Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு / தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு: மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை!

தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு: மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை!

தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் குறித்த தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி John Champion இவர்களுக்கான தீர்ப்பினை அறிவித்தார்.

இதன்படி மனைவிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கணவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மனைவி ஆகக்குறைந்தது 4 ஆண்டுகளை சிறையில் கழித்தபின்னர் பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கணவன் ஆகக்குறைந்தது 3 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டுமெனவும் இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை இத்தம்பதியர் உரியமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும், இவர்களது நடவடிக்கை மனிதாபிமானமற்ற முறையில் அமைந்திருந்ததாகவும் நீதிபதி John Champion தெரிவித்தார்.

இவ்வழக்கின் பின்னணி
மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த தமிழ்ப்பெண், ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் வேலைசெய்ய தயாரான நிலையில் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதிகரித்த வேலைப்பளு காரணமாக இரவில் ஒரு மணிநேரம் மாத்திரமே நன்றாக உறங்கக்கூடிய சூழலில் அவர் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறுவர் பராமரிப்பு, துப்பரவுப் பணி, சமையல், துணி துவைத்தல் போன்ற அனைத்துப் பணிகளுக்குமான ஊதியமாக நாளொன்றுக்கு 3.39 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், வீட்டுக் கதவைத் திறப்பதென்றால்கூட தம்பதியரின் அனுமதிபெற்றுத்தான் திறக்கமுடியும் எனவும், குறித்த பெண் சார்பில் வாதாடிய Richard Maidment தெரிவித்தார்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இப்பெண் கல்வியறிவு அற்றவர் எனவும், 14 வயதில் திருமணம் செய்து 29 வயதில் பாட்டியாகிவிட்டதாகவும், தனது குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காகவே குறித்த தம்பதியருடன் ஆஸ்திரேலியா வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு தடவைகள் ஆஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன்பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது சுற்றுலா விசா எப்போதோ முடிவடைந்துவிட்டபோதிலும் இப்பெண்ணை குறித்த தம்பதியர் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் குறித்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மெல்பன் தம்பதியர்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறுவர் பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை செய்வதற்கு பணச்செலவின்றி ஒருவரை தங்கவைத்துக்கொண்டு தமது வசதியான வாழ்க்கையைத் தொடர்வதே இத்தம்பதியரின் நோக்கம் என குறித்த பெண் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் Richard Maidment தெரிவித்தார்.

ஆனால் குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் முழுவிருப்பத்துடனேயே அவர் தம்முடன் தங்கியிருந்ததாகவும், இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளே என்றும் மெல்பன் தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்துவந்தனர்.

வீட்டு வேலைகளில் உதவிபுரிந்துவந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் ‘அடிமை’ என்ற சொற்பதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும், இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

About குமரன்

Check Also

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகலாம்

அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும் என மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...