ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் சோழர் காலச் சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப்பொருட்கள் உட்பட 14 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதை அருங்காட்சியகம் கண்டறிந்துள்ளது. இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்செவிட்ச் கூறும்போது, ‘‘இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சியால் கலாச்சார ரீதியான பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதில் பெருமைப்படுகிறோம். விரைவில் சிலைகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும். சிலை கடத்தல் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறோம்’’ என்றார்.