அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன்.
1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை.அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான உச்சத்தை அடையும் வரையிலும் இசையமைப்பாளரை ஓய்ந்திருக்க விடமாட்டார்கள். இப்படித்தான் அந்த காலத்தில் உன்னதமான பாடல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் “நீங்கள் சொன்னது போல போதாது போதாது என்று கேட்பவர்கள் இப்பொழுது குறைவு.இப்பொழுது என்னிடம் இசையமைக்க வரும் பலரும் நான் எதை இசையமைத்துக் கொடுக்கிறேனோ அதைப் பெற்றுக் கொண்டு போகிறார்கள். நானும் வெற்றிலைச் செலவுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் உன்னதமான பாடல்களைக் கேட்டு வருபவர்கள் குறைவு “என்று.
இந்த உரையாடலின் போக்கில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வாள்வெட்டுச் சம்பவம் பற்றியும் கதை வந்தது. கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் உள்ள பாடல்களை உருவாக்கும் ஒரு ஸ்டூடியோ தாக்கப்பட்டுள்ளது.வாட்களை உருவியபடி தாங்கள் செய்வது ஒரு சாகசச் செயல் என்று கருதி ஒரு சிறு பகுதி இளையோர் தங்களுக்கென்று பாடல்களை உருவாக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அவர்களுடைய சாகச உணர்வுகளை நல்வழிப்படுத்தி தலைமை தாங்க எங்களுடைய அரசியல்வாதிகளால் முடியவில்லை என்று சுட்டிக்காட்டிய போது அவர் சொன்னார்…”நீங்கள் சொன்னதுபோல போதாது போதாது என்று கூறி உன்னதமான பாடல்களை கேட்கவும் ஆட்கள் இல்லை இந்த இளைஞர்களின் சாகச உணர்வுக்கு தலைமை தாங்கவும் ஆட்கள் இல்லை” என்று.
அண்மையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு மோதலில் ஒருவருடைய கை துண்டாடப்பட்டது.ஒரு குழுவுக்கு ஆதரவாக பாடலை உருவாக்கி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த ஒரு ஸ்டூடியோவே தாக்குதலின் இலக்கு என்று கூறப்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்திலும் சிறிதளவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் நடந்த இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரையிலும் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தாக்குதல்களின்போது காயங்களே ஏற்பட்டுள்ளன.ஆனால் சொத்துக்களுக்கு அதிகம் சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தாக்குதலாளிகளின் நோக்கம் கொலை அல்ல எதிராளியை மிரட்டுவதுதான் என்று தெரிகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓயவில்லை. குறிப்பாக அண்மையில் சமூக முடக்கம் நீக்கப்பட்ட பின்னர் மட்டும் சுமார் பத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.கோண்டாவில் சம்பவத்தின் பின் போலீசார் கைப்பற்றிய ஆயுதங்களில் சில தமிழ் பக்திப் படங்களில் வரும் கடவுளர்களும் அசுரர்களும் பயன்படுத்தும் புராதன காலத்து ஆயுதங்களை ஒத்தவை. நவீன மோட்டார் சைக்கிள்களின் டிஷ் பிரேக்கை எடுத்து அதிலிருந்து அவை வார்க்கப்படுவதாக ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள். மேலும் போலீசார் தரும் தகவல்களின்படி கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முப்பது வயதுக்குட்பட்டவர்கள்.தாங்கள் செய்வது ஒரு குற்றச்செயல் என்பதை உணராமல் அதை ஒரு சாகசச் செயலாகக் கருதி அதற்கென்று பாடலையும் உருவாக்குகிறார்கள். ஆயின் இதை எப்படி விளங்கிக் கொள்வது?
தாங்கள் செய்வது குற்றமா சாகசமா என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கு யார் அதை விளங்க படுத்துவது ?நிச்சயமாக அவர்களுடைய பெற்றோர்களால் அது முடியாது. ஏனென்றால் அவர்கள் செய்வதை தடுக்கும் சக்தி தாய் தகப்பனுக்கு இருந்திருந்தால் அவர்கள் இப்படி வாட்களை ஏந்திக்கொண்டு வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ அல்லது அவர்களுக்கு போதிக்கும் மதகுருக்களுக்கோ கிடையாது.அல்லது அவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்களில் கருத்தை உருவாக்கவல்ல சமூகத் தலைமைகள் அல்லது உள்ளூர் தலைமைகளாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள் பெற்றோர் மதகுருக்கள் உள்ளூர் தலைவர்கள் போன்றவர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வளர்ச்சிக்கு அவர்கள் போய்விட்டார்கள். அது ஒரு விகார வளர்ச்சி.மேல் சொன்ன யாருடைய செல்வாக்கின் கீழும் அவர்கள் இல்லை என்று தெரிகிறது.
அப்படியென்றால் அவர்களை சட்டத்தால் மட்டும் கையாள முடியுமா? இல்லை.கடந்த 12 ஆண்டுகளாக சட்டத்தால் அவர்களை பொருத்தமான விதங்களில் கையாளவோ அடக்கவோ முடியவில்லை என்பதைத்தான் பார்க்கிறோம்.இக்குற்றச்செயல்களில் பின்னணியில் அரசியல் நோக்கங்களைக் கொண்ட சக்திகள் இயங்குவதாக பொதுவாக ஒரு சந்தேகம் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் இளையவர்களை இலட்சியவாதத்தின் பக்கம் போகவிடாது தடுத்து திசைதிருப்பும் நோக்கத்தோடு இப்படிப்பட்ட குழுக்கள் ஊக்குவிக்கப் படுகின்றன அல்லது கண்டும் காணாமல் விடப்படுகின்றன என்று ஒரு பலமான சந்தேகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. போதைப்பொருள் பாவனையும் அப்படித்தான் பார்க்கப்படுகிறது.இக்குழுக்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை போதிய அளவுக்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனினும் கோண்டாவில். சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையும் அரச படைகளும் இணைந்து துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஊகங்கள்,வியாக்கியானங்கள் எப்படியுமிருக்கலாம்.ஆனால் எல்லாவிதமான வியாக்கியானங்களுக்கும் அப்பால் இது தமிழ்ச் சமூகத்தின் பாரதூரமான வீழ்ச்சியை காட்டுகிறது.கடந்த வாரம் யாழ்ப்பான பத்திரிகைகளில் அல்லது சமூக ஊடகங்களில் அதிகம் துருத்திக்கொண்டு தெரிந்த செய்திகள் இரண்டு. ஒரு செய்தி மேற்சொன்ன வாள்வெட்டுச் செய்தி. இரண்டாவது செய்தி அந்த சம்பவத்தில் வெட்டப்பட்ட கையை உடலோடு மறுபடியும் சேர்த்து தைத்த ஒரு மருத்துவ சாதனை பற்றிய செய்தி.இந்த இரண்டும் ஒரே சமூகத்தில்தான் இடம் பெற்றன. ஒருபுறம் வாளேந்திந்திய இளைஞர்கள்.இன்னொருபுறம் வெட்டிய கையை சேர்த்துத்தைத்த மருத்துவர்கள். ஒன்று குற்றச்செயல். மற்றது நற்செயல். இவை இரண்டினதும் சேர்க்கைதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்.
தன்னை ஒரு பண்பாட்டு தலைநகரம் என்று கூறிக்கொள்ளும் ஒரு குடாநாட்டின் அறிவு,விழுமியம், பண்பாட்டுச் செழிப்பு, தலைமைத்துவம் போன்ற எல்லாவற்றின் மீதும் கேள்விகளை எழுப்பும் ஒரு அகமுரண்பாடு இது.ஏனெனில் மேற்படி இளையோர் அவற்றை குற்றச் செயல்களாக கருதி செய்யவில்லை.அவர்கள் அதை இப்பொழுதும் சாகச உணர்வுடன்தான் முன்னெடுக்கிறார்கள்.அவர்களிடம் இருக்கும் அந்த சாகச உணர்வை நெறிப்படுத்தி அதனை இலட்சியங்களை நோக்கி திருப்ப சமூகத்தில் யாருமே இல்லையா ?
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரும் தொற்றுநோய் சூழலிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டார்கள். கறுப்பு துணியில் P2P என்று பொறிக்கப்பட்ட பட்டியைக் கட்டிக்கொண்டு சிவப்பு மஞ்சள் கொடிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தது ஒரு தொகுதி இளையவர்கள்தான். அந்த ஊர்வலங்களை பார்த்தும் ஒரு செயற்பாட்டாளர் கேட்டார். இதிலும் ஒரு சாகச உணர்வு தெரிகிறது. இந்த சாகச உணர்வை அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டுமென்று. இதே விளக்கம் வாளேந்திந்திய இளைஞர்களுக்கும் பொருந்தும். அதை நாங்கள் குற்றமாக பார்க்கப் போகிறோமா அல்லது வழிதவறிய சாகச உணர்வாக பார்க்கப் போகிறோமா?.
அவர்களுக்கு தலைமை தேவையாக இருக்கிறது.அவர்களை அரவணைத்து அவர்களுடைய இளம் இரத்தத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தலைமைதாங்கி அவர்களை இலட்சியப் பாங்கான வழிகளில் வழிநடத்த தலைவர்கள் இல்லை என்பதே இங்குள்ள பிரச்சினை.உண்மையிலேயே வாளேந்திய இளைஞர்களின் தோற்றம் என்பது தலைமைத்துவ வெற்றிடத்தில் இருந்துதான் வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான தலைமைகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் ஒரு சிறு தொகுதி இளையோர் இவ்வாறு வழிதவறிப் போகிறார்கள்.
கடந்த 12 ஆண்டுகளாக இவ்வாறு வழிதவறிய இளையோருக்கு தலைமை தாங்க தவறியதற்கு சமூகத்தின் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த இளையோர் எங்களுக்குப் புறத்தியானவர்கள் அல்ல. அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வேற்று நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்ளுடைய பிள்ளைகள்.எங்களுடைய வீடுகளில் எங்களுடைய பள்ளிக்கூடங்களில் எங்களுடைய சனசமூக நிலையங்களில் எங்களுடைய விளையாட்டு மைதானங்களில் எங்களுடைய சந்தைகளில் எங்களுடைய ஆலயங்களில் எங்களுக்கு மத்தியில் எங்களால் வளர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்றைக்கு வாள் எந்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கு நாங்கள் எல்லாருமே பொறுப்புதான். யாரோ அவர்களுக்கு வாளைக் கொடுக்கிறார்கள் கஞ்சாவை கொடுக்கிறார்கள் என்று சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக அந்த இளையோருக்கும் எங்களுக்கும் இடையிலான தொடர்பாடல் எங்கே அறுந்தது என்பதை முழுச் சமூகமும் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே யாரோ ஒரு வெளியாள் வாளை,கஞ்சாவை கொண்டுவர முடிகிறது என்றால் உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே ஏதோ ஒரு இடைவெளி இருக்கிறது என்றே பொருள்.உங்களுடைய பிள்ளை மோட்டார் சைக்கிளை முறுக்கிக்கொண்டு எங்கே போகிறான்? யாரை சந்திக்கிறான்? என்னென்ன செய்கிறான்? எப்பொழுது திரும்பி வருகிறான்? ஏன் பிந்தி வருகிறான்? அவனுடைய கைபேசியில் யார் யாருடைய இலக்கங்கள் உண்டு? கைபேசியில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது ? அவனுடைய கணினியில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது?யூ டியூப்பில் அவன் உருவாக்கி மகிழும் பாடல் எத்தகையது? அவனுடைய முகநூலில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது ?என்பது குறித்து எங்களில் எத்தனை பேர் நுணுக்கமாக பின்தொடர்கிறோம்?எங்களுக்கும் எங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே எங்கே எப்பொழுது இடைவெளி விழுந்தது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.இது எல்லாப் பெற்றோருக்குமான ஒரு பொறுப்பு. ஆசிரியர்களுக்குமான பொறுப்பு.உள்ளூர் தலைமைகளுக்கும் மதத் தலைவர்களுக்குமான பொறுப்பு. எல்லாவற்றையும்விட முக்கியமாக அரசியல் தலைவர்களுக்கான பொறுப்பு.
ரத்தத்துடிப்புள்ள இளையவர்களுக்குத் தலைமைதாங்க தகுதியுள்ள தலைவர்கள் யார் உண்டு ?எத்தனை கட்சிகளிடம் இளையோர் அமைப்புகள் உண்டு? குறைந்தபட்சம் பல்கலைக்கழகங்களில் மாணவ அமைப்புக்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் எத்தனை? இதுதான் பிரச்சினை. இளையோரின் வேகத்துக்கு தாக்குப் பிடித்து தலைமை தாங்க தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரால் முடியவில்லை என்பதுதான். இளையோரின் சாகச உணர்வுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுத்தால் அது ஆக்க சக்தியாக மாறும். அதற்கு ஒரு அரசியல் தரிசனம் வேண்டும்.
இளையோருக்கு மட்டுமல்ல முழுச்சமூகத்துக்குமே ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் சமூகமுடக்க காலத்தில் வழிகாட்டுவதற்கு எத்தனை தலைவர்கள் உண்டு ? கடந்த சில வாரங்களாக இதுபற்றி நான் அடிக்கடி எழுதி வருகிறேன். சமூகமுடக்கத்தின்போது பொது மக்களோடு சேர்ந்து முடங்கி கிடப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை.அல்லது பெருந்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை முழுக்க முழுக்க படையினரிடம் ஒப்படைத்து விட்டு வீடுகளில் முடங்கி கிடப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. மாறாக மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். தைரியம் ஊட்ட வேண்டும்.நோய் தொற்றுக்கு எதிராக உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களை பலப்படுத்த வேண்டும். வழிகாட்ட வேண்டும்.
ஒரு பகுதி அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் நிவாரணம் வழங்குகிறார்கள்.அதற்கும் தேவை உண்டு.ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளையும் தாயக மக்களையும் ஒருங்கிணைக்கும் முகவர்களாக செயற்பட்டால் மட்டும் போதாது.அதற்கும் அப்பால் மாற்றத்தின் முகவர்களாக நம்பிக்கையின் முன்னுதாரணங்களாக வாழும் முன் உதாரணங்களாக மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் ஒரு சமூகமுடக்க காலத்தில் சமூகத்துக்கு தைரியம் ஊட்டலாம்;வழிகாட்டலாம்.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எத்தனை கட்சித் தலைவர்களிடம் இது குறித்து ஆழமான தரிசனங்களும் அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கமும் உண்டு ?ஒரு சமூகமுடக்க காலத்தில் தனது சமூகத்திற்கு வழிகாட்ட முடியாத தலைவர்கள் எப்படி ரத்தத் துடிப்புமிக்க இளைஞர்களுக்கு வழி காட்டுவார்கள் ?இவ்வாறு வழி காட்டப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் தாம் செய்வது குற்றம் என்று தெரியாமலேயே ஒரு சிறு பகுதி இளையோர் வாளோடும் கஞ்சாவோடும் நிற்கிறார்கள்.அல்லது யாருடையதோ கைப்பாவைகளாக மாறியிருக்கிறார்கள்.இது தொடர்பில் ஆழமான சமூகப்பொருளாதார உளவியல் விளக்கங்களின்றி தமிழ் அரசியல்வாதிகள் வெட்டப்பட்ட கையையும் கையை உடலோடு சேர்த்துத் தைத்த மருத்துவரையும் இரு வேறு பரபரப்பான தலைப்புச் செய்திகளாகக் கடந்து போகிறார்களா?
நிலாந்தன்