நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 5 பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுகிறது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுவதாக Premier Gladys Berejiklian அறிவித்தார்.
அங்கு கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 27 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour ஆகிய பகுதிகளில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை 16 ஜுலை இரவு 11.59 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை, கல்வி(வீட்டிலிருந்து வேலைசெய்ய அல்லது கல்விகற்க முடியாதபட்சத்தில் மாத்திரம்) பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
இதேவேளை புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் SummitCare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் பணிபுரிபவர் என குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக குறித்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பணியாளர்களுக்கும் ஆறு முதியோர்களுக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதேநேரம் குறித்த 27 பேரில் 18 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஒன்பது பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 45,000 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.