பொலிஸார் , சுகாதாரப் பிரிவினரின் தடைகளைத் தாண்டி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் இன்று (09), யாழ். நகரில் வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, யாழ். நகரில், இன்று வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, யாழ். நகர வீதி வழியாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து, நிறைவுபெற்றது.
இந்த வாகன பேரணியானது, ஆரம்பமாகி நகரை அடைந்த போது, பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் குறித்த பேரணி நடத்த முடியாது என தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
இதன் போது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளி பேணி, தொடர்ந்து செல்வதாக தெரிவித்து, குறித்த வாகன பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.