விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் நடைமுறையிலுள்ள முடக்கநிலையை ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை நள்ளிரவுமுதல் தளர்த்தமுடியாது என Premier Daniel Andrews அறிவித்தார்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்முடக்கநிலை நீடிக்கப்படவுள்ளது என்ற விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளன.
புதிதாக தொற்றுக்கண்டவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.
அதேநேரம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 15,800 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை தொற்றாளர்கள் சென்றுவந்த 250க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.coronavirus.vic.gov.au/exposure-sites என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் 54,839 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 98 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இவர்களில் 61 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 37 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 98 பேரில் ஆகக்குறைந்தது 20 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை Fairfield, Canterbury-Bankstown மற்றும் Liverpool ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் சுகாதாரத்துறை மற்றும் அவசர சேவைகள் பிரிவு உட்பட அத்தியாவசிய தொழில்துறை பணியாளர்கள் என அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு எவரும் அப்பகுதிகளிலிருந்து வெளியே செல்லமுடியாது.
இதுதவிர சிட்னியின் அனைத்து கட்டுமான பணிகளும் அடுத்த இரு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது. வீடுமனைகளுக்கான அவசரமற்ற திருத்தவேலைகள் மற்றும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்படுகிறது.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாகவே இருப்பதால் மக்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.