சிறுமி ஹிஷாலினியின் மரணம், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு குற்றவியல் சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது. ஆனால் அந்த மரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வினாக்களும், ஏற்கனவே பலதரப்பினராலும் எழுப்பப் பட்டுள்ள வினாக்களும் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிமாணங்களை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அந்தச் சிறுமியின் மரணம் இன மத சமூக நிலைமைகளைக் கடந்து நாடளாவிய ரீதியில் பலதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு, சிறுவர் உரிமைச் செயற் பாட்டாளர்கள் மட்டு மல்லாமல், பெண்ணுரிமைச் செயற் பாட்டாளர்கள், பொது அமைப்புச் செயற் பாட்டாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என பலதரப்பினரும் குரல் எழுப்பி இருக்கின் றார்கள். அவருடைய மரணத்திற்குக் காரணமானவர்கள் கண்டறியப் பட்டு, நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மலையகம் மட்டு மல்லாமல் நாட்டின் வடக்கு கிழக்குப் பிரதேச மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் போராட்ட ங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த வகையில் ஹிஷாலினியின் மரணம் ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத் திருக்கின்றது. நாட்டின் பல இடங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் சிறுவர் சிறுமியர் மீதான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ஹிஷாலினியின் மரணம் நாடளாவிய ரீதியில் ஒரு முக்கிய விடயமாக, பேசுபொருளாகி இருக்கின்றது. அத்துடன் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பிலான சட்டம் ஒழுங்கு மற்றும் அரச ஆட்சி நிர்வாக நிலைமைகளில் காணப்படுகின்ற ஓட்டைகளை இந்தச் சம்பவம் விசேடமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதேவேளை, சிறுவர் தொழிலாளர்கள்மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச் செயல்கள் குறித்த ஒரு தலையிடியை அரசுக்கு அது ஏற்படுத்தி இருக்கின்றது.
அவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது இன்னும் ஆதார பூர்வமாகத் தீர்மானிக்கப் படவில்லை. இது அந்த சம்பவத்தின் முதல் நிலை. இரண்டாவதாக சமூக, அரசியல் அந்தஸ்து மிக்க முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிசாட் பதியுதீனின் வீட்டில் அந்த சிறுமி பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்த விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதேவேளை, சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோகங் களுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் ஆளாக்கப் படுகின்ற நிலைமையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினருடைய வீட்டில் அவருடைய மரணம் பல்வேறு சந்தேகங்களையும், வினாக்களையும் கொண்ட சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது.
ஹிஷாலினி ஒரு சிறுமியா அல்லது பருவ மங்கையா என்பது பற்றிய சர்ச்சையும் எழுந்திருப்பது அந்த சம்பவத்தின் சட்ட ரீதியிலான தாற்பரியத்தை, குற்றவியல் நிலைமையைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
அடுத்ததாக ஹிஷாலினியின் சமூக, இனத்துவ, பொருளாதார, அரசியல் பின்னணி குறித்த மலையகத்தின் நிலைமைகளை உற்று கவனிக்கவும் சீர்தூக்கிப் பார்ப்பதற்குமான அவசியத்தையும் அவருடைய மரணம் வலியுறுத்தி இருக்கின்றது.
கொலையா, தற்கொலையா? – கேள்விகளும் பன்முக நிலை விசாரணைகளும்
ஹிஷாலினி தீப்பற்றி எரிந்த நிலையில் கண்டறியப்பட்டு, தீயை அணைத்த பின்னர் மருத்துவமனையில் ஜுலை 3 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது ஜுலை 15 ஆம் திகதி சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரல்லை காவல் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அந்த விசாரணை பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமாகிய மனோ கணேசன் நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
அந்த அதிகாரியின் விசாரணை நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவர் இந்தக் கோரிக்கையை அரசிடம் முன்வைத்திருந்தார். இதற்கிடையில் விசாரணைகள் முற்றுப் பெறுவதற்கு முன்னரே ஹிஷாலினி தற்கொலை செய்து கொண்டார் என அந்த அதிகாரி தெரிவித்திருந்த கருத்து அந்த மரண சம்பவத்தின் உண்மை நிலைமையை மறைக்கும் வகையில் அமைந்திருப்ப தாகவும் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றது.
அந்த 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொள்வற்கான காரணம் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் நவீன வசதிகளுடனான சொகுசு வீட்டில் மண்ணெண்ணெய் ஏன் வந்தது? அது எவ்வாறு வந்தது? தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவர் தனது தலையில் அல்லவா மண்ணெண்ணெயை ஊற்றி இருக்க வேண்டும்? ஆனால் அவர் எரியுண்ட வேளை, அவரது கால்களில் மண்ணெண்ணெய் ஊற்றப் பட்டதாகவே கூறப் பட்டிருக்கின்ற நிலையில் அந்த மரணத்தை எவ்வாறு தற்கொலை என்று முடிவு செய்ய முடியும்? முக்கியமாக எரியூட்டுவதற்குப் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ள லைட்டர் யாருடையது? அது எங்கிருந்து வந்தது? என்ற கேள்விகளும் எழுப்பப் பட்டிருக்கின்றன.
இதற்கும் அப்பால் ஹஜஷாலினியின் மரணம் கொலையா தற்கொலையா என ஆதார பூர்வமாக தீர்மானிக்க முடியாத ஒரு சந்தேக நிலையில் சம்பவம் நடைபெற்ற வீட்டார் மற்றும் அங்கிருந்த எவரும் ஏன் உடனடியாகக் கைது செய்யப் படவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. அந்த மரணம் இடம்பெற்று ஒரு வார காலத்தின் பின்னரே அந்த வீட்டின் தலைவியாகிய நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி, அவருடைய தந்தை, அந்த சிறுமியை அங்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சேர்த்து விட்ட தரகர் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் தாமதமாகவே கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி இருக்கின்றனர்.
ஹிஷாலினியின் மரணம் மலையத்தில் அவருடைய சொந்த பிரதேசமாகிய டயகமவிலும், அட்டனிலும் மட்டு மல்லாமல் நாட்டின் பல்வேறு இடங்களிலும் நீதியும் நியாயமும் கோரி பலரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தியதன் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. இது இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் ஆரம்பத்தில் பாராமுகமாக நடந்து கொண்டிருந்தனரா என்ற சந்தேகமம் எழுந்திருக்கின்றது.
இந்த நிலையில் பொரல்லை காவல் துறையினரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட இரண்டு காவல்துறை குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் மற்றும் சிறுவர் தொழிலாளர் உரிமைகள் சார்ந்த கோணத்தில் தொழில் திணைக்கள அதிகாரிகளும் தனித்தனியான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். சட்டவியல் ரீதியில் சட்டமா அதிபர் திணைக்களமும் இது விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கின்றது.
அத்துடன் மரணமடைந்த சிறுமியின் தாய் தந்தை சகோதரன் ஆகியோரையும் விசாரணை செய்துள்ள விசாரணை குழுக்கள், அந்த சிறுமி கல்வி கற்ற பாடசாலை அதிபர் உள்ளிட்டவர்களையும் விசாரணை செய்துள்ளன. இது ஒரு புறமிருக்க மருத்துவ பரிசோதனை அறிக்கையில் இந்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் உறவுக்கு – நாட்பட்ட பாலியல் ஊடுருவலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. எனினும் ‘தொடர்ச்சியான இந்தப் பாதிப்பு’ குறித்த ‘கால வரையறை’ தெளிவாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படாத நிலையில் அது பற்றிய விசாரணைகளும் காவல் துறையினரால் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன.
ஹிஷாலினி சட்ட வரையறைக்கு உட்பட்டு தொழிலில் சேர்க்கப்பட்டாரா?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் இல்லப் பணியாளராக இருந்த ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த போது 16 வயது சிறுமியாக இருந்துள்ளார். அவர் 15 வருடங்கள் 11 மாத வயதுடைய நிலையில் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவ்வாறு வீட்டுப் பணிகளுக்காக தரகர் ஒருவரின் மூலமாக வேலையில் சேர்க்கப் பட்டிருந்தார்.
சர்வதேச தொழில் நிறுவனம் 17 வயதுடையவர்களையே சிறுவர் தொழிலாளர்களாக வரையறை செய்து பிரகடனப்படுத்தி உள்ள நிலையில், அதற்கு முரணான வகையில் இலங்கை அரசு சிறுவர் தொழிலாளர்களுடைய வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தி உள்ளது. ஏற்கனவே நடை முறையில் இருந்த 1956 ஆம் ஆண்டின் பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர் தொழில் சட்டம் இந்த வருடம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி இந்த வயதெல்லை அதிகரிக்கப் பட்டிருக்கின்றது.
ஆனாலும் 16 தொடக்கம் 18 வயதுடையவர்களை அவர்களுடைய உயிர், சுகாதாரம், கல்வி, மற்றும் உளவிருத்தி என்பவற்றைப் பாதிக்கும் தொழில்களில் ஈடுபடுத்து வதையும், பாதுகாப்பற்ற தொழில்கள் மற்றும் இரவு நேர தொழில்களிலும் ஈடுபடுத்துவதை சட்டம் அனுமதிக்க வில்லை என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார். தெரு விற்பனை, போதைப் பொருள் மது வியாபாரம் பண வருவாய் பலனுள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், விபசாரம், இணையதள வர்த்தக நடவடிக்கைகள் என்பவற்றில் இவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, 16 வயது வரையில் சிறுவர்களுக்குக் கட்டாயமாகக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டமும் நடைமுறையில் இருக்கின்றது என்பதும் ஹஜஷாலினியின் மரணம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியமாகும்.
மலையகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள்
குடும்ப வறுமை நிலைமை காரணமாகவே ஹிஷாலினி வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தார். சிறுவர் கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ள போதிலும் மலையக சிறுவர்கள் அந்தக் கல்வி வாய்ப்பைப் பெற முடியாதவர்களாக அவர்களுடைய குடும்பப் பொருளாதார நிலைமை தொடர்ச்சியாகத் தடையாக உள்ளது. மேலும் மலையக மக்கள் பெருந்தோட்டத் தொழில் துறையிலேயே தங்கியிருப்பதனால் அரசாங்கத்தின் குடிமக்களுக்கான நலத் திட்டங்கள் அவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்து வருகின்றன.
சிறுவர்களுக்குரிய கல்வி உரிமை சிறுவர் உரிமைகள் தொடர்பில் சமூக ரீதியாக மலையக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது பெரும் குறைபாடாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை உரிய வீட்டு வசதிகள் இல்லாமை, போதிய சம்பளக் கொடுப்பனவுகள் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக வறுமையில் வாட வேண்டிய நிலைமை என்பன மலையக மக்களை சமூக, பொருளாதார ரீதியில் பாதித்திருக்கின்றன.
ஆங்கிலேயரினால் தமிழகத்தில் இருந்து தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் தொழில் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட மலையக மக்கள் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், பெருந் தோட்டத்துறை கட்டமைப்பு சார்ந்த வாழ்நிலையில் இருந்து விடுபடாதவர் களாகவே உள்ளனர்.
வாழ்க்கை, வாழ்வியல், கல்வி, சுகாதாரம், பொருளதாரம் உள்ளிட்ட நிலைமைகளில் மலையக மக்களையும் அந்த சமூகத்தையும் முறையானதோர் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் மேம்படுத்தவதற்கான அரசியல் முயற்சிகள் முறையாகப் பேணப்பட வில்லை. தேர்தல்களில் அந்த மக்களின் வாக்குகள் பறிக்கப் படுகின்றனவே தவிர அரசியல் அந்தஸ்து சார்ந்த நலத்திட்டங்களின் மூலமாக அவர்களுடைய நலன்களில் அரசியல்வாதிகள் கவனம் முறையாகக் கவனம் செலுத்திச் செயற்படத் தவறியுள்ளதையும் ஹிஷாலினி தனது மரணத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளர்.
அவருடைய மரணத்துக்கு நியாயமும் நீதியும் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் அவர் சார்ந்த மலையக சமூகத்தின் சமூக, கல்வ, பொருளாதார, உளவியல் மற்றும் அரசியல் உரிமை உள்ளிட்ட பல பரிமாணங்களிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
பி.மாணிக்கவாசகம்