நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சினை உள்ளவர்களுக்கு கரோனா 3வது டோஸ்

நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு உடையவர்களுக்கு மூன்றாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் கரோனா முதல் அலையின் போது மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அன்றாடம் ஒரு லட்சம் பேருக்கும் குறையாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையின் போது ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் சற்றே பாதிப்பு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருந்தது.

இந்நிலையில், மூன்றாவது அலை அங்கே வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெரும்பாலானோருக்கு டெல்டா வேரியன்ட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மக்களுக்கு மூன்றாவதாக கரோனா பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து அந்நாட்டு அரசு தீவிரவமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமையன்று பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (FDA) இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடு உள்ளவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், முதியவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்த முன்னுரிமை வழங்கப்படும் என எஃப்டிஏ ஆணையர் ஜேனர் வுட்காக் தெரிவித்துள்ளார். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சாதாரண மக்கள் அச்சப்படத் தேவையில்லை, அவர்கள் மூன்றாவது டோஸுக்கு அவசரம் காட்ட வேண்டாம். அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள் என்றும் வுட்காக் தெரிவித்தார்.

ஆனால், இது அதிகாரபூர்வமாக செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, 10 லட்சம் அமெரிக்கர்கள் வரை மூன்றாவது டோஸ் பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவன கோரிக்கை நிராகரிப்பு:

முன்னதாக இம்மாத தொடக்கத்தில், வளர்ந்த நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்துவதை தற்காலிகமாக தள்ளிப்போட வேண்டும். தடுப்பூசியைப் பொறுத்தவரை மிகக் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள அபரிமிதான மருந்துகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கையை ஜெர்மனி, பிரான்ஸ் அரசுகள் புறந்தள்ளின. அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தான் அமெரிக்கா தறோது மூன்றாவது டோஸை கையில் எடுத்துள்ளது.

அமெரிக்காவின் கரோனா தடுப்பு ஆலோசகரான மருத்துவர் ஆண்டனி ஃபாசி என்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இப்போதைக்கு நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சினை உள்ளவர்களைத் தவிர யாருக்கும் கரோனா பூஸ்டர் டோஸ் வழங்குவதாக இல்லை என்று தெரிவித்தார்.