அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய மக்கள் அமைப்பை உருவாக்குவதற்காக எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி கூறியிருந்தது.
இதனடிப்படையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்கள் மற்றும் லங்கா சமசமாஜக் கடசியின் தலைவர்கள் இடையில் நேற்று சமசமாஜக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதாக லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண, பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் திஸ்ஸ விதாரண உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் குமார் குணரட்னம், கல்விச் செயலாளர் புபுது ஜாகொட, பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள குமார் குணரட்னம், நாட்டின் பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலைமைகள் மற்றும் பிராந்திய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைத்துள்ள யோசனை சம்பந்தமான இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செல்வந்தர்களிடம் வரியை குறைவாக அறவிட்டு, சாதாரண மக்கள் மீது அதிக வரிகளை சுமத்தியுள்ளமை சம்பந்தமாக இதன் போது பலன் தரும் வகையில் கலந்துரையாடியதாகவும் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.