கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு ; புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்ப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினத்திலிருந்து (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வரும்வகையில் அவற்றை மேலும் தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியநிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி விகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மதவழிபாட்டுத்தலங்களையும் முழுமையாகத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை, மதரீதியான உற்சவங்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் பிரத்யேகமாக வெளியிடப்படவுள்ளன.