புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.
மேலும் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இது பிரியா குடும்பத்திற்கு சாதகமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டதுடன், தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பினைத் திறந்திருந்தது.
மறுபுறத்தில் பிரியாவும் நடேசும் படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் பிறந்த தருணிகாவும் சட்டவிரோத குடியேறியாகவே பார்க்கப்படுவதாகவும், அவர் சார்பில் 2019ம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்ட பாதுகாப்பு விண்ணப்பம் செல்லுபடியற்றது(குடிவரவு அமைச்சர் விதிவிலக்கு அளிக்காதபட்சத்தில்) எனவும் பெடரல் நீதிமன்றம் மற்றுமொரு தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து குறித்த தீர்ப்பிற்கெதிராக உயர்நீதிமன்றம் செல்லவேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தநிலையில், தருணிகாவின் சட்டத்தரணி இதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்.
ஆனால் இந்தக்கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிமன்றின் இந்தமுடிவு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், உள்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கமுடியுமெனவும் இதற்காக தாம் தொடர்ந்து போராடப்போவதாகவும் பிரியா-நடேஸ் குடும்பத்தின் விடுதலைக்காக போராடிவரும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் குடிவரவு அமைச்சர் Alex Hawke-இடம் கேட்டபோது, இக்குடும்பம் தொடர்பிலான வேறுபல சட்டமுன்னெடுப்புகள் தொடர்வதால் தற்போது எதுவும்கூறமுடியாது என மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் பிரியா-நடேஸ் குடும்பம், சிறுமி தருணிகாவின் மருத்துவசிகிச்சைகளுக்காக கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தற்போதைக்கு தடுப்புமுகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.