குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து சம்பவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.
Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து பிரிஸ்பேனுக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருக்கிறது.
Lotsy Jose குடும்பத்தின் கார் Toowoomba அருகே Captains Mountain பகுதியில் வைத்து ட்ரக் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதையடுத்து தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதேநேரம் கணவனும் இரு மகன்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையில் தாதியாக பணிபுரிவதற்கான வாய்ப்பு Lotsy Jose-க்கு கிடைத்ததையடுத்து இக்குடும்பம் பிரிஸ்பேனுக்கு குடிபெயர்ந்துசென்றபோதே விபத்து சம்பவித்ததாக இவர்களது உறவினர்கள் SBS மலையாள சேவையிடம் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த Lotsy Jose வேலைவாய்ப்புக்காக மிகுந்த சிரமப்பட்டதாகவும், இவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைத்தவுடன் இந்தியாவிலிருந்த கணவரும் 3 பிள்ளைகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர்; ஆஸ்திரேலியா வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Lotsy Jose-Bipin Ouseph தம்பதியர் ஆஸ்திரேலியாவில் தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆரம்பிக்கவிருந்த தருணத்தில் பேரிடியாக இச்சம்பவம் இடம்பெற்றுவிட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இக்குடும்பம் முதலில் வியாழக்கிழமையே Orange-இலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அங்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை பிற்பகலே அவர்கள் புறப்பட்டுவிட்டதாகவும், இடையில் இவ்விபத்து சம்பவித்துவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் Lotsy Jose குடும்பத்திற்கு உதவும் நோக்கில் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிதிசேகரிப்பு ஊடாக ஒரேநாளில் 3 லட்சம் டொலர்களுக்கு மேல் பண உதவி கிடைத்துள்ளது.
கணவன் Bipin Ouseph-க்கு இன்னமும் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இப்பணம் அவருக்கும் இரு பிள்ளைகளுக்கும் மிகவும் உதவும் எனவும் இறுதிநிகழ்வுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப்பின்னணியில் குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும், 38 வயது ட்ரக் ஓட்டுநருக்கு பாரிய காயமெதுவும் ஏற்படவில்லை எனவும், அவர் தமது விசாரணைகளுக்கு உதவிவருவதாகவும் குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் விபத்து குறித்த தகவல்கள் அல்லது காணொளி ஆதாரங்கள் இருப்பின் அவற்றைத் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு காவல் துறையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.