ஈரான், ஈராக், துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. இதில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்ற பெயரிடப்பட்டுள்ளது.
டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே டெல்டா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிலநாடுகளில் கொரோனா 3-ம் அலை தாக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா 4-ம் அலை தாக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய இயக்குனர் அகமத்- அக்-மன்தாரி கூறியதாவது:-
கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா 4-ம் அலையை தூண்டியுள்ளது. ஈரான், ஈராக், துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.
இந்த பிராந்திய மக்கள் தொகையில் 5.5 சதவீதம் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, மற்ற அனைத்து பகுதிகளிலும் டெல்டா மாறுபாடு வைரஸ் வேகமாக பரவுவது கவலை அளிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் கொரோனா 4-ம் அலையில் இருக்கிறோம்.
முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு 55 சதவீதமும் உயிரிழப்பு 15 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.