இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருகின்றதா என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபச்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயல் வல்லமையற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அறுபத் தொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, தன்னிகரற்ற தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சி முறைமை பல துறைகளிலும் பலவீனமாகி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவதானிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர்.
தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி, சுபீட்சம் மிகுந்ததாக நாட்டைக் கொண்டு நடத்துவதாக உறுதியளித்த ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, தனது தேர்தல் வாக்குறுதிகளைச் சரியான முறையில் நிறைவேற்றவில்லை என ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவருக்காக அமோகமாக வாக்களித்த சிங்கள பௌத்த மக்களே அதிருப்தி அடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதாக சிங்கள பௌத்த மக்களின் நன்மதிப்பையும், அரசியல் ரீதியான பேராதரவையும் பெற்ற ராஜபக்சக்கள், பலமுள்ளதோர் அரசாங்கத்தைக் கொண்டிருந்த போதிலும், நல்லாட்சி புரிய முடியாத நிலைமைக்கே ஆளாகி இருக்கின்றனர்.
சிங்கள பௌத்த தேசியத்தை மேம்படுத்தி, யுத்தத்தில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்த இராணுவத்தினரைப் போற்றிப் பேணுகின்ற ராஜபக்சக்களின் அரசியல் உத்தி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து உள்ளதையே நாட்டின் ஆட்சி நிலைமைகள் காட்டுகின்றன.
சிங்கள பௌத்த தேசிய முனைப்பின் மூலம் சிறுபான்மை இன, மதத்தினருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் சிங்கள பௌத்த மக்களுக்கு உவப்பளித்திருந்த போதிலும், குறுகிய காலத்திலேயே அந்த அரசியல் கவர்ச்சி செயலற்றுப் போயுள்ளது. யுத்த வெற்றியைப் பெற்றுத் தந்த இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலில் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீதிமன்றத்தில் நிறுத்துவதில்லை என்ற பிடிவாத அரசியல் போக்கும் செல்வாக்கு இழந்திருப்பதைக் காண முடிகின்றது.
நாட்டில் சுமார் ஏழு தசாப்தங்களாகப் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டிருந்தது. ஆனால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறையில் நெறி பிறழ்ந்து, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் நசுக்கி அழிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னரும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு யுத்தத்தில் வெற்றி பெற்ற ராஜபக்சக்கள் முனையவில்லை. ராஜபக்சக்கள் மட்டுமல்லாது, தமிழ் மக்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முழு ஒத்துழைப்புடன் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய மைத்திரி – ரணில் கூட்டாட்சியினரும் கூட, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இதயசுத்தியுடன் ஆக்க பூர்வமாக முற்படவில்லை.
இரண்டாவது தடவையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராஜபக்சக்கள் நாட்டின் சிறுபான்மை இன மக்களை வெளிப் படையாகவே ஓரங்கட்டி, சிங்கள பௌத்த தேசியத்தை முழு அளவில் நாட்டில் நிலை கொள்ளச் செய்வதற்கான பாகுபாடான அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்திருக்கின்றனர்.
யுத்த வெற்றிக்குத் துணை புரிந்த இராணுவத்தினரை ஆட்சி அதிகாரத்திலும், சிவில் நிர்வாகச் செயற்பாடுகளிலும் முதன்மைப் படுத்தி, இராணுவப் போக்கிலான ஆட்சி முறையையே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னெடுத்திருக்கின்றார். அவருடைய இந்த இராணுவ – சர்வாதிகாரப் போக்கானது, சிறுபான்மை இன மக்களை மட்டு மல்லாமல் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களையும் ஜனநாயகப் பற்றாளர்களையும் கூட ஓரங் கட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த உடன் தனது நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அரசவையில் தந்திரோபாயத்துடன் நிறைவேற்றியது முதல், மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தது வரையிலான விட்டேத்தியான நடவடிக்கைகள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
போர்க்குற்றச் சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இராணுவத் தளபதிகளை சிவில் நிர்வாக பொறுப்புகளுக்கு தலைமை அதிகாரிகளாக நியமித்து, நாட்டை இராணுவ மயமாக்கிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. ஆயினும் அந்த எதிர்ப்புகள் மந்த நிலையிலேயே காணப்பட்டன. ஆயினும், கொலைக் குற்றவாளியான துமிந்த சில்வாவை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்த, ஜனாதிபதியின் நடவடிக்கை பகிரங்க எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளது.
இதற்கு முன்னதாக கொலைக் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்காவை 2020 ஆம் ஆண்டு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தமையும் பலத்த கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் கிளப்பி இருந்தது. யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தை மற்றும் பதின்பராய சிறுவர்கள் உள்ளிட்ட 8 அப்பாவிகளான தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்திற்காக சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இருவருடைய வழக்குகளும் மரண தண்டனைத் தீர்ப்பையடுத்து மேன்முறையீடு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தினால் அந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இத்தகைய பின்னணியிலேயே ஜனாதிபதி கோத்தாபாய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி தனது அதிகார எல்லைகளைக் கடந்து செயற்பட்டிருக்கின்றார் என்று சட்ட வல்லுநர்களும், அரசியலமைப்புச் சட்டவாளர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு மரண தண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்வதற்குரிய வல்லமை அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை மறுப்பதற்கில்லை. ஆனால், அவ்வாறு விடுதலை செய்வதற்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இது குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் இந்த நடைமுறைகளை ஜனாதிபதி பின்பற்றவில்லை. தன்னிச்சையான போக்கில் அவர் நடந்து கொண்டிருந்தார். இதனைச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவிடம் கடிதம் மூலமாக குறிப்பாக துமிந்த சில்வாவுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட விடயத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என வியுள்ளனர்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடை முறைகளைப் பின்பற்றித் தான் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டார் என்றால், அது பற்றிய விபரங்களை வெளியிடு மாறும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் தமது கடிதத்தில் கோரியிருக்கின்றனர்.
இந்தப் பொது மன்னிப்பு விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை மட்டு மல்லாமல், நாட்டின் நீதிமன்ற பொறி முறைகள், நீதித் துறை சட்ட விதிகளும் அப்பட்டமாக மீறப் பட்டிருக்கின்றன என்று சட்டத்தரணிகள் சங்கத்தினரும், ஏனைய சட்டத் துறை வல்லுநர்களும், பொது அமைப்புகளும் குற்றம் சாட்டியிருக்கின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் சட்டவாட்சி முறைமை மீறப் பட்டிருக்கின்றது என ஜனநாயக வாதிகள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அதேவேளை, ஜனாதிபதியின் இத்தகைய எதேச் சதிகாரப் போக்கானது, நாட்டின் எதிர்கால நிலைமைகளைக் கேள்விக் குறிக்கு உள்ளாக்கி யிருக்கின்றது என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டி ருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் மருத்துவத் துறையினரதும், சுகாதாரத் துறையினரதும் கருத்துக்கள் பெறப்படாமல், இராணுவத் தளபதியின் தலைமையிலான செயற் குழுவின் வழி நடத்தலில் கோவிட் பெருந் தொற்றினைக் கையாளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டிருப்பது குறித்த கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.
கோவிட் 19 இன் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்று நிலைமையை எதிர் கொள்வதற்கான சரியான திட்ட வரையறைகளின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாக வைத்திய நிபுணர்களும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தினரும் கூட்டிக் காட்டி உள்ளனர். இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி இலங்கையிலும் தொற்றிப் பரவியுள்ள டெல்டா வைரஸ் சமூகத் தொற்றாக உருவெடுக்கும் ஆபத்து எதிர்நோக்கப் பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
கோவிட் 19 இலும் பார்க்க வீரியமும் தீவிர தொற்றுத் தன்மையையும் கொண்ட, பேராபத்துடைய டெல்டா வைரஸைக் கையாள்வதற்கும், கட்டுப் படுத்துவதற்கும் விசேட திட்டங்கள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் அத்தகைய முன்னாயத்தங்கள் எதுவும் அற்ற நிலையிலேயே நிலைமைகள் காணப்படுவதாகவும் அவர்கள் இடித்துரைத் திருக்கின்றனர்.
இதற்கும் அப்பால், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், அதனை சாதுரியமான முறையில் மேற்கத்தைய நாடுகளின் ஆதரவுடன் கையாள்வதற்கு அரசும் ஜனாதிபதியும் தவறியிருக்கின்றனர் என எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர். அரசாங்கம் மாதாந்தம் பெருந் தொகை நிதியை கடன்களை அடைப்பதற்காக மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில் அந்த நிதியைத் திரட்டிக் கொள்ள வழியின்றி தடுமாறுவதாகவும் எதிர்க் கட்சியினர் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.
எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு வரையில் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைக் கடனாகச் செலுத்தியே ஆக வேண்டிய நிலையிலேயே நாட்டின் பொருளாதார நிலைமை இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விபரம் வெளியிட்டிருக்கின்றார். யார் ஆட்சியில் இருந்தாலும், இந்தக் கடனைச் செலுத்தியே ஆக வேண்டும் என்றும், இன்னும் ஒருவார காலத்தில் இந்தக் கடன் தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாய நெருக்கடி நிலையில் நாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாமல் பொருளாதார நிலையில் இப்போதே வீழ்ச்சி கண்ட நாடாக இலங்கை மாறியிருப்பதாக அரசாங்க அமைச்சராகிய அவரே கூறியுள்ளார்.
கடன் சுமை காரணமாக அந்நிய செலவாணி நிலைமை மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றது. இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிரான பெறுமதியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 202 ரூபா என்ற அளவில் மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதே வேளை, அரசாங்கத்தின் வரி வருமானம் குறைந்துள்ளமை, கொரோனா பெருந் தொற்றினால் எற்பட்டுள்ள வர்த்தகப் பொருளாதார முடக்க நிலைமை, அரச செலவினங்களின் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் இதனை ஈடு செய்வதற்கு வகை தொகையின்றியும் பொருளாதார வர்த்தக நடை முறைகளை மீறிய வகையிலும் 22 கோடி ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இவ்வாறு பெருந்தொகைப்பணம் பொருளாதார விகிதாசார முறைமையை மீறிய முறையில் அச்சடிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து உடனடியாகவே தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபா அளவில் உயர்ந்துள்ளதாக தங்க நகை வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
உள்ளுர் நிலைமைகள் மட்டுமல்லாமல், பொறுப்புக் கூறல் விடயத்தில் மோசமான நிலைமைகளை சர்வதேச அரங்கில் இலங்கை எதிர் கொண்டிருக்கின்றது. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போல ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இலங்கைக்கான ஜி பி எஸ் வரிச்சலுகையை நிறுத்துவது தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் அமைந்திருக்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதுவும் இலங்கையின் பொருளாதாரத்தை மிக மோசமாக அச்சுறுத்தி இருக்கின்றது.
அதேவேளை, ராஜபக்சக்களின் சீனசார்பு வெளியுறவுக் கொள்கை நிலைமையும் நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமைகளைச் சர்வதேச அரங்கில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
இத்தகைய பல்வேறு நிலைமைகள் காரணமாகவே இலங்கை ஒரு தோல்வி அடைந்த நாடாக மாறி வருகின்றதா, அல்லது தோல்வி அடைந்த நாடாக மாறிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.
பி.மாணிக்கவாசகம்