இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிககைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
யுத்தத்தின்போது மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மிக மோசமான முறையில் மீறப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பில் சுந்திரமான விசாரணை மேற்கொள்ள சுதந்திரமான பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அப்பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையவேண்டும். மனித உரிமைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற விடயங்களை ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சில ஆலோசனைகளையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தேன்.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும்
யுத்தத்தின்போதும் யுத்தத்துக்கு பின்னரும் தமிழ் அரசியல் கைதிகள் பலர் மிக நீண்டகாலமாக சிறைகளில் இருந்துவருகின்றனர். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு அவசியமில்லாத சட்டமாகும். ஏனெனில், அதில் இருக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நாட்டில் இருக்கும் நீதி முறைமைக்கு முரணாகும். அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாமலாக்கப்பட்டு இலங்கையில் ஏற்கனவே இருக்கின்ற தண்டனைச்சட்ட கோவை, குற்றவியல் நடவடிக்கை கோவை மற்றும் சான்று கட்டளைச்சட்டம். அவைகளைக்கொண்டு ஒரு சட்டமைப்புக்கு கீழ் எல்லா குற்றங்களையும் கொண்டுவரவேண்டும்.
மேலும் பிணை வழங்க முடியாத குற்றங்களின் கீழ் ஒருவரை கைதுசெய்தால், அவரை நீண்டகாலத்துக்கு தடுத்துவைக்க முடியாது. ஒன்றில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவருக்கு பிணைவழங்கப்படவேண்டும். அதேபோன்று நீதிமன்றங்களும் அவ்வாறான வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். ஏனெனில் பிணை வழங்கியவர் வெளியில் இருக்கின்றார். பிணை இல்லாதவர் உள்ளே இருக்கின்றார். அதனால் அவரை பிணையும் வழங்காது வழக்கு விசாரணையும் மேற்கொள்ளாது வைத்திருக்கக்கூடாது.
வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக கடும் சட்டம் ஏற்படுத்தப்படவேண்டும்
மேலும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தடைசெய்யப்படவேண்டும். குறிப்பாக சமூக வலைத்தலங்களில் ஒரு இனத்துக்காே அல்லது ஒரு சமூகத்தை இலக்குவைத்தோ மேற்கொள்ளப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தடைசெய்யப்படவேண்டும். ; கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சில வன்முறை சம்பவங்களுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்களே பிரதான காரணமாக இருந்தன. அதேபோன்று மொழி உரிமை நடைமுறைப்படுத்தப்படவேண்டும்
சிங்களம் மற்றும் தமிழ் அரசகரும மொழியாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தென்னிலங்கையில் சிங்கள மொழி மாத்திரம் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் சிங்கள மொழி தெரியாத தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அதேபோன்று வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மாத்திரம் பயன்படுத்தப்படுவதால், அந்த பிரதேசத்தில் இருக்கும் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அதனால் தமிழ் சிங்கள மொழியை நாட்டில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதை கட்டாயமாக்கவேண்டும். அதேபோன்று சமாதானக் கல்வி எமது கல்வித்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிக முக்கியமானதாகும். நாட்டின் அபிவிருத்திக்கு இது அத்தியாவசியமானதாகும். இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் இல்லாமல் நாட்டை அபிவிருத்தியடையச்செய்ய முடியாது. என்னை பொருத்தமட்டடில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒரு சமஷ்டி முறையிலான தீர்வே அவசியமாகும். ஆனாலும் இலங்கையை பொறுத்தமட்டில் அதற்கு தயாரான நிலையில் தென்னிலங்கை மக்கள் இல்லை. அதனால் தற்போதுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
அத்துடன் சமஷ்டி என்றால் நாட்டை பிரிப்பதென்ற பிழையான கருத்தொன்று தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.சமஷ்டி என்பது ஆட்சியில் ஒருவகை. பெரிய நாடுகளுக்குதான் இது பொருந்தும் என சிலர் தெரிவிக்கின்றனர். அப்படி இல்லை. இலங்கையைவிட சிறிய நாடுகளிலும் சமஷ்டி முறை இருக்கின்றது. சமஷ்டி என்பது அந்த நாட்டு மக்கள் நேரடியாக அந்த ஆட்சியில் பங்கெடுப்பதாகும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களை பொருத்தளவில் உண்மையில் அவர்களுக்கு ஆட்சி உரிமை வழங்கப்படவேண்டும்.
அத்துடன் இந்த சமஷ்டி முறையை இலங்கையில் ஆரம்பமாக குறிப்பிட்டது எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவாகும். அவர் 1923 அல்லது 26 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அங்கிருந்த மாணவர் அமைப்புகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகையில், இலங்கைக்கு சமஷ்டி முறையே பாெருத்தம் என அப்போதே தெரிவித்திருந்தார். அதனால் இது ஒரு புதிய விடயமல்ல.
அதேபோன்று காணாமல் போன அலுவலகம், இழப்பீட்டு காரியாலயம், உண்மையை கண்டறிதல் என எந்த பொறிமுறையை அமைத்தாலும் அதுதொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதேபோன்று எந்த பொறிமுறையை கொண்டுவந்தாலும் ஆரம்பமாக பாதிக்கப்பட்டவர்களுடம் அதுதொடர்பில் கலந்துரையாடி அவர்கள் நம்பக்கூடியதான பொறிமுறையாக அதனை ஏற்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டுடன், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே அது நம்பிக்கை தருவதாக அமையும். இதுவரை அமைக்கப்பட்ட பல பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. மக்களுக்கு நம்பிக்கை இல்லாத எந்த பொறிமுறையை அமைத்தாலும் அதில் பயனில்லை.
மேலும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட எல்.எல்.ஆர்,சி. ஆணைக்குழு பல பரிந்துரைகளை செய்திருந்தது. குறிப்பாக அத்தியாயம் 9இல் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் அதற்கு அப்பாற்பட்ட சில பரிந்துரைகளையே நான் முன்வைத்திருக்கின்றேன்
இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகள் கையளிக்கப்படவேண்டும்
யுத்தம் முடிவடைந்து 12வருடங்கள் கழிந்துள்ளன. என்றாலும் வடக்கில் பொது மக்களின் அதிகமான காணிகள் இன்னும் ராணுவத்தினர் வசமே இருந்து வருகின்றன. இந்த காணிகள் உரியவர்களுக்கு கையளிக்கப்படவேண்டும். அது மாத்திரமல்லாது அவர்களுக்கு நஷ்டஈடும் வழங்கவேண்டும். அண்மையில் சில காணிகளை ராணுவத்தினர் உரிமையாளர்களுக்கு ஒப்படைத்திருந்தனர். எதிர்காலத்திலும் படிப்படியாக மக்களின் காணிகளை திருப்பி வழங்குவதாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
ஆள்சார் சட்டங்கள் தொடர்ந்து இருக்கவேண்டும்
ஆள்சார் சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருத்தல் வேண்டும். அவைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகயின், அந்த சமூகங்களில் இருந்தே அந்த திருத்தங்கள் வருதல் வேண்டும். வெளியில் இருந்து திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது. அதேபோன்று தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும்போதும் எல்லா கட்சிகளுடனும் கலந்துரையாடி மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை குறைப்பதாக தேர்தல் மறுசீரமைப்பு இருத்தல் கூடாது.
மேலும் பாரபட்சத்தை இல்லாமலாக்கும் சட்டம் அரசியலமைப்பில் மாத்திரம் இல்லாது மேலதிகமாக விசேடமான சட்டம் ஆக்கப்படவேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal