212 கிராம், கிட்டத்தட்ட ஒரு ஆப்பிள் பழத்தின் எடையில் பிறந்த உலகின் மிகச் சிறந்த குழந்தை என அறியப்படும் சிங்கப்பூரின் கெவெக் யூ சுவான், 13 மாத கால சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளது.
சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஜூன் 9 ஆம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 25 வார கர்ப்ப காலத்தை நிறைவு செய்திருந்த நிலையில் குறைப்பிரசவமாக அக்குழந்தை பிறந்தது. பிறக்கும் போது அந்தக் குழந்தையின் எடை வெறும் 212 கிராம் மட்டுமே இருந்தது. 24 செ.மீ நீளம் இருந்தது.
அந்தக் குழந்தையைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட செவிலி ஜாங் சுஹே, நான் எனது 22 ஆண்டு கால பணியில் இவ்வளவு சிறிய குழந்தையைப் பார்த்ததே இல்லை. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை என்று கூறியிருந்தார்.
மருத்துவர்களும் பெரிய சவாலாக எடுத்துக் கொண்டே சிகிச்சையைத் தொடங்கினர். 13 மாதங்களுக்குப் பின்னர் அக்குழந்தை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது 6.3 கிலோ எடையில் உள்ளது.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதன்முறையாக நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள், நாங்கள் குழந்தை குறைந்தபட்சம் 400ல் இருந்து 600 கிராம் எடையாவது கொண்டிருக்கும் என நினைத்தேன். ஆனால், குழந்தை வெறும் 212 கிராம் எடைதான் கொண்டிருந்தது. குழந்தையின் தோல் மிகவும் மிருதுவாக இருந்ததால் ட்யூப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துவதும் சிரமமாகவே இருந்தது. மருந்தின் அளவைக் கூட டெசிமல் அளவில் கணக்கிட வேண்டியதாக இருந்தது.
ஆனால், குழந்தை சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. இயல்பாகவே அதற்கு இருந்த போராட்ட குணமே கூட வளர்ச்சிக்கு உதவியிருக்கலாம். கரோனா காலத்திலும் தப்பிப் பிழைத்த இந்தக் குழந்தை நிச்சயமாக அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்று என்று கூறினர்.
இதற்கு முன்னதாக் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிறந்த 245 கிராம் குழந்தையே மிகவும் சிறிய குழந்தையாக கருதப்பட்டது.