Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / குரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்

குரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்

உலகமே குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறையை ஒன்றுபட்டுஎதிர்த்துக் கொண்டிருக்கும்போது, மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும்அமெரிக்காவில் அதுவும் விளையாட்டுத்துறையில் இத்தனை காலமாக நடந்துவந்த குழந்தை பாலியல் வன்புணர்வுகள் மீண்டும் வெளிச்ச வட்டத்துக்கு வந்துள்ளன.

தனது இளம் பிராயத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு, தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த ஆப்ரிக்க-அமெரிக்க வீராங்கனையான சிமோன் பைல்ஸ், கடந்த புதன்கிழமை அன்று ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு காரணம் தனது மன நல பிரச்சினைகள்தான் என்று அவர் குறிப்பிட… அவரது கடந்த கால துன்பங்கள் பற்றி அமெரிக்கா முழுவதும் மீண்டும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. ஒலிம்பிக் போட்டிக்கு பல காலம் பயிற்சி எடுத்து அதில் கலந்துகொண்ட முன்னணி வீராங்கனைக்கு அப்படி என்ன மனப் பிரச்னை? பதில் மிக வேதனையானது.

அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கென உள்ள அமைப்புதான் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம் (USAG). 2014-ம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் புகார் குறித்த வழக்கில் அந்த கழகத்தின் தலைவர் ஸ்டீபன் பென்னி ஜூனியர், ‘ஊர் பேர் குறிப்பிடாமல் எங்களுக்கு வரும் அனாமதேய பாலியல் புகார்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று கூறியபோதே அதிர்ச்சி அலைகள் கிளம்பின. அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்டில், இண்டியானாபோலிஸ் ஸ்டார் என்ற உள்ளூர் பத்திரிகையும் ஒரு சேனலும் இணைந்து குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார புகார்களை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம் எவ்வளவு அலட்சியமாக கிடப்பில் போடுகிறது என்பதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதினார்கள். கட்டுரை வெளியான அடுத்த மணித்துளியில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் அலை அலையாக குவிந்தன. மூன்று ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் வெளிப்படையாக முன்வந்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நடந்த பாலியல் வன்முறையை உலகுக்கு தெரிவித்து மௌனத்தை உடைத்தனர்.

தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்ல முன்வந்த பெண்களில் பெரும்பாலும் கைகாட்டியது லாரி நாசர் என்பவரை! இவர் ஜிம்னாஸ்டிக் கழகத்தில் 27 ஆண்டுகளாக மருத்துவராக இருந்தவர். குழந்தைகள் முதல் பெண்கள் வரை எல்லோரையும் உடல் பரிசோதனை என்ற பெயரில், பலவகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு அந்த மருத்துவர் ஆளாக்கினார் என்பதும், அதற்கு ஜிம்னாஸ்டிக்ஸ் கழகத்தின் தலைவர் ஸ்டீபன் பென்னி எப்படி துணை போனார் என்பதும் வெளியானபோது அதிர்ச்சி பன்மடங்கு ஆனது. மேகி நிக்கோலஸ் என்ற வீராங்கனையின் அனுபவம் இப்படித்தான்… 2015-ம் வருடத்திலேயே தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பயிற்றுநரிடம் சொல்லி இருக்கிறார். அடுத்த நாளே கழகத்தின் தலைவர் பென்னி, ‘நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்’ என்று மேகியின் தாயிடம் கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் மேகியின் பெற்றோர் இந்த பாலியல் புகாரை எழுப்பியதால் 2016-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான வீரர்கள் தேர்வின் போது மேகி சிறப்பான முறையில் பங்களிப்பு செய்த போதிலும் பென்னி அவரை ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யவில்லை. இவரைப் போலவே ‘ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் புகார் கொடுத்தால் அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் ஓரங்கட்டப்படுவார்’ என்று மறைமுக மிரட்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மற்றொரு வீராங்கனையான ரேச்சல் தனக்கு நடந்த அநீதிக்கு எதிராக அரசோ ஜிம்னாஸ்டிக்ஸ் கழகமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வழக்கறிஞர் மூலமாக நிவாரணம் கோரி வழக்கு தாக்கல் செய்தார். மீ டூ இயக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆயிரம் முறை கேட்கப்பட்ட கேள்விகள்தான் இவரிடமும் கேட்கப்பட்டது. “ஏன் இத்தனை நாள் சும்மா இருந்துவிட்டு, இப்போது மட்டும்?” என்று. ‘நடப்பது என்னவென்றே புரியாத வயதில், நான் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மீது எப்படி புகார் கொடுத்திருக்க முடியும்?’ என்பது ரேச்சலின் எதிர் கேள்வி.

மீண்டும் லாரி நாசர் விவகாரத்துக்கே வருவோம். மாதம் ஒருமுறை ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளுக்கு டெக்சாஸ் மாகாணத்தில் பயிற்சி முகாம் நடக்கும். இங்கு பெற்றோர் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இளம் வீரர்கள் வெளியே தொடர்பு கொள்ள செல்போன் டவரும் கிடையாது. இவை எல்லாமே லாரிக்கு தன் வக்கிரங்களை அரங்கேற்ற சாதகமாக அமைந்தது. இதைவிடக் கொடுமை என்னவென்றால் லண்டன் நகரில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வீராங்கனைகள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று அங்கேயும் அவர்களை பரிசோதனை என்ற பெயரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் லாரி நாசர்.

அமெரிக்க நாட்டின் சட்டப்படி குழந்தை மீதான பாலியல் வன்முறை நடந்தது தெரியவந்தால் யாராக இருந்தாலும் அதைக் கட்டாயமாக காவல் துறைக்கோ அல்லது குழந்தைகள் நல குழுமத்திற்கோ தகவல் சொல்ல வேண்டும். இந்த சட்ட விதியையும் மீறி அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகத்தின் தலைவர் பென்னி, புகார்களை மறைப்பதிலேயே குறியாக இருந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் போனபோது, பேருக்கு ஒரு வழக்கறிஞர் தலைமையில் விசாரணை நடத்தி இருக்கிறார் அதன் பிறகு ஐந்து வாரங்கள் கழித்து இந்த புகார்கள் குறித்து பெடரல் புலனாய்வு பிரிவிடம் (FBI) தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகளே பென்னியிடம் விலை போனார்கள் என்று கூறப்படுகிறது.

லாரி நாசருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற வீராங்கனைகளை சமூக ஊடகங்கள் மூலமாகக் குறி வைத்து கடும் அவதூறு செய்தார்கள் லாரியின் ஆதரவாளர்கள். எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் நடந்த புலன் விசாரணையில் காவல்துறையினர் லாரி நாசர் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆயிரக்கணக்கான வக்கிரக் காட்சி வீடியோக்களை கைப்பற்றினர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலமும் பதிவு செய்து வழக்கை இறுதியாக பதிவு செய்தனர். லாரி கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க நாட்டு சட்டப்படி குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பதற்கு முன்பு பாதிக்கப் பட்டவர்களிடம் அது குறித்து கருத்து கோரும் நடைமுறை (victim impact statement) இருக்கிறது. 125 பெண்கள் இப்படித் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அவர்கள் லாரிக்கு நேர் எதிரே நின்று, “நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல; போராளிகள். சம்பவம் நடந்தபோது நீங்கள் முழுக்க முழுக்க எங்களை, எங்கள் உடல்களை உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தீர்கள். அந்த காலம் மலையேறி போய் விட்டது. எங்கள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டது. நாங்கள் இப்பொழுது எங்கள் கட்டுப்பாட்டில் துணிச்சலுடன் நிற்கிறோம்” என்று முழங்கினர்.

இறுதியாக ரேச்சல் பேசும்போது, பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்கள் அடைந்த துன்பத்திற்கு இணையான தண்டனை உலகத்திலேயே இல்லை என்றாலும் சட்டப்படி அதிகபட்ச தண்டனையை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். லாரிக்கு இரண்டு 60 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரது குற்றத்தை மறைப்பதற்கு உறு துணையாக இருந்த ஜிம்னாஸ்டிக்ஸ் கழக தலைவர் பென்னி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸும் இந்த லாரி நாசரிடம் சிறைப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதன் பாதிப்பிலிருந்து உடல் மற்றும் மன ரீதியாக இன்னமும் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே, போட்டியிலிருந்து அவர் விலகிய சம்பவம் வெளிப்படுத்துகிறது. சிமோனுக்கு ஆதரவாகப் பலரும் நின்றாலும், போட்டியில் இருந்து திடீரென்று விலகியது தேச துரோகம் என்றும் சுயநலம் என்றும் இரக்கமின்றி விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு எத்தனை உடல் உறுதி தேவையோ… அதைவிட அதிகமான மன உறுதி இது போன்ற கயமைத் தனத்தை நேரம் பார்த்து வெளிப்படுதுவதற்குத் தேவை என்று நிரூபித்து இருக்கிறார் சிமோன் பைல்ஸ்

நிர்மலராணி உமாகாந்

About குமரன்

Check Also

தமிழர்கள் எப்படி நம்புவது?

ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ...