ஹரப்பா நகரமான தோலாவிரா உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு: யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு

ஹரப்பா நகரமான தோலாவிராவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித் துள்ளது.

சீனாவின் புசோவ் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44-வதுகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போதுதான் தெலங்கானா மாநிலத்தில் உள்ள காக்கதீய ருத்ரேஸ்வரா கோயிலை (ராமப்பா கோயில்) உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.

தற்போது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியிலுள்ள மிகப் பழமையான ஹரப்பா நகரமான தோலாவிராவையும் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.

உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்தியதுணைக் கண்டம் முழுவதும் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்திருந்தது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் சிந்துசமவெளி நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் வட இந்தியாவின் பல இடங்களில் இருக்கின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் எல்லையில் குஜராத் மாநிலத்தின் கட்ச் பிராந்தியத்தில் உள்ள தோலாவிரா மற்றும் அகமதாபாத் நகர் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் உள்ளன. இதில்மிக முக்கியமானதாக கருதப்படுவது தோலாவிரா நகரம்தான்.

தோலாவிரா நகரம் என்பது சதுப்பு நிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே அமைந்துள்ளது. சிந்துசமவெளி மக்கள், பாலைவனத்துக்குள் மிக செழிப்பான வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்ந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தோலாவிராவின் மிகப் பெரியஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பிரம்மாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தோலாவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தின் கீழே அமைந்துள்ள நீர் கட்டமைப்புகள் பிரம்மாண்டமாக உள்ளன.

தோலாவிரா நகரத்தின் அருகேமழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடிய மான்சர் ஆற்று வெள்ளத்தை அப்படியே தங்கள் நகருக்குள் திசைதிருப்பி சேமித்து தோலாவிராவில் வாழ்ந்த சிந்துசமவெளி மக்கள் பயன்படுத்தி உள்ளனர். கால்வாய், நிலத்தின் கீழே பெரும் நீர்த்தொட்டிகள் என தோலாவிராவில் அமைந்துள்ளன.

இந்த அமைப்புகளை ஆய்வுசெய்த பின்னரே உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் தோலாவிரா சேர்க்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிப்பையும் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தோலாவிரா நகரம் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.