ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது- ஆய்வுத்தகவல்

அர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது.

காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற 2 அடினோ வைரஸ் கலவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிற இந்த தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 92 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் ஏராளமான மக்களுக்கு விரைவாக பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இரு டோஸ் தடுப்பூசிகளைவிட ஒற்றை டோஸ் தடுப்பூசி பலன் அளிக்குமா என அர்ஜெண்டினா நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ‘செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

அதில் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு தற்போது இந்த தடுப்பூசியின் ஒற்றை ‘டோஸ்’கூட வைரசுக்கு எதிராக நல்ல பலனைத்தருவது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி ஆராய்ச்சியாளர் ஆண்டரியா கமர்னிக் கூறுகையில், “உலகின் பல பிராந்தியங்களில் தடுப்பூசி வழங்கல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, சீரான, சமமான வினியோகம் இல்லை. எனவே தடுப்பூசி உத்திகளை மேம்படுத்த நோய் எதிர்ப்புச்சக்தி குறித்த தகவல்கள் அதிகாரிகளுக்கு அவசரமாக தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது” என தெரிவித்தார்.

அர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் பலருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை டோஸ் மற்றும் சிலருக்கு 2 டோஸ் போட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில்தான் ஏற்கனவே பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஒற்றை டோஸ் தடுப்பூசியே நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக இவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தி கூடுதலாக உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.