மணக்கும் மலர் முகக்கவசம்

நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்தால், பலருக்கும் எவ்விதமான கஷ்டங்களும் வராது. இல்லையேல் ஓரளவுக்கு கடன் இல்லாது வாழமுடியும்.

அவ்வாறுதான் திருமணத்துக்கு மாலைக்கட்டும் கலைஞர் மோகன் (வயது 40) சிந்தித்துள்ளார்.

மதுரை சுவாமி சன்னதி மலர் தயாரிப்பு கலைஞரான இவர், திருமணங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மணமக்களுக்கு மணக்கும் மலர்களில் முகக்கவசம் செய்து அசத்தியுள்ளார்

“கொரோனா தாக்காமல் இருக்க பலர் பல்வேறு வகையில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் என் தொழில் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த மலர்களில் முககவசம் தயாரித்துள்ளேன். ஒரு முறை பயன்படுத்தும் ‘திரி பிளே மாஸ்க்’ மேல் மல்லிகை பூக்கள், கோல்டு , ரெட் கலர் டிசைன் பூக்கள் வைத்து கட்டியுள்ளேன்” என்கிறார்.

மணமக்கள் பலர் திருமணத்தின் போது வெறும் முகக்கவசம் மட்டுமே அணிந்தால் பார்க்க நன்றாக இருக்காது. மணமாலையுடன் மலர் முகக்கவசம் அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.மணமக்களே முகக்கவசம் அணிந்திருக்கும் போது நாமும் அவசியம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அங்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கும் வரும். திருமண மாலைகளை கொள்வனவு செய்வோருக்கு இலவசமாக கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

“இது போன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். இதோடு நான் சந்திக்கும் நபர்களிடம் கொரோனா தாக்காமல் இருக்க சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்றார்