கேரளத்தின் மண்ணடி கிராமத்தில் 1941-ல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் புனே திரைப்படக் கல்லூரியிலும் படித்தவர். 1972-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ மலையாளத்தில் புதிய அலை சினிமாவைத் தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தின் முதல் திரைப்படச் சங்கமான ‘சித்ரலேகா’வை நிறுவியவர்களில் ஒருவர். பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட தேசிய அளவிலான விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர். ஜூலை மூன்றாம் தேதி தனது 80 வயதை நிறைவுசெய்ததையொட்டி, அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உரையாடியதிலிருந்து…
கலை எப்போதாவது உங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறதா? எனில், எந்தக் கலை?
நான் அடைக்கலம் கொள்ளும் கலை வடிவம் கதகளி. நாடக வடிவின் மிக உச்சபட்சமாக நளினமாக்கப்பட்ட வடிவம் கதகளி. எதார்த்தத்தை மறுபடைப்பு செய்யும் ஒரு முயற்சியையும் அதன் வெளியீட்டில் பார்க்கவே முடியாது. ஆனால், சினிமாவோ அடிப்படையில் எதார்த்தத்தில் நின்று கதைசொல்ல வேண்டிய வடிவம். இந்த முரண்பாடு அல்லது இரட்டை நிலை மிகவும் சுவாரஸ்யமானது. ஏனெனில், கதகளியின் ரசிகனாக, சினிமாவைப் பயில்பவனாக இரண்டு ஊடகங்களிலும் ஈடுபடுபவன் நான்.
‘ஸ்வயம்வரம்’ முதல் ‘பின்னேயும்’ வரையிலான உங்கள் படைப்புகளைப் பார்க்கும் ஒருவர், அதிகரிக்கும் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அவற்றில் துலக்கமாகப் பார்க்க முடியும். காந்தியும் நேருவும் தாக்கம் செலுத்திய ஒரு யுகத்தைச் சேர்ந்த ஒரு தலைமுறையினர் இந்தியா பற்றி கொண்டிருந்த நம்பிக்கையின் சிதறலாக அதைப் பார்க்கலாமா?
காந்தியும் நேருவும் கனவு கண்ட ஒரு வளரும் தேசம் குறித்தான உயர்ந்த லட்சியங்களோடு நான் வளர்ந்தேன். மனிதார்த்தத்தை மற்ற எல்லாவற்றையும்விட உயர்வாக நேருவின் இந்தியா கொண்டிருந்தது. சுதந்திரமடைந்து ஒரு தசாப்தத்தில் தொழில் துறை, கலாச்சாரம், கலைகள், இலக்கியம் என மனிதர்கள் புழங்கும் ஒவ்வொரு வெளியிலும் இந்தியா தனது அடித்தளங்களை இடத் தொடங்கியது. வறிய நிலையில் இருந்தாலும், பார்வையில் தெளிவும் விழுமியங்களில் உறுதியும் சேர்ந்து கூடுதலாகச் சாதிக்கவிருக்கும் தேசமாக இந்தியா பார்க்கப்பட்டது. தேசத்தை உருவாக்கிய தலைவர்கள் போனவுடன் அவர்களது லட்சியமும் சீக்கிரத்திலேயே மறக்கடிக்கப்பட்டது. புதிய வகை அரசியலர்கள் ஊழல் மலிந்தவர்களாகவும், மக்கள் பணியில் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் வந்தார்கள். இன்றைய இந்தியாவைப் பார்க்கும்போது துயரமும் அழிவும் நம்மைச் சூழ்வதுபோல உணர்கிறேன். ஒரு கலைஞனின் படைப்புகளில் அந்தக் காலத்தைச் சேர்ந்த அரசியல், சமூக மூட்டங்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.
தீவிர சினிமா மீது கவனம் கொண்ட பார்வையாளர்களுக்காக கேரளத்தில் சினிமா சங்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் நீங்களும் ஒருவர். இணையத்தில் இன்று எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் நிலையில், சினிமா சங்கங்களின் வேலை என்ன?
சினிமா சங்கங்கள் அதன் பழைய வடிவத்திலேயே இன்று தொடர்வது சாத்தியமில்லை. ‘ஆர்ட் ஹவுஸ்’ என்ற பெயரில் திரைப்படக் கூடங்களைத் தொடங்குவதுதான் சரியான மாற்றாக இருக்கும். ஒரு சிறந்த படைப்பைப் பார்ப்பதற்கு விரும்பும் யாரும், நியாயமான கட்டணத்தைக் கொடுத்துப் பார்க்கும் வசதி எல்லோருக்கும் இதன் மூலம் ஏற்படும். மாற்று சினிமாவைப் பிரபலப்படுத்துவதற்கு இந்தத் திரைப்படக் கூடங்கள் உதவும். இதைப் போன்ற கூடங்களை உருவாக்குவதற்கு அரசின் தரப்பில் அக்கறையுடன் எத்தனங்கள் எடுக்கப்பட வேண்டும்.
சினிமாவைப் பார்ப்பதற்கு மடிக்கணினிகளையும் செல்பேசிகளையும் விரும்பும் காலம் வந்துவிட்டது. இனி சினிமா படைப்பாளிகள் தங்கள் கற்பனையிலேயே மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்குமா?
சினிமாவை செல்பேசியிலோ கணிப்பொறியிலோ ரசிக்க முடியாது. பெரிய திரையில் இருட்டான அரங்கில் காட்சிகளைப் பார்க்கும் தாக்கம் அதில் கிடைக்கவே கிடைக்காது. தன்னைப் போன்ற ரசிகர்களோடு ஒரு சமூக அனுபவமாக சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தை மாற்றீடு செய்ய முடியாது. நீங்கள் பார்க்கும் காட்சியின் அளவும் உங்களிடம் தாக்கம் செலுத்தும் அளவும் வேறு; அதேபோன்றுதான் ஒலி அனுபவமும். கணிப் பொறியிலோ செல்பேசியிலோ நடுத்தரமான ஒலிகள்தான் காதுகளை அடைகின்றன. கதாபாத்திரங்களுக்கு நடுவே பகிரப்படும் உரையாடல்கள் மட்டுமே நமக்கு வழிகாட்டுவதாக உள்ளன. இது சினிமாவை அனுபவிக்கும் முறையான வழி அல்ல.
இந்தியாவில் தீவிர சினிமாவின் நிலை எப்படி உள்ளது? திரையரங்குகளிலும் தொலைக்காட்சியிலும் நியாயமான இடம் இல்லை. தீவிர சினிமா என்ற கலை வடிவத்தைப் பயில்வது, அதைத் தயாரிப்பது, அதற்கான பார்வையாளர் சூழல் எப்படி இருக்கும்?
தீவிர சினிமாவை முன்னெடுப்பதிலும் ஆதரிப்பதிலும் அரசு எல்லா முனைகளிலிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டுவிட்டது. அரசைப் பொறுத்தவரை சினிமா வெறும் பொழுதுபோக்கு வடிவம். இந்த நம்பிக்கையை சினிமா எடுப்பவர்கள் பெரும்பாலானவர்களும் பொதுமக்களும்கூட வைத்துள்ளனர். கலந்தாலோசிப்பதில் நம்பிக்கையே இல்லாத அரசிடம் யார் சொல்ல முடியும்? அரை நூற்றாண்டுக்கு முன்னரும் நிலைமையில் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. ஆனால், நம்பிக்கையின் ரேகைகளைக் காண முடிந்தது. அது இப்போது போய்விட்டது. தரமான சினிமாவை போஷிக்கவும் ஊக்குவிக்கவும் அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களும் சரியாக இல்லை.
சினிமா ஒளிப்பதிவுச் சட்டம் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களை எப்படிப் பார்க்கிறீர்கள். இணைய யுகத்தில் தணிக்கை என்பது சாத்தியமா?
தணிக்கை என்பதே அரசியல் அமைப்பின் லட்சியத்துக்கு எதிரானது. ஒளிப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரும் தற்போதைய திட்டத்தின் மூலம் திரைப்படச் சான்றிதழ் அளிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாணையத்தை மறைமுகமாக அதிகாரமற்றதாக்க முயல்கிறது. ஒரு திரைப்படப் படைப்பாளி விதிமுறைகளுக்கு எதிராக முறையீடு செய்வதற்கான ஒரே அமைப்பாக அதுவே உள்ளது. ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த அரசு திட்டமிடுகிறது. வரையறையே இல்லாமல் ஒரு ஆட்சியானது மக்கள் மேல் சந்தேகப்படத் தொடங்கினால், அதன் பொருள் சர்வாதிகாரம்தான். அச்சுறுத்தப்படும் உணர்வையோ மூச்சுமுட்டும் உணர்வையோ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று நம்மிடம் ஏற்படுத்தக் கூடாது.
© ‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்