நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ளநிலை ஒரு ‘தேசிய அவசரநிலை’ என்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant விவரித்துள்ளார்.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 136 பேரில் 77 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 59 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
அதேநேரம் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர் 89 வயதுடைய முதியவர் என தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுக்காண்போர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவியாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளுக்கான pfizer தடுப்பூசி வழங்கலை அதிகரிக்க வேண்டுமென Premier Gladys Berejiklian அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதேவேளை Cumberland மற்றும் Blacktown உள்ளூராட்சிப் பகுதிகளில் வாழும் சுகாதாரத்துறை மற்றும் அவசர சேவைகள் பணியாளர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மாத்திரமே தமது உள்ளூராட்சிப் பகுதிகளுக்கு வெளியேசெல்ல முடியும்.
மக்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக தொற்றுக்கண்ட அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 10 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் நால்வர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 19,000 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை தொற்றாளர்கள் சென்றுவந்த 400க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.coronavirus.vic.gov.au/exposure-sites என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் 43,542 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.