீதியான மறுசீரமைப்பும் உலகத்தின் மத்தியில் இந்தியாவை ஒரு வல்லரசாக நகர்த்த வேண்டும் என்ற எண்ணப்பாங்கையும் முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கின்ற அந்தச் சந்தர்ப்பம் தான் பெருமளவு அவர்களை ஒரு நெருக்கடி மிக்க சூழலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. ஒருவகையில் சீனர்களுடைய செல்வாக்கும் வளர்ந்திருந்தது. சீனர்கள் பொருளாதார ரீதியாக போட்டித் தன்மை யுடையவர்களாக மாறியிருந்தார்கள்.
உலகளாவிய ரீதியில் அமெரிக்காவோடும், சோவியத் யூனியன் அல்லது ரஸ்யாவை விட்டு விலகி முழுமையாக அமெரிக்காவோடு செயற்படும் வகையில், இந்தியா நகருகின்ற போது ஒரு நெருக்கடியுயம் பலவீனமும் – அதாவது ஜவகர்லால் நேருவினுடைய காலப்பகுதியிலிருந்து இந்திய வெளியுறவு கொள்கைக்கு சார்ந்த அல்லது இந்தியாவினுடைய பொது நிலை சார்ந்திருக்கக் கூடிய கொள்கைகளைப் பார்த்தால் அனைத்திலுமே பெருமளவு ஒரு நெருக்கடி மிக்கதொரு கொள்கை சார்ந்ததாகவே இருக்கின்றது.
பிராந்திய அடிப்படையிலான அரசுகளோடு அது வைத்திருந்த உறவு என்பது அதனுடைய பலவீனத்திற்கான அடிப்படைக் காரணம். உண்மையில் தன்னுடைய நலன் என்பது மிகமிக முக்கியமானது. தென்பகுதியினுடைய இருப்புத் தான் இந்தியாவின் இருப்பும். வடக்கு முழுவதும் ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் பாகிஸ்தான் என்று இந்தியாவின் நலன்களுக்கு விரோதமான சக்திகள் இருக்கின்ற போது, தென்புலத்தினுடைய பிரதேசத்தையும் இந்து சமுத்திரத்தையும் பலப்படுத்தி இந்தியா நகர வேண்டிய ஒரு சூழ்நிலை என்பது தலைமைத்துவத்தின் கொள்கை வகுப்பாளர்களின் மனோ நிலையில் இருந்த பலவீனங்களாகவே நான் பார்க்க விரும்புகின்றேன்.
அதேபோல இன்னுமொரு கட்டத்திற்குள்ளும் உலகத்தினுடைய நகர்ச்சிகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக வலுவான நாடுகள் வர்த்தக ரீதியான உபாயங்களுக்குள் தங்களை முழுமைப்படுத்த முயற்சிக்கின்ற போது, அரசியல் ரீதியான அதிகாரம் என்பது கைவிட்டு அந்த நலன்கள் முழுக்க முழுக்க வர்த்தகத்திற்கும், சந்தைக்கும் குவிக்கப்படுகின்ற ஒரு சூழல் ஏற்படுகின்ற போது, அதில் தலைமை தாங்கக் கூடிய சக்தி தான் தன்னுடைய இராணுவ ரீதியிலான, அரசியல் ரீதியிலான இலக்குகளை நிர்ணயிக்க முடியும் என்கின்ற ஒரு செய்தியும் இதற்கூடாகக் கிடைக்கின்ற போது, இந்தியாவின் பலவீனமான பக்கங்களை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நீங்கள் கேள்வி கேட்டது போல் ஒரு இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது என்ற முடிவைத்தான் முன்வைக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி?
இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாகத்தான் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டதாகக் கூறப்பட்டது. தமிழ் மக்கள் சார்பாக இந்தியா தான் இதில் கைச்சாத் திட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த வகையில் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றதல்லவா?
பதில்!
நிச்சயமாக உண்டு. அதைத் தான் மீள மீள இலங்கைத் தமிழர்கள் கருதுகிறார்கள். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில் இந்தியாவோடு அல்லது இலங்கை அரசியல் சக்திகள் இந்தியாவோடு செயல்படுகின்ற விதத்தை மீள மீளப் பார்க்கின்ற போது, நீங்கள் குறிப்பிட்ட அத்தகைய பொறுப்பு உண்மையில் இந்தியாவிற்குத் தான் உள்ளது. தமிழ் மக்கள் சார்பில் இந்தியா ஒரு உடன்படிக்கையில் ஒப்பமிட்டது. அதனை தொடர்ச்சியாகப் பேணுதல், நிலைக்க வைத்திருத்தல் என்ற அடிப்படையில் அது இயங்கவில்லை.
ஒரு உதாரணம் காஷ்மீரை இந்தியா எவ்வாறு கையாண்டது என்று வைத்துக் கொண்டே நாங்கள் இந்தியாவினுடைய பொறுப்பு வாய்ந்த பணிகளை ஆற்றுகின்றதா என்றதொரு முடிவை எடுக்க முடியும். அது ஆந்திராவிற்குள்ளேயும் இருந்தது. தெலுங்கானா விடுதலைப் போராட்டம் என்ற ஒரு நீண்ட நெருக்கீட்டிற்குள் உட்படுத்தப் பட்ட ஒன்றாக இருந்தது. அதே போல காஷ்மீர், சீக்கியர்களுடைய காலிஸ்தான் போன்ற எல்லாவற்றையும் தொகுத்து வைத்துக் கொண்டே ஈழத் தமிழர்கள் இப்போது இந்தியா சார்ந்த பார்வையைச் செலுத்த வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள். அதுவே இங்கு உண்மையான விடயம்.
எங்கேயோ இருக்கின்ற பாலஸ்தீனத்திற்கு அவர்கள் கை கொடுக்கின்றார்கள். உதவுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதேவேளை தன்னுடைய நாட்டின் நலனுக்கு உட்படுத்தப்பட்ட பிராந்தியங்களிலும் அவர்களுடைய அணுகு முறைகள் ஒரு நெருடலைத் தருகின்றது.