சிறுவர்களிடம் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி பரிசோதனை- ரஷியாவில் தொடங்கியது

ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றியடைந்தால், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே பரிசோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களையும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

இதற்காக பல தடுப்பூசிகள் பிரத்யேகமாக சிறாருக்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் பைசர் போன்ற தடுப்பூசிகள் ஏற்கனவே சிறார்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

இந்த வரிசையில் உலக அளவில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியான ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கி உள்ளன. இந்த பரிசோதனைகளை ரஷியா தொடங்கி இருக்கிறது.

இதற்காக 12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயது கொண்ட 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் நேற்று கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடங்கி இருக்கின்றன.

இந்த பரிசோதனைகளை முடித்தவுடன், அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும். அதன்பின் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு முடிவுகளை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

இந்த பரிசோதனைகள் வெற்றியடைந்தால், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இந்தியாவுக்கும் இது சிறப்பான நடவடிக்கையாக அமையும். ஏனெனில் இந்தியாவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்வதுடன், உள்நாட்டிலேயே தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.