தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை.
விவசாயி, தான் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கோ, ஏனைய விவசாய விளைபொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்புகள் இன்றி, வருடாந்தம் பெரும் கஸ்டங்களையும் நட்டங்களையும் எதிர்நோக்கி வருவதுடன், தொடர்ந்தும் கடன் சுமைகளைச் சுமக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
விவசாயிகள் பலர் ஏழைகளாகவே இருக்கின்றார்கள். மழை பெய்யுமானால் தன் குடிசை ஒழுகும் எனத்தெரிந்தும், ‘இறைவா இன்று ஒரு நாளாவது மழை பெய்யாதா’ என்று வேண்டிக்கொள்பவனும் விவசாயியாகத்தான் இருக்கிறான்.
இப்படிப்பட்ட விவசாயி, தான் உற்பத்தி செய்கின்ற நெல்லை, அறுவடை செய்து அதை உரிய விலைக்கு விற்க முடியாமல், நட்டத்தை எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. இதற்குப் பல்வேறுபட்ட காரணங்கள் காணப்படுகின்றன.
தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அறுவடை செய்கின்ற நெல்லை உரிய விலைகளில் சந்தைப்படுத்த்கூடிய விலைவாசியில்லை. விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்கின்ற நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயித்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு இதுவரை எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நெல் சந்தைப்படுத்தும் சபை என்பன விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதன்மூலம், விவசாயிகளிடமிருந்து தனியார் கொள்ளை இலாபத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதைக் கட்டுப்படுத்த முடியும்.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், இன்று நெல்லுக்கான விலை என்பது மிகச் சரிவு நிலையில் காணப்படுகின்றது.
இம்முறை, சிறு போகச் செய்கையின் போது, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய மானிய உரத்தை உரிய காலத்தில் கமநல சேவை நிலையங்கள் வழங்கவில்லை. உரத்துக்கான தட்டுப்பாடு, களைநாசினிகள், கிருமிநாசினிகள் என்பவற்றைச் செயற்கையாக தனியார் உற்பத்தி செய்து, அதிகூடிய விலைகளில் விற்பனை செய்துள்ள நிலையில், விவசாயிகளுக்கான உற்பத்திச் செலவு என்பது, கடந்த போகங்களை விட இப்போகத்தில் அதிகமாகும்,
அதேநேரம், ஒரு மூடை நெல்லுக்கான எடை அளவு 69 கிலோ கிராமாக இருக்கவேணடிய நிலையில், உலர்ந்த நெல் மூடை ஒன்றுக்கு 72 கிலோ கிராமாகவும் உலராத நெல் மூடையொன்றுக்கு 75 கிலோ கிராம் முதல் 76 கிலோ கிராம் வரை என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் இல்லை.
தற்போது விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களோ அல்லது நெல் சந்தைப்படுத்தும் சபையோ இதுவரை எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை.
விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை, உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. காரணம், ஒவ்வொரு விவசாயியும் சொந்த முதலீடுகளை வைத்து விவசாயம் செய்வதில்லை. அதாவது, நிலத்தைப் பண்படுத்துவதில் இருந்து, விதைநெல் வாங்குதல், அறுவடை வரைக்கும் தேவையான பணத்தைக் கடனாகவே பெற்றுச் செய்கின்றனர்.
அனைத்துக்குமான கடன்களைச் செலுத்தவேண்டிய காலமும் விவசாயியினது சொந்தத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய காலமும் இந்த அறுவடைக் காலமாகத்தான் இருக்கும். உடனடித்தேவைக்கு அறுவடைசெய்த நெல்லை விற்பனை செய்யவேண்டியதாக இருக்கும். இதுவே கூடுதலான விவசாயிகளின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது.
மாவட்டத்தில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லின் குறிப்பிட்ட அளவை, மேற்படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை என்பன உரிய காலத்தில் கொள்வனவு செய்யுமாக இருந்தால், விவசாயிகள் ஓரளவு பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.
கூட்டுறவுத்துறை என்பது, உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தல், மக்களுக்கான சேவைகளை வழங்குதல் எனப் பல்வேறு பக்கங்கள் காணப்படுகின்றன. முன்னர் உள்ளூர் உற்பத்திகளை கொள்வனவு செய்தல், அரிசி ஆலைகளை வைத்திருந்து அதன் மூலம், அரிசியை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்தல், கைத்தொழில் நிலையங்களை நிர்வகித்தல், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் எனப்பல்வேறு பரிமாணங்களில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கின. ஆனால், இன்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பலம் இழந்த சங்கங்களாகக் காணப்படுகின்றன.
மீள்குடியமர்வுக்குப் பின்னர், பொதுவாக வடமாகாணத்தில் யுத்தத்தால் சேதமடைந்து செயலிழந்து போன பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை வலுவாக்கும் நோக்கில், தொழிற்சாலைகளை அமைத்துக்கொடுத்தல், நவீன முறையிலான அரிசியாலைகளை அமைத்துக்கொடுத்தல்போன்ற உதவிகளை செய்திருந்தன.
ஆனாலும், இவற்றை வைத்து முன்னேற்றம் காணமுடியாது, அவற்றை கைவிட்ட நிலையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இன்று காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பலம் பெற்று உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து பத்து சதவீதமேனும் கொள்வனவு செய்யுமாக இருந்தால், விவசாயிகள் நன்மையடைவர்,
அதேபோல, நெல் சந்தைப்படுத்தும் சபையும் உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்யுமாக இருந்தால், இந்த நிலமை இருக்காது.
கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போதுள்ள மொத்தச் சனத்தொகைக்கு ஏற்ப, சுமார் 22 ஆயிரத்து 310 மெற்றிக்தொன் நெல் வருடம் ஒன்றில் உணவுக்காகத் தேவைப்படுகின்றது. இதில் குறிப்பிட்ட தொகையை கூட களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மாவட்டத்தில இல்லை. இதனால், இங்கே அறுவடை செய்து, இப்போது குறைந்த விலைகளில் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்ற நெல், இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் அரிசியாகவே இங்கு கொண்டு வரவேண்டிய தேவை ஏற்படும்.
இவ்வாறு நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் உழைப்பு, பலவழிகளில் சுரண்டப்படுவதை யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அவனது குடும்பமும் ஏழ்மையில் இருக்கின்றது. இந்த நிலை மாறுவதற்கு உள்ளூர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் விவசாயிக்கு நல்லவருமானத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் அது சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.
சுப்பிரமணியம் பாஸ்கரன்