நன்றி மறக்கும் அரசியல்!…..

1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு 2001ல் புதுவாழ்வு வழங்கினர் விடுதலைப் புலிகள். இவைகளுக்குக் கிடைத்த பிரதியுபகாரம்……

இலங்கைத் தீவின் அரசியல் பாதை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம் என இரண்டாகத் தனித்தனி வழியில் நீள்கிறது.

சிங்களத் தேசியம் என்பது பௌத்தமும் இணைந்ததாக, கட்சிகளின் வேறுபாடுகளுக்குள்ளும் வளர்ச்சி பெற்றே செல்கிறது. ஆனால், தமிழ்த் தேசியம் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் மாட்டு வால் போல (கீழ்நோக்கி) வளர்ந்து செல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளுக்குள் பிளவு, அதன் முக்கிய பதவிகளுக்குப் போட்டி, தலைமைத்துவத்தில் இருக்கும் தமிழரசுக் கட்சியின் பிரதான வகிபாகத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்று பலவற்றைக் காண முடிகிறது.

மாற்று அணி என்று வந்த மற்றிரு தமிழ்த் தேசியக் கட்சிகளும் நாடாளுமன்ற மற்றும் கேள்வி – பதில் அரசியலுக்குள் தம்மை முடக்கி வைத்துள்ளன. கூட்டமைப்பின் சில செயற்பாடுகள் பற்றி இப்பத்தியின் பிற்பகுதியில் பார்த்துக் கொள்வோம். முதலில் கடந்த வாரம் குறிப்பிட்டவை பற்றிய சில மேலதிக விபரங்களைத் தர வேண்டியுள்ளது.

சிங்கள தேச அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுபவர்கள் பசில் ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவுமே. சில வாரங்களுக்கு முன்னரே இவர்கள் நாடாளுமன்ற மீள்பிரவேசம் செய்தவர்கள். இருவரும் அரசியலுக்குப் புதியவர்கள் அல்ல.

டொன் அல்வின் ராஜபக்ச என்ற மறைந்த மூத்த அரசியல்வாதியின் ஐந்து புதல்வர்களில் பசில் நான்காமவர். சாமல், மகிந்த, கோதபாய ஆகியோரை அடுத்து இன்றைய ஆட்சி பீடத்தில் ஜனாதிபதிக்கு அடுத்தவராக அமர்த்தப்பட்டுள்ளார் இவர். இக்குடும்பத்தின் ஐந்தாவது சகோதரரான டட்லி ராஜபக்ச மட்டும் ஏனோ தெரியாது இன்னும் அரசியலுக்குக் கொண்டு வரப்படவில்லை.

கடந்த வருடப் பொதுத்தேர்தலில் பசில் போட்டியிடவில்லை. பொதுஜன பெரமுன தேசியப் பட்டியலிலும் இவர் பெயர் இருக்கவில்லை. அமெரிக்க பிரஜாவுரிமையுடன் இரட்டைப் பிரஜாவுரிமைபெற்ற இவர் மாறி மாறி அங்கும் இங்கும் வாழ்பவர். எனினும், தேசியப் பட்டியலூடாக எம்.பியாகி விட்டார்.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய அம்சம் எம்.பியாகப் பதவியேற்க முன்னரே நிதியமைச்சராக கோதபாய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததுவே. அகப்பை பிடிப்பவர் அண்ணன் என்றால், இதுவென்ன இன்னும் என்னென்னவோ இடம்பெறலாம்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது பசில் ராஜபக்ச ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து இயங்கியவர் என, கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டதை வாசித்த தமிழ்த் தேசிய பிரமுகர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்படி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள முல்கிரிகல தொகுதியில் சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட பசில் தோல்வியடைந்தார். (இதே தேர்தலில் பெலியத்த தொகுதியில் மகிந்தவும் தோல்வியடைந்தார்).

தோல்வியின் அடுத்த கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாய்ந்து, அன்று மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமினி திசநாயக்கவுடன் இணைந்து கட்சிப் பணியாற்றினார் பசில். 1994ல் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபோது மீண்டும் தமது பழைய சுதந்திரக் கட்சிக்கு பாய்ந்தார். அன்றிலிருந்து தமது தமையனார் மகிந்தவின் வெற்றிக்காக உழைத்து தம்மையும் உயர்த்திக் கொண்டார் இவர் என்பது வரலாறு.

கடந்த தேர்தலில் தனது கட்சியையும் அழித்து தனது தோல்வியையும் உறுதிப்படுத்திய ரணில் வி;க்கிரமசிங்க, தமது கட்சிக்குக் கிடைத்த ஒற்றைத் தேசியப் பட்டியலூடாக மீண்டும் நாடாளுமன்றம் சென்றுள்ளார். ஏதோ ஒருவகையில் தத்தம் கட்சிக்குள் இறங்கு நிலையிலுள்ள ரணிலும் மகிந்தவும் அண்மையில் பிறந்தநாள் நிகழ்வொன்றில் ஒன்றாகவிருந்து உணவருந்தியமை பலருக்கும் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் அதுவும் நடக்கலாம். எதுவும் நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜே.வி.பி. மேற்கொண்ட சேகுவேரா என்ற பெயருடனான சிறிமாவோ அரசைக் கவிழ்க்க எடுத்த முயற்சி ஆயுத பலத்தால் முறியடிக்கப்பட்டது, அப்போது எதிர்க் கட்சித் தலைவராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் புதல்வரான ரவி ஜெயவர்த்தன கைது செய்யப்பட்டிருந்தார். இவர் நன்கு பயிற்சி பெற்ற ஒரு விமான ஓட்டி.

தமது மகனுக்கு ஏதாவது நேரலாமென அஞ்சிய ஜெயவர்த்தன, தொலைபேசி வழியாக பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தொடர்பு கொண்டு ‘ரவி எனது ஒரே பிள்ளை” என்று சொன்னதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்ட சிறிமாவோ, நிபந்தனையுடன் மகனை தந்தையிடம் ஒப்படைத்தார். அன்றிரவே ரவி ஜெயவர்த்தன பாங்கொக்குக்கு அனுப்பப்பட்டார்.

1977 தேர்தலில் சிறிமாவோ ஆட்சி தலைகுப்புற விழ, ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர். ஆட்சிக்கு வந்தார். பாங்கொக்கில் பௌத்த பிக்குவாக மாறியிருந்த ரவி ஜெயவர்த்தன இலங்கை திரும்பி, தமது தந்தையின் நிர்வாகத்தில் அதிரடிப் படையை உருவாக்கி அதன் பிரதான தளபதியானார். தமது மகனைக் கருணை அடிப்படையில் 1971ல் விடுதலை செய்த சிறிமாவோவின் குடியுரிமையைப் பறித்து தேர்தல்களில் போட்டியிட விடாது தடுத்து தமது ஷநன்றிக்கடனை| நிறைவு செய்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ச தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைக்க முயன்றும் முடியாத நிலையில், நள்ளிரவில் ரணிலைத் தொடர்பு கொண்டு தமக்கு பாதுகாப்புக் கேட்டார். உடனடியாக விமானப்படையின் இரண்டு உலங்கு வானூர்திகளை அலரி மாளிகைக்கு அனுப்பி வைத்த ரணில், மறுநாள் விடிவதற்கு முன்னர் மகிந்தவையும் அவரது குடும்பத்தினரையும் பௌத்திரமாக அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தார்.

இதற்குப் பிரதியுபகாரமாக(?) 2018 அக்டோபர் 26ம் திகதி மகிந்த ராஜபக்ச என்ன செய்தார்? ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அகற்றிய மைத்திரிபால சிறிசேன, அந்தக் கதிரையில் மகிந்தவை அமர்த்தியபோது அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஆனால், சட்டத்தின் துணைகொண்டு 46 நாட்களின் பின்னர் டிசம்பர் 18ல் ரணில் மீண்டும் பிரதமராக, துயரத்துடன் அக்கதிரையிலிருந்து மகிந்த அகல நேர்ந்தது.

இவ்வகையான நின்று குழிபறிக்கும் நன்றி மறவா அரசியல் நிகழ்வுகள்(?) இலங்கையில் பல இடம்பெற்றன. சிங்கள அரசியலில் மகிந்த உருவாக்கி, உயர்வாக்கிய பலர் இன்று மகிந்தவுக்கு நாமம் போடுகின்றனர். தமது சகோதரர்கள் ஒவ்வொருவரையும் அரசியல் அரியாசனத்துக்கு ஏற்றியவர் இவரே. ஆனால், அந்நாட்டின் பூர்வீக குடிகளுக்கு, சிறுபான்மையினங்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு அவரது சகோதரர்களே இப்போது அவருக்குத் தண்டனை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய நகர்வுகளைப் பார்க்கும்போது மகிந்தவின் புதல்வர்கள் மூவருக்கும் – முக்கியமாக முதல் மகன் நாமலுக்கு பிரதமர் பதவி என்பது எட்டாக் கனியாகும் போக்கே காணப்படுகிறது.

பசிலின் மனைவி புஸ்பா ராஜபக்ச, மகன் அசங்கா ராஜபக்ச, கோதபாயவின் மகன் மனோஜ் ராஜபக்ச, சாமலின் மகன் சசீந்திர ராஜபக்ச (கோதபாய ஆட்சியின் ஆரம்பத்தில் சிறுதிணைக்களங்களின் ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற இவர் அண்மையில் மீளமைக்கப்பட்ட நிர்வாகத்தில் பல முக்கிய திணைக்களங்களின் ராஜாங்க அமைச்சரானவர்) ஆகியோர் வரிசையில் நிற்கின்றனர் என்பதை உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற காட்சியையே தமிழர் தேச அரசியலிலும் காணமுடிகிறது. 1977 தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் திருமலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் சம்பந்தனின் நாடாளுமன்ற அரசியல் வாழ்வு ஆரம்பமானது.

ஆனால், 1989ம் ஆண்டு, 1994ம் ஆண்டுத் தேர்தல்களில் இவரால் வெற்றிபெற முடியவில்லை. 1997ல் திருமலை மாவட்டத்தின் எம்.பியாகவிருந்த தங்கத்துரையின் மரணத்தின் பின்னரான வெற்றிடத்துக்கு நியமனம் ஆகி எம்.பியானார் ஆயினும் 2000ம் ஆண்டுத் தேர்தலிலும் சம்பந்தன் தோல்வியையே தழுவினார்.

2001ம் ஆண்டு அக்டோபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடி வழிகாட்டலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானதையடுத்து அதனூடாக அந்த வருடத் தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தனால் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது. (இந்த வெற்றியை விடுதலைப் புலிகள் போட்ட பிச்சை என்று தமிழ் அரசியல் விமர்சகர் ஒருவர் அப்போது குறிப்பிட்டது ஞாபகமிருக்கிறது).

கூட்டமைப்பின் தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்வதனூடாக அன்றிலிருந்து இன்றுவரை சம்பந்தன் நாடாளுமன்ற ஆசனத்தில் உள்ளார். கடந்த வருடத் தேர்தலில் சிறுதொகை வாக்குகளால் மட்டுமே இவரால் வெற்றிபெற முடிந்ததை மறக்க முடியாது.

2009 முள்ளிவாய்க்காலில் விடுதலைப் போராட்டம் உறைநிலைக்குச் சென்றதையடுத்து கைமாறிய தமிழர் தலைமை (கூட்டமைப்பு) தங்களுக்குள் அடிபடுவதால் தமிழரின் அன்றாட வாழ்வுரிமை, பூர்வீக மண், பொருளாதார வளம் எள்பவை அழிக்கப்படுகின்றன. எனினும், தமிழ்த் தேசிய அரசியல் காப்பாற்றப்படுமென்ற நம்பிக்கை இவர்களின் செயலின்மையால் இழக்கப்பட்டு வருகிறது.

அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ காலியாகும் என்ற சிந்தனையில் குழறுபடிகள் உள்வீட்டுக்குள் கங்கணம்கட்டி இடம்பெறுகிறது. சிறை மீண்ட செம்மல் தன் தகைமையை எடைபோடுகிறார். பின்கதவால் நுழைக்கப்பட்டவர் முன்கதவில் காத்து நிற்கிறார். வெளிநாடொன்றிலிருந்து இறக்கப்பட்டவர் குறி வைத்துக் கொண்டிருக்கிறார். இவை எதுவும் தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்கல்ல. தங்கள் இருப்பை உயர்த்திக் கொள்ளவே.

சிங்களத் தேசியம் பௌத்தத்தை முன்னிறுத்தி சீன நிதி வளத்தில் வளர்கிறது. தமிழ்த் தேசியம் தனது பாதையைத் துறந்து, கடந்த காலத்தை மறந்து, அரசியலை இழந்து வாடிக்கொண்டு போகிறது.

பனங்காட்டான்