செவ்வாய் கிரகத்தில் புதிய நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிரகத்தில் தற்போது மிகப்பெரிய நீர்த்தேக்கம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்தது. அண்மையில் நாசா செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி சோதனை செய்தது.

விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து வசதிகளும் இருப்பதாக தெரிவித்தது. தற்போது, செவ்வாய் கிரகத்தில் உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை உள்ள ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, அங்கு இதற்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா கூறுகிறது.