இலங்கையில் ஏற்பட்ட கொரோனா ; வைரஸ் பரவல் ; காரணமாக சுகாதாரநலன், வாழ்வாதாரம், கல்வி, சமூக உறவுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்களிலும் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் இந்த நெருக்கடி கையாளப்பட்ட விதம் ஆகியவை தொடர்பில் பொதுமக்களின் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ளும் நோக்கிலான ஆய்வொன்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது பல்வேறு விடயப்பரப்புக்களின் கீழ் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தைப் பயன்படுத்தி, நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள முக்கிய நான்கு இனச்சமூகங்களையும் கிராமப்புற, நகர்ப்புற சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய 1000 பேரை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
;அதன்மூலம் பெறப்பட்ட விபரங்களை அடிப்படையாகக்கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் முதலாவது அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்களின் திருப்தி மட்டம், நபர்களை நியாயமாக நடத்துதல், சமூகங்களுக்கிடையிலான உறவுகள், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் பற்றிய விழிப்புணர்வு, அதுகுறித்த தகவல்களைப் பெறக்கூடிய மூலாதாரங்கள், வருமான வீழ்ச்சியின் விளைவுகளைக் கையாள்வதற்கான உத்திகள், கல்வி மற்றும் சுகாதார சேவையின் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கண்ணோட்டம் எவ்வாறானதாக அமைந்துள்ளது என்பது குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.