நியூசவுத் வேல்ஸ் 145 பேருக்கு கோவிட் தொற்று! குயின்ஸ்லாந்தில் புதிதாக ஒருவருக்கு

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 145 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று பதிவாகிவருகிறது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 145 பேரில் 66 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 79 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இவர்களில் ஆகக்குறைந்தது 51 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் மாநில Premier Gladys Berejikilian கோரிக்கைவிடுத்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் 98,158 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம்  வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6 பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொற்றுக்கண்ட அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.coronavirus.vic.gov.au/exposure-sites என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் 25,404 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.

விக்டோரியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை நாளை நள்ளிரவுடன் முடிவடைகின்ற பின்னணியில் இதை நீடிப்பதா இல்லையா என்ற முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு 12.01 முதல் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து திரும்பிவந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பிய நபர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கோவிட் கட்டுப்பாடுகளைமீறி நியூ சவுத் வேல்ஸிலிருந்து குயின்ஸ்லாந்துக்குள் நுழைந்த ஆண் மற்றும் அவருடன் தொடர்புடைய விமானப்பணிப்பெண் ஆகியோருக்கு ஆபத்தான டெல்டா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளநிலையில் குயின்ஸ்லாந்து மாநிலம் அதீத எச்சரிக்கைநிலையில் உள்ளது.