ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேர், அவருக்காக இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக, கடந்த வாரம் கூறப்பட்டது. கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், மர்ஜான் பலீல், ஜயந்த கெட்டகொட, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே அந்த நால்வருமாவர். நேற்று (06) காலை, ஜயந்த கெட்டகொட இராஜினாமாச் செய்து, பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வழிவிட்டுக் கொடுத்துள்ளார்.
எவர், தாமாகப் பதவி விலகினாலும் நாட்டைக் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக, தமது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே, இராஜினாமாச் செய்வார் என்பதே உண்மையாகும். ஏனெனில், தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்ஷர்கள் நினைத்தால், நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரதான பிரச்சினைகளைத் தீர்ப்பதைத் தவிர, எதையும் செய்யலாம். எனவே, அவர்களுக்கு உதவி செய்வதானது, தமக்கே உதவி செய்து கொள்வதாகும்.
அதேவேளை, சமூக வலைத்தளங்களில் மற்றொரு கதையும் பரவியிருந்தது. தாம் பிரஜாவுரிமை பெற்றிருக்கும் அமெரிக்காவில், சுமார் இரண்டு மாதங்களாகத் தங்கியிருந்து, சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த பசில், தமக்கு பாராளுமன்றத்தில் இடம் கொடுத்துவிட்டு, இராஜினாமாச் செய்யுமாறு மர்ஜான் பலீலுக்கு அறிவித்ததாகவும், பலீல் அதைத் தம்மை பாராளுமன்றத்துக்கு பரிந்துரை செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியதாகவும், அப்போது மஹிந்த, “நீங்கள் இராஜினாமாச் செய்ய வேண்டாம்” என அவரிடம் கூறியதாவும் செய்திகளில் கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே, ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
இதற்கு முன்னர், 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பிரான அன்வர் இஸ்மாயீலின் மறைவை அடுத்து, அவரது இடத்துக்கு பசில் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் காங்கிரஸூம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கூட்டாக 2004 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதால், பசில் இந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது. பின்னர் அவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வென்றார்.
இதையடுத்து, அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகக் கடமையாற்றினார். அக்காலத்தில், வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியில், 60 சதவீதத்துக்கும் மேலான நிதி, ராஜபக்ஷர்களின் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இம்முறையும் அவர், நிதி அமைச்சை அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்பார் என்றே கூறப்படுகிறது.
பசிலின் பாராளுமன்றப் பிரவேசம், அவர் அமெரிக்காவில் இருக்கும் போதே பேசுபொருளாகியது. ஆளும் கட்சியில், அவருக்கு மிக நெருங்கியவர்கள் தெரிவித்த கருத்துகளே இதற்குக் காரணமாகும். பசிலுக்கும் ஆளும் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாகவே, அவர்கள் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.
குறிப்பாக, பசிலுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் இடையில், நீண்ட காலமாகவே முறுகல் நிலை காணப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த போது, பசில், முழு அரசாங்கத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமையால், மக்கள் அதைக் குடும்ப ஆதிக்கமாகக் கருதியதாகவும் அதுவே, மஹிந்தவின் தோல்விக்குக் காரணமாகியது என்றும் அவர் கூறினார்.
2015 ஆம் ஆண்டு, விமல் ஆரம்பித்த ‘மஹிந்தவுடன் எழுவோம்’ என்ற தொனிப்பொருளிலான அரசியல் எழுச்சிக் கோஷத்தோடு, மஹிந்த அணி மீண்டும் தலைதூக்கியது. பசில், தமக்கே உரித்தான கட்டமைக்கும் திறனைப் பயன்படுத்தி, அந்த எழுச்சியை ஓர் அரசியல் கட்சியாக உருமாற்றி, 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்தார். இவ்வாறு இணைந்து செயற்பட்டாலும், அவர்களுக்கு இடையிலான பனிப்போர் முடிவடையவில்லை. அது, கடந்த காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான், பசில் அமெரிக்காவில் இருக்கும் போது, எரிபொருள் விலையை அரசாங்கம் உயர்த்தியது. ஆளும் கட்சியில், பசில் அணியைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், பசிலுக்கு எதிரான அணியைச் சேர்ந்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் விலையை உயர்த்தியமைக்காக, அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றார். பசில் நாட்டில் இருந்தால், விலை உயர்வு இடம்பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார். பசில் அணியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸாவும், பசிலைப் பற்றி அதே கருத்தைத் தெரிவித்தார்.
இது, ராஜபக்ஷ குடும்பத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. ஏனெனில், உத்தியோகபூர்வ அதிகாரம் இல்லாமலே, எரிபொருள் விலையை விமல் குறைப்பார் என்று கூறுவது, அதிகாரத்தோடு இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திறமையற்றவர்கள் என்று கூறுவதைப் போலானதாகும். எனவே, அவ்வாறு கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என, பசில், தமது அணியினருக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உண்மையிலேயே, பசில் அமைச்சராகப் பதவியேற்றால், நாட்டில் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பார் என்றதோர் எண்ணம், பொதுஜன பெரமுனவினரில் பலரிடம் இருப்பதாகத் தெரிகிறது. இது சில மாதங்களில் அவர்களையே அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் கருத்தாகும்.
ஏற்கெனவே அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்று இருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர், “கோட்டாபய, ஜனாதிபதியானால் சகல பிரச்சினைகளும் தீரும்” என அவர்கள் கூறினர். 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடித்து வைத்தவர், எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பார் என்பதே, அவர்களின் வாதமாகியது
கோட்டாபய ஜனாபதி பதவிக்கு வந்ததன் பின்னர், அவர்களது வாதம் மாறியது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரம் இல்லாமல், அவரால் எதுவும் செய்ய முடியாது என்றனர். பொதுத் தேர்தல் நெருங்கும் போது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாமல், பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றனர். அதுவும் கிடைத்ததன் பின்னர், ஜனாதிபதிக்கு பூரண நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று வாதிட்டனர். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், அந்த அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன. இப்போது, பசில் வந்தால் தான், பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று வாதிடுகின்றனர்.
பொதுவாக, பசிலும் கடந்த காலங்களில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அவர் பாராளுமன்றத்தில் இல்லாதிருந்தாலும் அமைச்சராக இல்லாதிருந்தாலும் ‘பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி’யின் தலைவராக, கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகக் கடமையாற்றி வருகிறார். அவருக்கு, இந்தச் செயலணிக்கு ஊடாகச் சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய பிரச்சினைகள் விடயத்தில் அவரால் புதிதாக எதையும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
கொவிட்- 19 நோய் பரவல் காரணமாக, புதிதாக உருவாகியிருக்கும் நிலைமை, சகல நாடுகளையும் பாதித்துள்ளது. அதன் காரணமாக, இலங்கையும் வெளிநாட்டு செலாவணிப் பற்றிய பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலமும் ஆடை ஏற்றுமதி மூலமும் உல்லாசப் பிரயாணத்துறை மூலமும் பெற்று வந்த, வெளிநாட்டு செலாவணியை நாடு பெருமளவில் இழந்துள்ளது. நோய் கட்டுப்பாடுப் பணிகள், பாதுகாப்புப் பணிகள், தடுப்பூசி, நிவாரனம் எனப் பல புதிய செலவுகளும் உருவாகி இருக்கின்றன. பசில் மேற்படி செயலணியின் தலைவராக இருக்கும் போதும் இவை இருந்தன.
பசில் பாராளுமன்றத்துக்கு வருவதன் உண்மையான நோக்கம், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று கூற முடியாது. ஆளும் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே, அவரது வருகையின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அக்கட்சிகள், தமது சக்தியின் அளவைச் சரியாக மதிப்பீடு செய்யாது, கடந்த சில மாதங்களாக பசிலுக்குச் சவால் விடுத்தன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு வரக் கூடாது என்று, கடந்த காலத்தில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் நோக்கமும் பசிலை பாராளுமன்றத்துக்கு வராது தடுப்பதேயாகும்.
ஆனால், பசில் நிதி அமைச்சராகவோ அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களைக் கொண்ட அமைச்சொன்றுக்குப் பொறுப்பாகவோ நியமிக்கப்பட்டால், அச் சிறு கட்சிகள் அவரிடம் மண்டியிட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதுவே, பசிலின் வருகையின் நோக்கமாக இருக்கலாம்.
எம்.எஸ்.எம். ஐயூப்