இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு ‘விஸ்வகுரு’ அல்லது ‘உலகிற்கு மாஸ்டர்’ ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் கொள்கைளில் பாரிய சரிவு என்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொறின்பொலிஸி (Foreign policy)என்ற கொள்கை இணையத்தளம் கூறுகின்றது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதாரத் தடுமாற்றம் ஒரு பில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகமே. இந்தத் தடுமாற்றம் சீனாவுக்கு எதிரான குவாட் அமைப்பின் கொள்கையில் தளர்வையும் உருவாக்கலாம். அது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்காவின் கனவுக்கு ஆபத்தாகவும் மாறும்

இந்தோ- பசுபிக் மூலோபாயத்திற்காக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வரும் குவாட் (Dialogue- Quad) Quadrilateral Security) என்ற அமைப்பின் சீனாவுக்கு எதிரான திட்டங்களுக்காகக் கடுமையாக உழைக்க வே்ண்டும் அல்லது குவாட் தனது நோக்கத்தை அடைவதில் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படலாம்.

இதன் பின்னணியில் இந்தியாவை எச்சரிக்கும் நோக்கிலும் அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியா விலகிச் செல்ல முடியாதவாறும் இந்த இணையத்தளக் கட்டுரை விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதாவது அமெரிக்க இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிச் செல்ல முடியாது என்பதையே பொறின்பொலிஸி இணையத்தளம் வலியுறுத்துகிறது.

ஏனெனில் நோய்த்தாக்கத்தால் இந்தியா பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் சீனா தன்னை பலப்படுத்தியும் வருகின்றது. பொருளாதார உறவுகளை இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் பேணுவதற்கான திட்டங்களைச் சீனா வகுத்துமுள்ளது. இந்திய எல்லைகளிலும் அதன் இராணுவப் பலத்தை சீனா அதிகரித்தும் வருகின்றது.

இந்தியாவின் தனிப்பட்ட மகிமைக்கான தேடலில் ஏற்றுமதியின் அளவை அதிகரித்திருந்த மோடி, இருதரப்பு உதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக, அதன் பேரழிவு மேலாண்மை ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தனது கொள்கையில் மாற்றங்களைச் செய்துள்ளார் என்பதையே சமீபகால நகர்வுகள் காட்டுகின்றன.

அமெரிக்காவிலிருந்து 20 மில்லியன் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகளைப் பெறுவதற்காக மோடி காத்திருக்கிறார். அமெரிக்கா மற்றும் ரஷியா போன்ற பாரம்பரியப் பங்காளிகளிடமிருந்து இந்தியா உதவி பெறுவது போதுமானது,

ஆனால் கடந்த சில மாதங்களாகச் சீனாவிலிருந்து வரும் மருத்துவப் பொருட்களையும் மற்றும் அவசரகால உதவிகளையும் இந்தியா ஏற்றுள்ளது. பாக்கிஸ்தான்கூட மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு உதவ ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

சிறிய நாடான பூட்டானிலிருந்து தினமும் 88,000 பவுண்ஸ் பெறுமதியான மருத்துவ ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளமை இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமானது என்பதையே காட்டுகின்றது. இந்தியாவின் தேவையைப் பொறுத்து எந்த நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுவதற்கு தயாராக இருப்பதாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் என்ற தன்னார்வ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவத் தயார் என்று இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. ஆனாலும் பாகிஸ்தானிடம் இருந்து உதவி பெற டில்லிக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு.

 

ஈழப் போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வாறு, எந்தச் சந்தர்ப்பங்களில் இந்தியாவை ஏமாற்றினார்கள் என்பதற்கும், இந்திய இராஜதந்திரத் தோல்விகளுக்கான உதாரணங்களும் பட்டறிவுகளாகக் கண் முன்னே தெரிகின்றன

 

ஆகவே அவசர காலத்தில் உதவி பெறுவதற்காக இந்தியா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தனது கொள்கையில் மாற்றம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது 1991 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிரதேசத்தில் பூகம்பம் ஏற்பட்டது. 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2002 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் கடுமையான புயல் வீசியது. 2004 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் வெளிநாடுகளில் இருந்து இந்தியா உதவியைப் பெற்றுக் கொண்டது.

ஆனால் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தவுடன, 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிரதேசத்திலும 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திலும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வெளிநாட்டு உதவிகளை மோடி அரசாங்கம் மறுத்திருந்தது.

2018 ஆண்டு கேரளா மாநிலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுச் சீரழித்தபோது, ஐக்கிய அரபு இராஜியத்திடம் இருந்து 700 கோடி ரூபாவைப் பெற்றுக்கொள்ள கேரள அரசு இணக்கம் தெரிவித்தது. ஆனால் இதற்குத் தடை விதித்த மோடி, கேரளாவுக்குத் தேவையான உதவியைப் புதுடில்லி செய்யுமென்று உறுதியளித்திருந்தார்.

இதேபோன்று 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் உருவானபோது அதனைத் தேசிய பேரிடர் என்று கூடப் பிரகடனப்படுத்த மோடி மறுத்துவிட்டார். வெளிநாட்டு உதவிகளைப் பெறவும் மோடி தடுத்துவிட்டார்.

ஆனால் கோவிட் 19 நோய்த் தாக்கத்தின் பின்னரான சூழலில் இந்தக் கொள்கைகளை மாற்றிச் சுமார் 20 இற்கும் அதிகமான நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற மோடி இணங்கிவிட்டார். அல்லது கீழ் இறங்கிவிட்டாரெனலாம். நோய்த் தாக்கம் மோடியின் தேசியவாதக் கொள்கைக்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறலாம். இந்திய முதலீட்டாளர்களும் வர்த்தகப் பிரதிநிதிகளும் இந்திய பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவை விஸ்வகுருவாக மாற்றிவிட்டாரென்றும், இந்துத்துவா அல்லது ஒரே வகையான இந்துத் தேசியவாதத்தை மோடி உயர்த்திவிட்டாரெனவும் அவரது உள்ளுர் அரசியல் ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர். பெருமை பேசினார்.

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சமாந்தரமாக இந்தியாவைக் கருதியுமிருந்தனர். ஆனால் இன்று நிலமை தலைகீழாகியுள்ளது. மோடியின் தேசியவாதக் கனவு சிதைந்து விட்டது. மோடியின் வெளியுறவுக் கொள்கையும் வலிமையென அழைக்கப்படும் இந்தியத் தேசியவாதப் பெருமையும் மற்றும் உலகளாவிய மரியாதை ஆகியவற்றின் மாளிகை கொவிட் தொற்றுநோயால் இடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதென பா.ஜ.க வினால் கருதப்பட்டாலும், இந்த இழப்பில் இருந்து மீள இந்தியா எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இது தேசியக் கொள்கையை நிமிர்த்த வேண்டிய மோடியின் முயற்சிக்கு மிகவும் கடினமான எனவும் கூறலாம்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற குவாட் அமைப்பின் கூட்டத்தில், 2022 ஆம் ஆண்டளவில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு ஒரு பில்லியன் வரையான கோவிட் -19 தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய குவாட் உறுப்பு நாடுகள் நிதியை வழங்குமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவின் தற்போதைய பொருளாதாரத் தடுமாற்றம் ஒரு பில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகமே. இந்தத் தடுமாற்றம் சீனாவுக்கு எதிரான குவாட் அமைப்பின் கொள்கையில் தளர்வையும் உருவாக்கலாம். அது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்காவின் கனவுக்கு ஆபத்தாகவும் மாறும்.

தெற்காசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த இந்தியாவின் தற்போதைய அவல நிலையைச் சாதகமாக்கச் சீனா ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளது. கடந்த செவ்வாயன்று, சீன வெளியுறவு அமைச்சின் ஏற்பாட்டில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பீஜிங்கில் உள்ள தூதுவர்கள் சந்தித்து உரையாடியிருக்கின்றனர்.

கொவிட் -19 க்கு எதிரான ஒத்துழைப்புக்காக உதவிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான உரையாடலாகவே அந்த சந்திப்பு நடந்தது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன, மேலும் பலவற்றை எதிர்பார்க்கின்றன

ஆனாலும் மோடி அரசாங்கத்தினால் இந்த நாடுகளுக்கான தடுப்பூசிகளைத் தொடர்ச்சியாக வழங்க முடியவில்லை. இதனால் இலங்கை போன்ற நாடுகள் சீனாவைப் பின் தொடருகின்றன. இதன் காரணமாக தெற்காசியாவில் கவர்ச்சிகரமான, நம்பகமான பங்காளியாக இரு ஆசிய ஜாம்பவான் நாடுகளுக்கிடையிலான பந்தயத்தில், இந்தியா, சீனாவுக்கு பின்னால் என்று பொறின்பொலிஸி என்ற இணையத்தளம் வர்ணித்துள்ளது.

புதுடில்லியில் இருந்து வெளிவரும் டயனிக் பஹாஸ்கர் (Dainik Bhaskar) என்ற நாளேடு ஒன்றுக்குக் கடந்த வியாழக்கிழமை மோடி அரசாங்கம் திடீரெனத் தடை விதித்தமை மோடியின் தேசியவாதக் கொள்கையின் சரிவைக் காண்பிக்கிறது

சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இஸ்லாமபாத், பிஜீங்குடன் புதுடில்லி நடத்தும் அரசியல், பொருளாதார உரையாடல்களில் இருந்து இனிமேல் விலகிச் செல்ல இந்தியாவால் முடியாது. பொருளாதாரம் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இரட்டை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இன்னும் சவாலான முன்மொழிவாகவே உள்ளது. இந்த முத்தரப்பு உரையாடலில் பாகிஸ்தானுக்கு எதிர்பாராத நன்மையும் காத்திருக்கிறது எனலாம்.

இவ்வாறானதொரு நன்மை இலங்கைக்கும் உண்டு. சீனாவுடனான இலங்கையின் பொருளாதார உறவும் சீன நிதியுதவிகளை அதிகமாகப் பெறுவதற்கான முயற்சியும் இலங்கைக்குக் வெற்றிகரமாக அமைந்துள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பில் உள்ள சீனத் தூதுவருடன் நடத்திய உரையாடலில் ஐநூறு மில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அது மாத்திரமல்ல தடுப்பூசிகளை புதுடில்லி வழங்க மறுத்த பின்னணியில் சீனாவிடம் இருந்து தடுப்பூசிகளை தொடர்ச்சியாகப் பெறுவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை. இந்தோ- பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்தும் தடுப்பூசிகளைப் பெறுவது உள்ளிட்ட இலங்கைக்கான நிதியுதவிகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் பற்றியும் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தூதுவர்களோடு பேசியுள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை வெட்கமின்றி எந்தவொரு நாட்டிடமும் கையேந்த முடியும் ஆனால் ஆசிய ஜம்பவான் என்று தன்னை அழைக்க வேண்டுமென விரும்பிய மோடி அரசாங்கத்தால் அவ்வாறு முடியாது.

ஆனாலும் கொவிட் நோய்த் தாக்கத்துக்குப் பின்னரான சூழலில், இது எமது இந்தியா, இது எமது உற்பத்தி, வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்ற அந்தக் கர்வத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கான தகுதியை இந்தியா இழந்துவிட்டது.

மோடியின் அரசியல். பொருளாதார நகர்வுகளினால் தாராளமய ஜனநாயகம் என்ற இந்தியாவின் நற்பெயர்கூட நோய்ப்பரவலுக்கு முன்னரே இழக்கப்பட்டுமுள்ளது.

இராஜதந்திரம் ஒரே நேரத்தில் பல பந்துகளை காற்றில் வைத்திருக்கிறது, மேலும் எதையும் கைவிடாத நம்பிக்கையையும் திறமையையும் காட்டுகிறது. இப்போது அனைத்துப் பந்துகளும் தரையில் கிடப்பதால் அவற்றை எடுத்து மீண்டும் ஆரம்பிக்க இந்தியாவுக்கு மன வலிமை, நேர்மை மற்றும் அசாதாரண முயற்சி தேவைப்படும்’ என்று வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகிறார்.

ஆகவே நோய்ப் பரவலினால் தனது தேசியவாதக் கொள்கையில் தளர்வுகளை ஏற்படுத்தியது போன்று, இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையிலும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஈழப் போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வாறு, எந்தச் சந்தர்ப்பங்களில் இந்தியாவை ஏமாற்றினார்கள் என்பதற்கும், இந்திய இராஜதந்திரத் தோல்விகளுக்கான உதாரணங்களும் பட்டறிவுகளாகக் கண் முன்னே தெரிகின்றன.

அதனடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட இலங்கை பற்றிய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்பதையே தற்போதைய புவிசார் அரசியல் சூழல் இந்தியாவுக்குக் கற்பிதம் செய்கின்றன.

மோடியின் தேசியவாதக் கொள்கையும் அதன் பலவீனங்களுமே இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சீனா பக்கம் செல்லத் தூண்டியது என்றும் கூற முடியும்.

இந்தியா ஒரு சமஸ்டி ஆட்சி நாடு எனப் பெருமையாகச் சித்தரிக்கப்பட்டாலும், ஒற்றையாட்சித் (Unitary State) தன்மை கொண்ட அதன் அரசியல் யாப்பும் மறுசீரமைக்கப்பட வேண்டுமென்பதை மோடியின் தேசியவாதக் கொள்கையின் சரிவு புடம்போட்டுக் காண்பித்துள்ளது.

புதுடில்லியில் இருந்து வெளிவரும் டயனிக் பஹாஸ்கர் (Dainik Bhaskar) என்ற நாளேடு ஒன்றுக்குக் கடந்த வியாழக்கிழமை மோடி அரசாங்கம் திடீரெனத் தடை விதித்தமை மோடியின் தேசியவாதக் கொள்கையின் சரிவைக் காண்பிக்கிறது.

நோய்ப் பரவலினால் தனது தேசியவாதக் கொள்கையில் தளர்வுகளை ஏற்படுத்தியது போன்று, இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையிலும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டும்

இந்தி மொழியில் வெளியாகும் இந்த நாளேடு, தினமும் சுமார் நான்கு மில்லியன் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நாளேட்டின் நிர்வாகம் வரி செலுத்தவில்லை என்று கூறியே இந்திய வரி மதிப்பீட்டு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

ஆனால் புதுடில்லியில் உள்ள இந்தியப் பத்திரிகைப் பேரவை அதற்குக் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மோடி அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் எழுந்த அதிருப்திகள் தொடர்பான செய்திகள், கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலேயே குறித்த நாளேட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதாக இந்த நாளேட்டில் பணியாற்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஊடக சுதந்திரத்துக்கு மோடி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்றும் கொவிட் நோய்த் தாக்கத்தினால் கடந்த மூன்று மாதங்களாக மக்கள் படும் இன்னல்கள் மற்றும் உயிரிழந்த மக்களின் படங்களை இந்த நாளேடு பிரசுரித்ததால் மோடி அரசாங்கம் ஆத்திரமடைந்ததாகவும் குறித்த ஊடக நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

மோடியின் தேசியவாதக் கொள்கையை விமர்சித்து வரும் மேலும் பல ஊடக நிறுவனங்கள் மீதும் ஏதோவொரு குற்றச்சாட்டை முன்வைத்துத் தடை விதிக்கப்படலாமெனவும் டில்லியில் உள்ள செய்தியாளர்கள் சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆகவே மோடியின் தேசியவாதக் கொள்கைக்குத் தற்போது ஏற்பட்டுள்ள அவல நிலமை என்பது, சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும்.