ஆஸ்திரேலியாவை கரோனா டெல்டா வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அன்றாட தொற்று வேகமெடுத்து வருகிறது.
சிட்னி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அந்நாடு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, நியூசவுத் வேல்ஸ் மாகாணத் தலைவர் கிளாடிஸ் பெர்ஜிக்லியான் கூறும்போது, “டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவல்தன்மை அதிகம். ஆகையால் மக்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
சிட்னியில் ஏற்கெனவே ஜூன் 26 தொடங்கி தீவிர ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூலை 16ல் ஊரடங்கு முடியும் நிலையில் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசித் திட்டம் மந்த கதியில் நடப்பதாலும் கூட இது போன்று தொற்று பரவல் அபாயம் அதிகரித்து வருகிறது. இன்று முதல் சிட்னி முழுவதும் கூடுதல் பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாத மக்கள் அதிகம் பேர் உள்ளனர். மக்கள் கரோனா பரவலால் விரக்தியில் உள்ளனர். 3 வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் ஒன்றிரண்டு பேருக்கே டெல்டா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2021 தொடக்கத்திலிருந்து சிட்னியில் இவ்வளவு தொற்று பதிவானதே இல்லை என்பது கவனிக்கத்தக்கது” என்றார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 30,900 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது 910 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு தடுப்பூசித் திட்டம் மிகவும் மந்தகதியில் நடப்பதால் கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருந்த நாடு என்ற அடையாளத்தை ஆஸ்திரேலியா இழக்கவுள்ளது.