பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய சட்டங்களின் படி விக்டோரியாவில் street-based அடிப்படையிலான பாலியல் தொழில் ஒரு குற்றமாகும். ஆனால் பதிவு செய்யப்பட்ட பாலியல்விடுதிகள் மற்றும் escort agencies அல்லது தனியார் பாலியல் தொழிலாளியாக சேவைகளை வழங்குவது போன்றவை கடுமையான நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் இது மிகவும் குழப்பகரமான மற்றும் கடுமையான நடைமுறை எனவும், ஏனைய பணியாளர்களைப்போலவே பாலியல் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமெனவும், ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்திவந்த பின்னணியில் அரசு இம்மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.
இந்நிலையில் பாலியல் தொழில் பாதுகாப்பானது என்பதை அரசு கொண்டுவரும் சட்டமாற்றம் உறுதிசெய்யும் என விக்டோரிய நுகர்வோர் விவகார அமைச்சர் Melissa Horne தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விக்டோரியரும் தனது தொழிலில் பாதுகாப்பாக உணர்வதற்கான உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் தொழில் குற்றமல்ல என்ற சட்டமாற்றத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த 1995ம் ஆண்டு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal