கொரோனா பரவலையடுத்து எல்லைக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றிவரும் ஆஸ்திரேலிய அரசு, எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதிமுதல் வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளிலே வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள்( ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள்) தமது உறவினரையோ குடும்பத்தையோ பார்வையிடுவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக ஆஸ்திரேலியா வந்தால், அவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியே செல்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும் என்பதுடன், ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதோர் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள், தாம் பொதுவாகவே வெளிநாட்டில்தான் வாழ்பவர்கள் என்பதை நிரூபிக்கும்பட்சத்தில் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிவிலக்கு அனுமதிபெறவேண்டிய தேவையிருக்கவில்லை.
இதைப்பயன்படுத்தி வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்கள் பலர் அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு வந்துசெல்வதாகவும், இதைத்தடுக்கும் நோக்கில் இனிவரும் நாட்களில் அவர்கள் ஆஸ்திரேலியா வந்து திரும்பிச்செல்லும்போது விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் தனிமைப்படுத்தல் மையங்களிலுள்ள இடங்களை, அதிகம் தேவையிலுள்ளவர்களுக்கு, குறிப்பாக நாடுதிரும்புவதற்காக பல மாதங்கள் காத்துக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
மேற்குறித்த மாற்றங்கள் அடங்கிய தீர்மானவரைபை சுகாதார அமைச்சர் Greg Hunt நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும், ஆனால் இதை பகிரங்கமாக அறிவிப்பதற்கான ஊடக அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
அரசின் இப்புதிய நடைமுறை தமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்கள் பலர் இதற்கெதிராக கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்புவதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal