ஈழத்தமிழரின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகவும் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூர தடை உத்தரவு வழங்கி நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.
சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பின், ஒரு குழுவினருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு குழுவினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிசார் மன்றுக்கு தெரிவித்தனர்.
பொலிசாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் மூதூர் நீதவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத்தலைவர் வேதநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசபிள்ளை குகன், உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவுகளை வழங்கினார்.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார் – காயப்படுத்த பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டார்கள். தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்கள காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன – சூறையாடப்பட்டன.
தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
Eelamurasu Australia Online News Portal