சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா?

கடந்த சில நாட்களாக வடக்கில் சீன மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்கள் அகல கால் பதிப்பதாகவும் இது ஈழத்தமிழர் நலன்களுக்கும்  அதற்கு அப்பால் இந்திய இறையாண்மைக்கும் அச்சுறுதலை ஏற்படுத்தலாம் எனவும் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி உறுப்பினர் ஒருவர் மிகுந்த உசாராகப் பேசியிருந்தார். அத்துடன் இந்தியா தமது தொப்புள்கொடி உறவுகளாம், அதனால் இந்தியா பக்கமே தாங்கள் நிற்போம் இந்தியாவுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் விளாசித்தள்ளியிருந்தார்.

இவர்கள்   பேசிக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் (4.7.2021)பாக்கு நீரிணைக்கடலில் தொப்புள்கொடி உறவுகள் வட மராட்சி கிழக்கு மீனவர்களின் சுமார் எழுபத்தைந்துக்கும்  (75) மேற்பட்ட படுப்பு வலைகளை ரோலர் படகுகள் மூலம் வெட்டி நாசப்படுத்தி மீனவர்கள்  வயிற்றில் அடித்துச் சென்றுள்ளதாகவும் வடபகுதி வடமராட்சி மீனவர்சங்க உப_ தலைவர் ஒருவர் கவலை தெரிவித்திருந்தார்.தொப்புள்கொடி உறவுகளின் அத்துமீறிய அநியாயங்கள் பல வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றன.

இதற்கிடையில் இப்போது வடக்கில் சீனர்களின் பிரசன்னம் பல்வேறுவழிகளில் அதிகரித்திருப்பதாகவும்  முக்கியமாக ஏரிப்பகுதியில் கடலட்டைப் பண்ணைகள் சீன நிறுவனத்தால் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அத்தகைய இடங்களுக்கு தமிழர் கட்சி யினர்  நேரடியாகவே கள விஜயம் மேற்கொண்டு தமது எதிரப்பினைத் தெரித்திருந்தனர் இவையெல்லாம் மீனவர் நலன்களுக்கு பாதிப்பு எனவும் ஆகவே இவை கட்டுப்படுத்தப்படவேண்டுமெனவும் கோரிநிற்கின்றனர்.ஆயினும்முக்கியமாக வடபகுதி மீனவர்களின் பாதிப்பைவிட இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்தே அதிக அக்கறை கொள்வது போலப்படுகிறது. சீன நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிக கவலைப்படும் இவர்கள் இந்திய மீனவர்களால் பல ஆண்டுகளாக வகை தொகையின்றிச் சூறையாடிச்செல்லப்படும் எமது கடல் வளங்கள் குறித்து  கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பல வருடங்களாக வடபகுதி கடற்பரப்பை ஆக்கிரமித்து கடலைப் பாலைவனமாக்கி  வலைகளை வெட்டிஎறிந்து இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்துச்சென்றுகொண்டிருப்பது குறித்தும் இவர்கள்  பாராளுமன்றத்தில் இவ்வளவு ஆக்கிரோசமாகப் பேசியது கிடையாது.

கொக்கிளாய்,நாயாறு பறிபோனது குறித்தோ,வலி வடக்கு மைலிட்டித் துறைமுகம் பறிபோனது குறித்தோ இவர்களுக்கு கவலை கிடையாது.அவற்றை மீட்கும் பொறிமுறை இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவைகுறித்து பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல்கொடுக்க முடியாதவர்கள் ,ஈழத்தமிழர்களை இன்றைய இழிநிலைக்குத் தள்ளிய இந்தியாவின்  இறையாண்மைக்குச் சீனர்களால் ஆபத்து என இவர்கள் கூக்குரலிடுவது விந்தையானதும் வெட்கக் கேடுமானதுமாகும். (ஈழத்தமிழர்பால் அன்பு காட்டி வரும் தமிழ்நாட்டு தமிழ் தேதசிவாதிகள் இதற்கு விதிவிலக்கு)

வடபகுதிக் கரையோரங்களில் சீனர்களால் மேற்கொள்ளப்படும் கடல்அட்டைப்பண்ணைகளில் இதுவரையில் அரியாலை முனைப்பகுதியிலும், கெளதாரிமுனைப்பகுதியிலும் ஆக  இரண்டு பண்ணைகள் உள்ளதாகவே அறிய முடிகிறது. வேறு இடங்களில் பண்ணைகள் அமைத்துள்ளமை தொடர்பில் தகவல் இல்லை.  2017 களிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இவர்கள் பணிபுரியும் பண்ணைகளின் உரிமம் தொடர்பான தகவல்களும்  இதுவரையில் தெளிவில்லை.குறித்த அப்பண்ணைகள் அட்டைக் குஞ்சுகளை உற்பத்தி செய்கின்ற பண்ணைகள் எனவும் கூறப்படுகிறது.

ஏறத்தாழ, அனுமதி பெற்ற  முந்நூறு வரையிலான பண்ணைகள் உள்ளூர் மீனவர்களால் வடக்கு கடலோரங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. .யாழ் ஏரிப்பகுதி மற்றும் பூநகரியின் கெளதாரி முனையிலிருந்து மன்னார்  பள்ளிமுனை பகுதிவரை  கடலட்டை வளர்ப்பிற்கான சிறந்த சமுத்திரச்சூழலைக்கொண்ட பகுதிகளாகும்.இன்று வடபகுதியில் மீன் உற்பத்தியில் ஏற்பட்டுவருகின்ற வீழ்ச்சிப்போக்கு  நீரில்வளர்ப்பினை ஊக்குவிக்க குறிப்பாக கடலட்டை வளர்ப்பு  வாய்ப்பிற்கு  வழிகோலியுள்ளது என்றே கூறலாம்.ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச்செலாவணியை ஈட்டித்தருகின்ற ஓர்தொழில்முயற்சியாக இந்த அட்டைவளர்ப்பு விளங்குகின்றது.இச்சூழலில் சீனர்கள் இப்பகுதிகளுக்குள் நுழைவது உள்ளுர் மீனவர்கள்மத்தியில் கலக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் அவர்களது ஊடுருவல் கட்டுப்படுத்தப்படுவது மிக அவசியம். . ஆயினும்   தவிர்க்க முடியாத நிலையில் உள்ளூர் கடலட்டை உற்பத்தியாளர்களின் அபிவிருத்திக்கு முக்கியமாக குஞ்சுகள் கொள்வனவு,அட்டைகளைச்சந்தைப்படுதல் போன்ற செயற்பாடுகளுக்கு சீனர்களின் இப் பண்ணைகளைச் சாதகமான ஒன்றாக பயன்படுத்தமுடியுமா? என இப்பகுதி மீனவர்கள் சற்று யோசித்துப் பார்த்து முடிவுகளை  எடுப்பது நல்லது என்பது எமது கருத்து.

சீன  அச்சுறுத்தலை இப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற போதிலும் ஒப்பீட்டு ரீதியில் இதுவரையில் இந்திய இழுவைமடி மீனவர்களாலேயே  வடக்கு ஏரிக்கரை மீனவர்களுக்கு ஏற்பட்டு வரும்  எதிர்மறையான விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக  உள்ளது.   இதேவேளை இப்பகுதியின்  கரையோரப்பகுதிகள் பல படைத்தரப்பினர் வசம் உள்ளதையும் ஹம்பாந்தோட்டை,கொழும்புத்துறைமுகம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீன வசம் உள்ளதையும்  சீனத்துச் செல்லப்பிள்ளையாக நாடு உள்ளதையும்  மறந்து விடலாகாது.

புகழ்பெற்ற  அமெரிக்க  புவிசார் அரசியல் அறிஞர் அல்பிரட் தேயர் மாகனின்( Those who rule waves,rule the world)_ “அலையை ஆழ்பவன் உலகை ஆள்வான்” என்ற கூற்றையும் நினைவில் கொள்வது நல்லது.

இந்தப்பின்னணியில் இன்றைய சூழலில் சீன கடலட்டைப்பண்ணைகளா?  இந்திய இழுவைமடிகளா?  வடபகுதி மீனவர்களுக்கு அதிக ஆபத்தானது என்பதை சிந்தித்துச்  செயலாற்றுவது அவசியம். ஒருவர் பின்னால் இருந்து முதுகில் குத்தியவர் இன்னொருவர் சிரிக்க வைத்தே கழுத்தறுத்தவர்.இருவரும் ஆபத்தானவர்களே.

ஆகவே சீன மீனவர்களின் அத்துமீறலை வேரோடு பிடுங்கி எறியும் அதே வேளை இந்திய மீனவர்களின் அடாவடித்தனமான அத்துமீறல்களையும் தகர்த்தெறிவதும் அவசியம்.

சீனர்களால் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் எனில் அதனை  எதிர் கொள்வதும் விடுவதும் இந்தியாவின் பொறுப்பு.

கலாநிதி. சூசை ஆனந்தன்