குணநலன் அடிப்படையில் விசா ரத்து, காலவரையற்ற தடுப்புக்காவல்

ஆஸ்திரேலியாவில் குணநலன் அடிப்படையில் விசா ரத்து செய்யப்படுபவர்கள் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதாகவும் இந்த முறையை தடுப்பதற்கான போதிய பாதுகாப்புகள் இல்லை என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையாளர் Rosalind Croucher எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பில் உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்திருக்கிறார்.

புலம்பெயர்வு சட்ட விதி 501-ன் கீழ் குணநலன் அடிப்படையில் அல்லது குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது தவறான செய்கைகளில் ஈடுபடும் குழுவில் உள்ளவராக அறியப்பட்டால் ஒரு வெளிநாட்டினரின் விசா ரத்து ஆஸ்திரேலிய அரசுக்கு அதிகாரம் உண்டு.

இந்த சூழலில், இவ்வாறு விசா ரத்து செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இது குறித்த விசாரணையை மனித உரிமை ஆணையம் மேற்கொண்டிருக்கிறது.

“விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பில் உள்ளவரின் நிலைக் குறித்து தீர்மானிக்கப்படும் வரை விசா ரத்தானவர் நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்படும் ஆபத்தான நிலை நிலவுகிறது,” என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற முறையினால் கடந்த காலங்களை காட்டிலும் விசா ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் கூடுதலான அளவில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 2020 கணக்குப்படி தடுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 711 ஆக உள்ளது.