இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது.இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இது ஒரு பன்னாட்டு குழும நிறுவனமாகும். இதன் நிறுவனர் கவுதம் அதானி.
இந்நிலையில், இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது. இது ரூ.2053 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும்.
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலம் கலீலி பள்ளத்தாக்கு பகுதியில் அதானி குழுமம் அமைக்கவுள்ள மிகப் பெரிய நிலக்கரி சுரங்க பணிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமம் தற்போது அவுஸ்ரேலியாவில் சோலார் மின்னுற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
இது குறித்து அதானி கூறுகையில்:- அவுஸ்ரேலியாவில் 120 மற்றும் 150 மெகாவாட்ஸ் ஆற்றல் கொண்ட இரண்டு பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலைகளை அந்நாட்டின் இரும்பு நகரமான ஒயல்லாவில் கட்டுகிறோம்.
அதேபோல், 100 முதல் 200 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின்னுற்பத்தி ஆலைகளை முன்னாள் நிலக்கரி நகரமான மொரன்பக்கில் கட்டுகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதி எட்டீ ஹகீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோலார் மின்னுற்பத்தி ஆலை கட்டுவதற்கு ஒயல்லாவை சரியான இடமாக முன்னிறுத்தி இருக்கிறோம். எங்களிடம் சூரிய ஒளி, நிலம், தொழிலாளர்கள் மற்றும் ஆதரவான சமுதாயம் ஆகியவை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.