கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கின்றன. அந்த தவறான புரிதல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த அரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை அனைத்து மக்களும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி வி.வஜிதரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை டெல்டா வைரஸ் தொற்றுக்களோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை எனவும், முல்லைத்தீவைச்சேர்ந்த ஒருவர் ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் அவருக்கு டெல்டா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதாகவும் வைத்தியர் வி.வஜிதரன் தெரிவித்ததுடன், எனவே அவரால் முல்லைத்தீவில் சமூகத்தொற்று இடம்பெறவில்லை எனவும், எனவே இந்த டெல்டா தொற்றுத் தொடர்பிலும் முல்லைத்தீவு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாம் அரசாங்கத்திற்கு நன்றிக்கடன்பட்டவர்களக இருக்கின்றோம்.
அந்தவகையில் தடுப்பூசி ஏற்றுவதற்கென சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் ஊடாக குறிப்பிட்ட சில இடங்களைத் தெரிவுசெய்து அங்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். அவ்வாறு தடுப்பூசி ஏற்றும் இடங்களை முன்னிலைப்படுத்தி, ஒவ்வொருநாளும் இரவில் ஒலிபெருக்கிமூலம் பொதுமக்களுக்கு அறிவித்தல்களையும் வழங்கிவருகின்றோம்.
இது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஓர் அரிய சந்தர்ப்பமாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தினைத் தவறவிடாது தடுப்பூசிஏற்றப்படும் இடங்களுக்கு பொதுமக்கள் சென்று நடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏன்எனில் இந்த கொவிட் தொற்றைத் இந்த தடுப்பூசிமூலமே கட்டுப்படுத்த முடியும்.
அதேவேளை இந்த கொவிட் தடுப்பூசி தொடர்பில் சில மக்களிடையே தவறான கருத்துக்கள் நிலவுகின்றது.
குறிப்பாக இந்த தடுப்பூசியால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும், அதிக ஆபத்துக்கள் இருக்கும் என்ற தவறான கருத்துக்கள் மக்கள்மத்தியில் நிலவுகின்றது.
இந்த தடுப்பூசி ஏற்றும் விடயத்திலே பொதுமக்கள் பயம்கொள்ளத்தேவையில்லை. ஏன் எனில் இதுவரையில் இந்தத் தடுப்பூசியானது இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் பெருந்தொகையான எண்ணிக்கையிலே போடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் இடம்பெறும் இறப்புகளைப்பொறுத்தவரையிலே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது, வேறு வருத்தங்கள் உள்ளவர்களுக்குரிய இறப்பு வீதங்கள் கூடிக்கொண்டுசெல்கின்றது. ஆகவே 60வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக இந்த தடுப்பூசியினைப்போடவேண்டும்.
எனவே பொதுமக்கள் அவர்களுக்குரிய இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறாமல் பயன்படுத்தி தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்படுகின்ற பேர் அபாயங்களைத் தடுக்கலாம் .
அத்தோடு தற்போது புதிதாக பரவிவரும் டெல்டாவகை வைரஸ் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
குறிப்பாக டெல்டா வகைவரஸ் தொற்றுடன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவர் முல்லைத்தீவுமாவட்ட மக்களுடன் சேர்ந்து பழகியவர் அல்ல.
அவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர் ஓமான் நாட்டிலிருந்து தற்போது நாட்டிற்குத் திருப்பியிருக்கின்றார். அவ்வாறு வருகைதந்தவர் தற்போது தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
எனவே டெல்டா தொற்றுக்குறித்து முல்லைத்தீவு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.