Home / செய்திமுரசு / நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி

நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் தென்ஆப்பிரிக்க கப்டன் பிளிஸ்சிஸ் அபராதத்தோடு தப்பினார்.

பிளிஸ்சிஸ் மீது புகார்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் ஹோபர்ட்டில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நாளை (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இது பகல்–இரவாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டியாகும். முதல் முறையாக பகல்–இரவு டெஸ்டில், இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாட உள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இதற்கிடையே தென்ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் மீது பந்தை சேதப்படுத்திய சர்ச்சை கிளம்பியது. ‘ஹோபர்ட் டெஸ்டின் 4–வது நாள் ஆட்டத்தின் போது அவர் பந்தை எச்சில் தடவி தேய்த்த போது அதில் ஒரு செயற்கை பொருளின் சேர்க்கையும் (வாயில் மென்று கொண்டிருந்த சுவிங்கம் போன்ற ஒரு வகை இனிப்பு) இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது பந்தின் தன்மையை வேண்டுமென்றே மாற்றும் செயல்’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றம் சாட்டியது. ஆனால் இது அபத்தமான குற்றச்சாட்டு, நான் ஒரு போதும் பந்தை சேதப்படுத்தவில்லை என்று பிளிஸ்சிஸ் திட்டவட்டமாக மறுத்தார்.

அபராதம் விதிப்பு

இந்த நிலையில் இது குறித்து அடிலெய்டில் நேற்று போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் விசாரணை நடத்தினார். விசாரணையில், பிளிஸ்சிஸ் மற்றும் அவரது சார்பில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சட்ட குழுவினர் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நீடித்த விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளையும் போட்டு பார்த்தார். இறுதியில் பிளிஸ்சிஸ் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்த முயற்சித்தது நிரூபனம் ஆனது.

இதையடுத்து அவருக்கு ஹோபர்ட் டெஸ்ட் போட்டிக்கான கட்டணம் முழுவதும் (100 சதவீதம்) அபராதமாக விதிக்கப்பட்டது. வழக்கமாக இது போன்ற புகார்களில் சிக்குவோருக்கு தடை விதிப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்டு. அதிர்ஷ்டவசமாக அவர் தடையில் இருந்து தப்பி பிழைத்தார். இதனால் நாளை தொடங்கும் பகல்–இரவு டெஸ்டில் விளையாடுவதில் நிலவிய சிக்கல் தீர்ந்தது.

இனி தடை தான்

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடுவர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு (அபராதம்) எடுக்கப்பட்டுள்ளது. களத்தில் அவரது செயலை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக நடுவர்கள் தெரிவித்தனர். மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) தலைவர் ஸ்டீபன்சனும் வீடியோ காட்சியை ஆராய்ந்து, பந்தில் செயற்கையான பொருள் இருந்ததை உறுதிப்படுத்தினார்.

நடத்தை விதியை மீறிய பிளிஸ்சிஸ்சுக்கு அபராத்துடன் 3 ஒழுங்கீன புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுக்குள் அவர் இது போன்ற பிரச்சினையில் சிக்கி மேலும் ஒரு ஒழுங்கீன புள்ளியை பெற்றால் அது இரண்டு ‘சஸ்பென்ட்’ புள்ளியாக கணக்கிடப்பட்டு தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை

இரண்டு சஸ்பென்ட் புள்ளி என்பது ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒரு நாள் போட்டி அல்லது இரண்டு 20 ஓவர் போட்டிகளுக்கு தடை விதிக்கப்படுவதற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் நகல் கிடைத்த அடுத்த 48 மணிநேரத்திற்குள் அவர் அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.

32 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் பந்தை சேத்தும் வம்பில் மாட்டிக்கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2013–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் போது பந்தை சேதப்படுத்தியதாக அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

About குமரன்

Check Also

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான காவல் துறை  அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை  தலைமையகம் ...