இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மனப்போக்கு மாற்றம்

கடந்த வருடம் கொவிட் –19 பெருந்தொற்று நோய் பரவத்தொடங்கிய நேரத்தில் இருந்து இலங்கைக்கு முக்கியமானதும் காலப்பொருத்தமானதுமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதில் சீனா அதிமுன்னணியில் இருந்திருக்கிறது.கடனாகவும் நாணயபரிமாற்றமாகவும் சீனா இலங்கைக்கு 200 கோடிக்கும் அதிகமான டொலர்களை வழங்கியிருக்கிறது ;10 இலட்சத்துக்கும் அதிகமான சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாகவும்
சுமார் 60 இலட்சம் தடுப்பூசிகளை வேறு வழிகளிலும் இதுவரை காடுத்திருக்கிறது.ஆனால், கடந்த கால மற்றும் தொற்றுநோய்க் கால உதவிகளுக்கு மத்தியிலும், முன்னொருபோதும் இல்லாதவகையில் சீனா இலங்கையில் பொதுமக்களின் கூர்மையான அவதானிப்புக்குள்ளாகியிருக்கிறது.

இது மிகவும் முக்கியமானது.ஏனென்றால்,(சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர்க்காலம் மற்றும் அதற்கு பின்னரான ஒரு தசாப்தகாலம் வரை) இலங்கையின் சிங்கள தேசியவாத அரசியல் பரப்பில் ” ஏகாதிபத்திய ” மேற்குலகு மற்றும் தலையீடுசெய்யும் இந்தியா ஆகியவை மீதான எதிர்ப்பே நாட்டின் சிங்கள தெற்கில் ஆதிக்கம் செலுத்தும் விவாதப்பொருளாக இருந்திருக்கிறது.ஆனால், பொது விவாதங்களிலும் ஊடகங்களிலும் ( வேதாளம் அல்லது சீனக்கொடியுடனான கார்ட்டூன்கள் உட்பட) சீனா மீது வளரும் சந்தேகப்பார்வை ஒப்பீட்டளவில் புதிய ஒன்றாகும்.

சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரத்தை நிருவகிப்பதற்கான சர்ச்சைக்குரிய ஒரு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது மே மாதத்திலும் அண்மையில் பொது இடங்களிலும் அரசாங்க அலுவலகங்களிலும் இலங்கையின் ஒரு தேசியமொழியாக இருக்கும் தமிழைத் தவிர்த்து சீனமொழியை சேர்த்துக்கொண்டதனால் தோன்றிய சர்ச்சையின்போதும் சீனாவுக்கு எதிரான உணர்வு முன்னரங்கத்துக்கு வந்தது.துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய இலங்கையில் செல்வாக்குமிக்க பௌத்த குருமார் தங்களது நாடு ‘ சீனாவின் காலனியாக’ ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார்கள்.

ஆசியாவின் பிரமாண்டமான நாட்டுடனான தங்களது நாட்டின் உறவுமுறை குறித்த மனப்போக்கை இலங்கையர்கள் மாற்றுவதற்கு வழிவகுத்தது எது?

முன்னைய அரசாங்கத்தில் சீனாவுக்கான இலங்கையின் தூதுவராக பதவி வகித்த கருணாசேன கொடித்துவக்கு ராஜபக்ச நிருவாகத்தையே குற்றஞ்சாட்டுகிறார்.”நாடு அதன் ” அணிசேரா” வெளியுறவுக்கொள்கை மரபு குறித்து பெருமைப்படுகையல், துறைமுக நகரை இலங்கையர்கள் சீனக்காலனி என்று அழைப்பதை பார்க்கும்போது அது அந்த பிரமாண்டமான திட்டத்தைப் பற்றிய மிகவும் எதிர்மறையான கருத்தையே கொண்டுவருகிறது ” என்று கொடித்துவக்கு கூறினார்.

” துறைமுகநகரம் இலங்கைக்கு நல்ல ஒரு முதலீடாகும்.முன்னைய அரசாங்கமும் கூட நாட்டை பிராந்தியத்தின் ஒரு நிதியியல் மையமாக அபிவிருத்தி செய்வதற்காக துறைமுக நகரத் திட்டத்தை விரும்பியது.தற்போதைய நிருவாகம் ஒரு பக்குவமான முறையில் தேசிய கருத்தொருமிப்பை கட்டியெழுப்பி இந்த விவகாரத்தைக் கையாணடிருக்கவேண்டும்.அவர்கள் அதைச் செய்யத்தவறிவிட்டார்கள் என்று கொடித்துவக்கு ‘த இந்து’வுக்கு கூறினார்.” சகல உள்நாட்டு தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னர் சட்டங்களை நிறைவேற்றியிருக்கவேண்டும்.இலங்கையின் வரலாற்றை நீங்கள் நோக்குவீர்களேயானால்,முக்கியமான சகல சர்வதேச உடன்படிக்கைகளும் இணக்கப்பாடுகளும் இரு தரப்பு கருத்தொருமிப்பு காணப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன”.

இலங்கையின் பூகோள அமைவிடத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அது புராதன காலந்தொட்டே சீனா உட்பட கடலோர நாடுகளுடன் சினேகபூர்வமான உறவுகளையே பேணிவந்திருக்கிறது.அத்தகைய உறவுகள் எப்போதுமே ஒரு ” மூலோபாய உள்ளடக்கத்தை ” கொண்டிருந்திருக்கின்றன.சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை வெளி பங்காளி நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படாதிருப்பதை தவிர்ப்பதறகாக மிகவும் விழிப்புடன் செயற்பட்டிருக்கிறது.அதன் மூலமாக சகல நாடுகளுடனும் சொல்லிலும் செயலிலும் சமத்துவ நெருக்கமான உறவுகளை இலங்கை பேணியது என்று முன்னாள வெளியுறவுச் சயலாளர் பிரசாத் காரியவாசம் சுட்டிக்காட்டினார்.ஆனால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் இப்போது கூடுதலான அளவுக்கு நயநுட்ப வேற்றுமைகளை காண்டதாக மாறிவிட்டன என்றும் இரு தரப்பு உறவுகளில் தனித்துவமான, முன்னென்றும் இல்லாத பண்புகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.இரு அரசாங்கங்களின் மட்டத்திலும் விசேடமான கூட்டுப்பங்காண்மை காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

சீனா ஒரு பங்காளி நாடு என்ற நிலையில் இருந்து இப்போது ஒரு போட்டியாளராக நோக்கப்படுகின்ற மனப்பாங்கு மாற்றத்துக்கான சாத்தியம் குறித்து சுட்டிக்காட்டிய காரியவாசம் ” ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட 21 ஆம் நூற்றாண்டின் சீனா ஒரு அபிவிருத்தி உதவி பங்காளி மாத்திரமல்ல, இலங்கையின் வாணிபம், கைத்தொழில் மற்றும் மனித வள நலன்களுக்கும் ஒரு போட்டியாளராகவும் இருக்கிறது.சீனாவின் ஏனைய பல வெளிநாட்டு பங்காளர்கள் உறவுமுறையை மிகவும் சவால்மிக்கதாக்குகிறார்கள் போலத் தோன்றுகிறது. இதனால் குறிப்பாக பொதுமக்கள் மனங்களில் இலங்கை அரசின் ஜனநாயக இயல்பின் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பில் விசனங்கள் எழுகின்றன” என்று கூறினார்.

இந்த புதிய விசை இயக்கம் உள்நாட்டில் அரசியல் ரீதியில் விலை செலுத்தவேண்டிய நிலைவரத்தையும் தோற்றுவிக்கக்கூடும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான மனோ கணேசன் கூறினார்.தேசிய சொத்துக்களை ஏனைய நாடுகளுக்கு விற்கப்போவதில்லை என்று ராஜபக்சாக்கள் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் அவர்களை ஆதரித்த சிங்கள மக்கள் தாங்கள் கைவிடப்பட்டுவிட்டதாக உணருகிறார்கள். ‘ விற்பது’ என்ற பதம் சிக்கலானதாக இருக்கமுடியும்.ஆனால், நடைமுறையில் பார்க்கையில் சீன அரசுக்கு சொந்தமான கம்பனி ஒன்று நீண்டகாலத்துக்கு துறைமுக நகர் மீது கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கப்போகிறது.அதை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் சட்டமொன்றை நிறைவேற்றிக்கொடுத்திருக்கிறது என்றும் கணேசன் கூறினார்.

மேலும், இலங்கையின் பன்முக பின்புலத்துடன் சீனாவின் ஊடாட்டத்தை நோக்குகையில் நாட்டின் இனத்துவ மற்றும் மத பல்வகைமையை அது அலட்சியம் செய்வது போன்று தோன்றுகிறது என்றும் கணேசன் சுட்டிக்காட்டினார்.” தமிழர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க சீனர்கள் விரும்பினால், நாங்கள் வேறுபட்ட இன, மத குழுக்களை கொண்ட நாட்டவர் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாம் முற்றிலும் சிங்கள பௌத்த நாட்டவர் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேணடும் என்று கூறிய கணேசன் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்புக்கு பிறகு தாங்கள் விடுத்த அறிக்கையில் இதை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.” இலங்கையில் சீனாவின் பிரசன்னம் வெறுமனே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அக்கறையுடன் சம்பந்தப்பட்டதல்ல.தமிழர்கள் சீனைவை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.ஏனென்றால் எங்களை அவர்கள் இலங்கையர்கள் என்று ஏற்றுக்கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியாவின் புவிசார் அரசியல் அக்கறைகளை தமிழர்கள் பெரிதும் விளங்கிக்கொள்கிறார்கள்.நாம் தெற்காசியாவில் வாழ்கிறார்கள். அதை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இந்தியா எமது நெருங்கிய உறவினர், சீனா தூரத்து உறவினர்.அதனால் எமது தீவின் தென்பகுதியில் சீனா கொண்டிருக்கும் கடடுப்பாட்டைப் பற்ற நான் நினைக்கும்போது கியூபாவின் ஏவுகணை நெருக்கடியும் அதன் விளைவுகளும் எனது நினைவுக்கு வருகின்றன என்று கணேசன் .’ த இந்து’ வுக்கு கூறினார்.

இதே உணர்வுகளை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. எஸ்.சிறீதரன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் தீவுப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் சீனாவும் பாகிஸ்தானும் ஈடுபடுவதற்கு முயற்சிப்பது பற்றி குறிப்பிட்டார். ” இவ்வாறாக இந்தியாவை ஆத்திரமூட்டாதீர்கள்.நாம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் பரவாயில்லை.தமிழர்கள் எப்போதுமே இந்தியாவுடன்தான் நிற்போம்.அவர்களுடன் எமக்கு இயற்கையான இணைப்பு இருக்கிறது” என்று அவர் சொன்னார்.

மீரா ஸ்ரீனிவாசன்