நல்லெண்ண பயணமாக கோவா பயணமான அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்

அவுஸ்ரேலியா நாட்டின் கடற்படை கப்பல் ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ நல்லெண்ண பயணமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ளது.

அவுஸ்ரேலியா நாட்டின் கடற்படை கப்பலான ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ நல்லெண்ண பயணமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ளது. நவம்பர் 23-ம் தேதி வந்த இக்கப்பல் 27-ம்திகதி வரை கோவாவில் நிறுத்தப்பட்டிருக்கும். தற்போது மோர்முகாவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவுஸ்ரேலிய  கப்பலில் கட்டளை அதிகாரி கேமரான் ஸ்டீல் தலைமையிலான ஆஸதிரேலிய கடற்படையினர் வந்துள்ளனர். 118 மீட்டர் நீளமுள்ள இக்கப்பலில் 26 அதிகாரிகள் மற்றும் 160 மாலுமிகள் என மொத்தம் 186 பேர் உள்ளனர்.

முதல் நாளில் இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை கமாண்டிங் அலுவலர் தங்கள் கப்பலுக்கு அழைத்து கவுரவித்தனர். மேலும், ஹஸ்னா கடற்படை தளத்தில் கோவா பகுதி கடற்படை வீரர்கள் மற்றும் எச்.எம்.ஏ.எஸ். அருந்தா வீரர்கள் பங்கேற்ற நட்புரீதியிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

24-ம் திகதி பள்ளிக் குழந்தைகள் கப்பலில் ஏறி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர ஆஸ்திரேலிய கடற்படையின் கட்டளை அதிகாரி கேமரான் ஸ்டீல், கோவா பகுதி கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் புனீத் கே.பால் ஆகியோர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நல்லெண்ண பயணம் முடிந்து 27-ம் திகதி கோவாவில் இருந்து ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ கப்பல் புறப்பட்டுச் செல்ல உள்ளது.