எழுத்தெண்ணிப் பயின்ற இளங்குமரனார்!

ஊர்ப் பெயரும் தாயார் பெயரும் ஒன்றாகக் கொண்டவர் இளங்குமரனார் (1930 – 2021). தாயார் பெயர் வாழவந்தாள். ஊர்ப் பெயர் வாழவந்தாள்புரம். தந்தை பெயர் இராமு; ஊர் வைத்த பெயர் ‘படிக்கராமு’. பெற்றோரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததால், அந்த நாள் வழக்கப்படி அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘கிருஷ்ணன்’. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் நூல்கள் தந்த தனித்தமிழ் உணர்வால் இவர் மாற்றிக்கொண்ட பெயர், ‘இளங்குமரன்’.

இடைவிடாமல் படிக்கும் தந்தையாரின் பழக்கம் இவரிடமும் ஒட்டிக்கொண்டது. திருக்குறள் முழுவதையும் 12 வயதுக்குள்ளும், தொல்காப்பியம் முழுவதையும் 16 வயதுக்குள்ளும் மனப்பாடம் செய்துவிட்டார். சங்க இலக்கியப் பயிற்சியைத் தொடங்கியது 18-ம் வயதில்.

சொந்த ஊரிலேயே தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியை 8.4.1946-ல் தொடங்கினார். புலவர் பட்டம் பெற்ற பின் 1951-ல் தமிழாசிரியர் பணியை கரிவலம்வந்தநல்லூரில் தொடங்கினார்; தளவாய்புரத்தில் தொடர்ந்தார்; மதுரை மு.மு.மேல்நிலைப் பள்ளியில் நிலைத்தார். இறுதி நான்காண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வறிஞராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். தொடர்ந்து 43 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றும் வாய்ப்பை இளங்குமரனார் பெற்றதுபோல இனியொருவர் பெற இயலாது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பணியில் இவர் உருவாக்கியது ‘தொல்காப்பியக் கலைச் சொற்களஞ்சியம்’. தொல்காப்பியம், திருக்குறள் இரு நூல்களையும் பல கோணங்களில் பார்த்து, இளங்குமரனார் வெளிப்படுத்திய நூல்கள் மிகுதி.

எந்த ஊரில், எந்தப் பொருளில் பேசினாலும் அதை உடனே நூலாக விரித்தெழுதும் வழக்கமுடையவர் இளங்குமரனார். ‘திரு.வி.க. இப்படித்தான் செய்வார்’ எனத் தம் எழுதுமுறை முன்னோடியாக அவரைக் காட்டுவார். பேசிய உடனேயே, ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளுக்கு எழுதியனுப்பும் பெரியார் வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார். திருவள்ளுவர், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர் நால்வரும் தந்த நூல் வெளிச்சத்தில் நடப்பதாகப் பெருமிதம் கொள்பவர் இளங்குமரனார். தமக்குப் பெயர் தந்தவராக மறைமலை அடிகளாரையும், நெஞ்சம் தந்தவராக திரு.வி.க.வையும், தோள் தந்தோராகப் பாவாணர் இலக்குவனாரையும், துணிச்சல் தந்தோராக பாரதியார், பாவேந்தரையும் குறிப்பிடுவது இளங்குமரனார் வழக்கம்.

தனித்தமிழ்ச் சொல்லாய்வாளர், வரலாற்றாசிரியர், உரையாசிரியர், படைப்பாளர், பாவலர், பதிப்பாசிரியர், பழம்நூல் மீட்பர் எனப் பல முனைகளிலும் விரிந்த அறிவுப் பரப்பைக் காட்டுவன இவரின் நூல்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் இளங்குமரனார். அத்தனையும் இவர் கைப்பட எழுதியவை. மறைவதற்குச் சில நாட்கள் முன்பு இவர் இறுதியாக எழுதிய எழுத்தும் மணிமணியாக உள்ளது. எழுத்து நடுக்கமும் நினைவுத் தடுமாற்றமும் வராத பெறும் பேறானது 91 வயதிலும் இவருக்கு வாய்த்தது வியப்பு.

கருத்துப் பணியோடு நின்றுவிடாமல், தமிழ் காக்கும் களப்பணி வீரராகவும் செயல்பட்டார். அறிஞர் சி.இலக்குவனார் உருவாக்கிய தமிழ்க் காப்புக் கழகத்தின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்தார். பாவாணரின் ‘உலகத் தமிழ்க் கழகம்’, ‘குறளாயம்’ என இவர் பணியால் பயன் கொண்ட அமைப்புகள் பல. தமிழ்ப் பயிற்று மொழியை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 25.04.1990-ல் நடந்த உயிர் துறக்கும் போராட்டத்திலும், 102 அறிஞர்களுள் ஒருவராகத் தோள் தட்டி நின்றவர் இளங்குமரனார்.

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தமிழை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ‘திருவள்ளுவர் தவச்சாலை’ நிறுவினார். தமிழில் திருமணம், குடமுழுக்கு, வாழ்வியல் சடங்குகள் நடத்தவல்ல நூற்றுக்கணக்கானோரைப் பயிற்சி தந்து உருவாக்கினார். தமிழில் திருமணம் நடத்துவதை 21 வயதில் தொடங்கி, எழுபது ஆண்டுகள் தொடர்ந்து நடத்திவந்தார். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட திருமணம் நடத்தி வைத்திருப்பதைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தியுள்ளார்.

இவரது சொல்லாய்வுத் திறம் வியந்த தேவநேயப் பாவாணர், தமது ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’ திட்டத்தின் சிறப்புத் தொகுப்பாளராக இவரை இணைத்துக்கொண்டார். புலமை வாய்ந்தோரே பாவாணர் நூலோடு உறவாட முடியும். பாவாணர் நூல்களுக்கு நுழைவாயிலாக ‘தேவநேயம்’ என 14 தொகுதிகளை வழங்கியுள்ளார் இளங்குமரனார். பாவாணர் வரலாற்றை எழுதியுள்ள இவர், பாவாணர் மடல்களைத் திரட்டி இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியத்தில் மனம் தோய்ந்து மூழ்கி எழுந்த இளங்குமரனார், தொல்காப்பிய முழு நூற்பிழிவாக வழங்கியுள்ள அரிய நூல் ‘தமிழர் வாழ்வியல் இலக்கணம்’. தொல்காப்பியத்தில் புலமை பெற விரும்புவோருக்கு அவர் வழங்கியுள்ள வழிகாட்டி நூல் ‘தொல்காப்பியம் சொற்பொருட்களஞ்சியம்’. பெருமுயற்சியில் ஈடுபட்டு ‘செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்’ எனும் 10 தொகுதிகளை வழங்கியுள்ளார். அழிந்துபோன நூல்களாகக் கூறப்பட்ட ‘காக்கைபாடினியம்’, ‘களவியற்காரிகை’ முதலிய பல நூல்கள் இளங்குமரனாரால் உயிர்பெற்றன.

தமிழரின் வாழ்க்கை நடைமுறைகளை விளக்கும் ‘தமிழக ஒழுகு’ என்னும் அரிய நூலை இவரைப் பதிப்பிக்கச் செய்து வெளியிட்டுள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். அந்த நூலை எழுதிய விருதை சிவஞான யோகி 19.11.1908-ல் தொடங்கிய திருவிடர் கழகமே முதல் தனித்தமிழ் அமைப்பு என இளங்குமரனார் வெளிப்படுத்தியபோது, வியந்தது தமிழுலகம். ‘தனித்தமிழ் இயக்கம்’ (1991), ‘தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள்’ (1985), ‘இலக்கண வரலாறு’ (1990) போன்ற நூல்களால் ஆய்வுச் செழுமைக்கு வலிமையூட்டினார் இளங்குமரனார்.

சுவடிகள் அச்சேறிய அரிய வரலாற்றை விளக்கும் ‘சுவடிக்கலை’ (1984), ‘சுவடிப்பதிப்பு வரலாறு’ (1990) போன்ற அரிய நூல்கள் இவருடைய உழைப்பில் பிறந்தவை என்பதை அறிந்தோர் சிலரே. பழைய நூல்களைத் தேடிப் பதிப்பிப்பதில் நம் கால உ.வே.சா.வாகத் திகழ்ந்தார் இளங்குமரனார்!

– செந்தலை ந.கவுதமன், சமகால வரலாற்று ஆய்வாளர்,

சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர்.

தொடர்புக்கு: sooloor@yahoo.co.in