காலத்தால் கனிந்த கலைஞன்!

அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்குமான இடைப்பட்ட புள்ளியிலிருந்துதான் தனது உரையாடலை ப்ரகாஷ் தொடங்குவார். அன்றைக்கு தஞ்சைப் பெரிய கோயில் புல்வெளியில் காதர்பாட்சாவுடைய ஆர்மோனிய வாசிப்பில் மயங்கிப்போன வெள்ளைக்காரர்கள், அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டார்கள் என்று பேச ஆரம்பித்தார். அன்றைய சாயுங்காலப் பேச்சு இரவு வரைக்கும் நீண்டு ஆர்மோனியம், ஆர்மோனிய இசைக் கலைஞர்கள் என்று ஓடிக்கொண்டிருந்தது. ப்ரகாஷ் ஓர் உரையாடல் கலைஞன்.

எண்பதுகளின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்துக்குப் பிற்பாடு, தமிழ் இலக்கியப் போக்குகளில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்துகொள்ள அன்றைக்கு தஞ்சை இளைஞர்களுக்கு ப்ரகாஷ் ஒரு வரமாக இருந்தார். கலைஞர்களை ஈர்க்கும் விஷயங்களெல்லாம் அவரிடம் இருந்தன. எனவேதான், அந்தக் காலகட்டத்தின் எழுத்துலக ஜாம்பவான்கள் அவரைத் தேடிவந்தனர். எதைப் பற்றி வேண்டுமானாலும் சொல்வதற்கு அவரிடம் செய்திகள் இருந்தன. மரச் சட்டகத்துக்குள்ளிருக்கும் பழங்காலத்துப் பெண்டுலக் கடிகாரங்கள் பற்றி, அதற்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்குமா என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்குப் பேசுவார். இருபதாம் நூற்றாண்டின் தகவல் களஞ்சியமாக விளங்கினார் என்று அசோகமித்திரன் ப்ரகாஷைக் குறிப்பிடுகிறார்.

இலக்கியப் பரிச்சயமும் தத்துவப் பரிச்சயமும் அவரது கதைசொல்லலில் தனித்துவமாக வெளிப்பட்டன. அதனாலேயே நாவல் என்ற வடிவம் பெருவளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் அவரது ‘கள்ளம்’, ‘கரமுண்டார் வூடு’, ‘மீனின் சிறகுகள்’ போன்ற நாவல்கள் இன்றும் வாசகர்களால் கொண்டாடப்படும் படைப்புகளாக உள்ளன. அவருக்கு மொழிபெயர்ப்பாளர் முகமும் உண்டு. மலையாளம் நன்கு அறிந்த அவர், மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிறைய கொண்டுவந்தார். ப்ரகாஷ் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்பானது ‘ஞாபகார்த்தம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த நூலில் மலையாளம், இந்தி, வங்கம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளிலிருந்து தஞ்சை ப்ரகாஷ் நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் என்ற குறிப்பு உள்ளது!

கடிதங்களுக்காகவே ‘சாளரம்’ இதழை நடத்திக் கடித இலக்கியத்திற்கு வலுசேர்த்தார். ‘யாருமில்லாத பிரதேசத்தில்/ என்ன நடந்து கொண்டிருக்கிறது?/ எல்லாம்’ என்ற நகுலனின் கவிதை வரிகள் மாதிரியே ப்ரகாஷ் தனது மனவுலகத்தில் இலக்கியத்தின் எல்லா சஞ்சாரங்களையும் நடத்திக்கொண்டிருந்தார். வாழ்நாள் முழுதும் புத்தகம் படிப்பது, பிடித்த புத்தகங்களை நிறைய பிரதிகள் வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்பது, இலக்கிய ஆளுமைகளை அழைத்துக் கூட்டங்கள் நடத்துவது எனத் தனது பொழுதுகளைக் கொடுத்தார்.

1990 மார்ச் மாதத்தில், ‘கலைஞர்களின் கலைஞன்’ என்று காஃப்காவைப் பற்றி ப்ரகாஷ் ஆற்றிய உரையை முக்கியமாகச் சொல்வார்கள். ஒருவிதத்தில் அவரும் கலைஞர்களுக்கான கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம். 1975–ல் ‘பி.கே. புக்ஸ்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, க.நா.சு.வின் ‘பித்தப்பூ’, கே.டானியலின் ‘பஞ்சமர்’, கி.ராஜநாராயணனின் ‘கிடை’, அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ போன்ற முக்கியமான நூல்களைக் கொண்டுவந்தார்.

சாகித்ய அகாடமிக்காக எழுத ஒப்புக்கொண்ட க.நா.சு. வாழ்க்கை வரலாற்று நூலை, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தில் எழுதி முடித்தார். ‘அன்பு ஆதாயம் தேடாதது’ என்ற வாக்கியத்தின்படி வாழ்ந்த, காலத்தால் கனிந்த கலைஞன் தஞ்சை ப்ரகாஷ்!

– வியாகுலன், கவிஞர்,

பதிப்பாளர். தொடர்புக்கு:

ananya.arul@gmail.com