2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின் பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 2013ல் ஆஸ்திரேலியாவை படகு வழியாக அடைய முயன்ற 23 வயது ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் Reza Berati மனுஸ்தீவில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அங்கு நடந்த கலவரத்தின் போது முகாம் பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவர் கொலைச் செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த வழக்கில் பாதுகாப்பு அதிகாரிகளான Joshua Kaluvia, Louie Efi ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, தஞ்சக்கோரிக்கையாளரின் பெற்றோரான Farideh Baralak மற்றும் Torab Berati ஆஸ்திரேலிய அரசு மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தன்மை குறித்து குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் மகனுக்கான நீதி கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
“ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிந்தே குடிவரவுத் தடுப்பில் உள்ள நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இவ்வாறான மேலும் பல வழக்குகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம், ” எனக் கூறியிருக்கிறார் மனித உரிமைகள் வழக்கறிஞரான ஜார்க் நியூஹவுஸ்.