அவுஸ்ரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி குறித்து தன்னிடம் ஆலோசித்தால் அதனை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு சேர்மனாக ரோட் மார்ஷ் இருந்தார். நீண்ட காலமாக இந்த பதவியில் இருந்த மார்ஷ் அடுத்த வருடம் மத்தியில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறினார்.
ஆனால் அவுஸ்ரேலியா சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக தொடரை 0-3 எனவும், தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை 0-2 எனவும் இழந்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்தது.
இதனால் கடந்த வாரம் ரோட் மார்ஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது பதவிக்கு ரிக்கி பாண்டிங் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘தேர்வுக்குழு தலைவருக்கான வாய்ப்பு என்னை தேடிவந்தால் அதுகுறித்து கட்டாயம் ஆலோசிப்பேன். அதேவேளையில் அணியோடு பயிற்சி நிலை குறித்தும் வெளிப்படையாக விவாதிப்பேன்’’ என்றார்.
இதன்மூலம் தேர்வுக்குழு தலைவர் போட்டிக்கு ரிக்கி பாண்டிங் தயாராகிவிட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக்கும் இந்த பதவியை குறிவைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் சமீபத்தில் நீக்கப்பட்டார். இவரது தலைமையில் 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.