“ஒவ்வொரு நாளும் எனது நிலைமை மோசமாகவே இருக்கிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறும் சாஹப் உடின் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி நவுருத்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 108 அகதிகளில் ஒருவர். அதே போன்று பப்பு நியூ கினியா தீவிலும் 125 அகதிகள் சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அரசால் படகு வழியாக வரும் அகதிகள் தொடர்பான கொள்கையின் கீழ் இத்தீவுகளில் சிறை வைக்கப்பட்டவர்கள். கடல் வழியாக தஞ்சமடையும் எந்த அகதிகளும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதே அக்கொள்கை.
வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் ரீதியான அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து 25 வயது இளைஞராக படகு வழியாக வெளியேறிய சாஹப்புக்கு இன்று வயது 33. வங்கதேசத்தில் இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது அவரது வலது கால் உடைந்திருக்கிறது.
இதனால் நவுருத்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த இவரால் வலது கால் முட்டியை மடக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது 2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு மருத்துவரிடம் பரிசோதிக்காமலே அவரை அதிகாரிகள் நவுருத்தீவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
அதே போல், அவரது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பமும் எந்த காரணமும் சொல்லப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் மீள் குடியமர்த்தப்பட மாட்டார் எனப்படுகிறது.
இவரைப் போன்ற பல அகதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிச்சயத்தன்மையற்ற சூழலினால் அகதிகள் மனநலச் சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.