எதிரியை மன்னித்தாலும் துரோகியை நாங்கள் மன்னிக்கமாட்டோம்

எழும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் சிலர் தங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

தாங்கள் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினை இழந்துள்ளதாகவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இன்றைய ஊடக சந்திப்பில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி,திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் செபஸ்தியான் தேவி,மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் வேலுப்பிள்ளை பொன்மணி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

எங்களது தகவல்களை புத்தகம் செய்து வெளியிடவுள்ளோம் என்று கூறி பெற்றுச்சென்றவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்திற்கு சோரம்போயுள்ளதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக 12வருடங்களாக எங்களது உறவுகளைத்தேடும்போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நீதிப்பொறிமுறையிலோ,உள்ளக விசாரணைப்பொறிமுறையிலோ எந்தவித நம்பிக்கையும் இல்லாத நிலையில் 2018ஆம் ஆண்டு பங்குனி மாதம் தொடக்கம் ஐநாசபையினை நாடி எங்களது பிரச்சினைகளை நாங்களே சென்று கதைத்துவருகின்றோம்.

எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளிடம் சில நிறுவனங்கள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் பதிவுகளை புத்தகம் வெளியிடப்போகின்றோம் என்று கூறிப்பெற்றுக்கொண்டு அதனை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
எழும்புத்துண்டுக்கு விலைபோகும் எங்களது சில உறவுகள் இதனை பணத்துக்கு விற்பனை செய்கின்றனர்.
எங்களது தகவல்களை புத்தகம் செய்து வெளியிடவுள்ளோம் என்று கூறி பெற்றுச்சென்றவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்திற்கு சோரம்போய் அவர்களிடம் விற்றுவருகின்றனர்.இன்று வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

தற்போதுள்ள ஜனாதிபதியின் காலத்தில்தான் எங்களது உறவுகளை ஒப்படைத்திருந்தோம்.அவரது காலத்திலேயே ஆயிக்கரணக்கான உறவுகள் காணாமல்ஆக்கப்பட்டார்கள்.சரணடைந்தவர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் யாரும் உயிருடன் இல்லையென்று ஜனாதிபதியும் அவருடன் உள்ள அமைச்சர்களும் கூறிவரும் நிலையில் அவர்களிடம் சென்று எங்களது பிரச்சினைகளை கதைப்போமானால் நாங்கள் உறவுகளை இழந்தவர்கள் என்ற அடிப்படையில் சோரம்போனவர்களாகவே கருதப்படுபோம் என்ற காரணத்தினால்தான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.

அனைத்துலக நீதிமன்றத்திற்கு எங்களது பிரச்சினைகளை நாங்கள் எடுத்துச்செல்லவிருக்கின்றோம்.சில அமைப்புகள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களாக இல்லாதவர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்று எங்களது போராட்டத்தினை கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

எட்டு மாவட்டங்களிலும் உள்ள அன்பான வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளே நீங்கள் யாரிடமும் சோரம்போகவேண்டாம்.இன்று ஒவ்வொருவருவம் தமது உறவுகளை கண்ணீருடன் தேடிவரும் நிலையில் நாங்கள் ஒவ்வொரு உறவுகளையும் இழந்துவருகின்றோம்.அவர்களின் இறுதிமூச்சுக்கு நாங்கள் மதிப்பளிக்கவேண்டும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் பெறுமதியான உயிருக்கு மதிப்பளித்து நாங்கள் சோரம்போகாமல் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து காணாமல்போன எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு முயற்சிக்கமாட்டோம்.எங்களது போராட்டத்திற்கு எங்களுடன் இணைந்து தோல்கொடுக்குமாறு சர்வதேச நீதிமன்றுக்கும் ஐநா சபைக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.எங்களது உறவுகளை தேடும்போராட்டம் எங்கள் மூச்சு இருக்கும் இறுதிவரையும் தொடரும்.

எட்டு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளும் தங்களது காணாமல்ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வழங்கியது புத்தகம் செய்வதற்காகவே.ஆனால் தாய்மார் வழங்கிய விபரங்களை அவர்கள் மாற்றியமைத்து,அவர்கள் அதனை அரசாங்கத்திற்கு விற்பனை செய்துள்ளார்கள்.அவர்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.அவர்கள் எழும்புத்துண்டுக்கு சோரம்போனவர்கள்.எதிரியை மன்னித்தாலும் துரோகியை நாங்கள் மன்னிக்கமாட்டோம் அவர்களை எங்கள் போராட்டத்திலிருந்து ஒதுக்கிவைத்துள்ளோம்.